ட்விட்டர் பயனர் ஒருவர், பிரக்ஞானந்தாவிற்கு தார் (Thar) காரை பரிசு அளிக்க வேண்டும் என்று கூறி பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்திருந்தார்.

உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்திய செஸ் விளையாட்டின் முகமாகவே மாறியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

இறுதிப்போட்டியில் கடைசி வரை போராடி, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வியடைந்திருந்தாலும் வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்திருக்கிறார்.

பலரும் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கிரிஷ்லே என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், பிரக்ஞானந்தாவிற்கு தார்(Thar) காரை பரிசு அளிக்க வேண்டும் என்று கூறி பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (XUV4OO EV)காரை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்குப் பரிசாக வழங்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த காரின் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 19 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஆனந்த் மஹிந்திரா, “உங்களைப் போன்ற பலரும் பிரக்ஞானந்தாவுக்கு தார் (Thar) காரை பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் என்னிடம் வேறு யோசனை இருக்கிறது. வீடியோ கேம்களின் மீது அதிக மோகம் கொண்டுள்ள போதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன்.

இது எலக்ட்ரிக் கார்களை போலவே நம் பூமிக்கும் எதிர்காலத்திற்கும் ஒரு சிறந்த முதலீடு. எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யூவி400 இவி (XUV4OO EV) காரை பரிசளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ் பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்து அயராத ஆதரவை வழங்கியதற்கு நன்றி என தெரிவித்திருக்கிறார்.

 

Share.
Leave A Reply