குருந்தூர்மலை விவகாரம் இப்போது, தேசிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பான சர்ச்சைகள் அரசியல் அரங்கில் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், குருந்தூர்மலை பிரச்சினை பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால், அது பாரிய மத மோதல்களாக வெடிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள்.
இன்னும் சிலர் இதுபற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தான், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்று தைப்பொங்கல் விழாவில் அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி, மகாநாயக்கர்களின் எதிர்ப்பை அடுத்து. அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அமைதியானார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது தான், நாட்டின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்திக்கு ஏற்றவகையில் 13ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்கும் விடயத்திலேயே தெளிவான- தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க முடியாத- நடைமுறைப்படுத்த முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குருந்தூர்மலைப் பிரச்சினையை தீர்க்குமாறு கோருவது கொஞ்சம் மிகையான எதிர்பார்ப்பு என்றே குறிப்பிட வேண்டும்.
குருந்தூர்மலை விவகாரம் இப்போது, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டது, நகர்த்தப்பட்டு விட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எவ்வாறு 13ஆவது திருத்தச் சட்டம், முள்ளில் விழுந்த சேலை என்று குறிப்பிட்டாரோ, குருந்தூர்மலை விவகாரமும் அவ்வாறு தான் இருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கத்தை ஒரு ஜனாதிபதியாக நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு, சத்தமின்றி சாதித்திருக்கலாம்.ஆனால் அவர், அதனை சந்திக்குக் கொண்டு வந்து, தெருவில் நிறுத்தி விட்டு அதனை எங்கு கொண்டு செல்வது என்று தெரியாமல் இருக்கிறார்.
13 விவகாரத்தை முன்நோக்கி கொண்டு சென்றாலும் சிக்கல், பின்வாங்கினாலும் சிக்கல். அதே நிலை தான் இப்போது, குருந்தூர்மலை விவகாரத்திலும் தோன்றியிருக்கிறது. குருந்தூர்மலையில் ஆதிசிவன் ஐயனார் வழிபாடு இருந்து வந்த நிலையில், அங்கிருந்து சூலத்தைப் பிடுங்கி விட்டு, தொல்பொருள் இடமாக அறிவித்து அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் அதற்குள் குருந்து விகாரை புதைந்து கிடப்பதாக அறிவித்து, அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இப்போதும் அங்கு ஆதிசிவன் ஐயனார் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், அங்கு விகாரை அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கிருந்து, விகாரையை அகற்றவும் முடியாது, வழிபாடுகளைத் தடுக்கவும் முடியாது. ஏனென்றால், அது ஒரு புராதன விகாரை என்று பௌத்தர்களுக்கு கூறப்பட்டிருக்கிறது. அதேவேளை, ஆதிசிவன் ஐயனார் வழிபாடுகளையும் தடுக்க முடியாது. அது சைவமக்களால் இப்போது வரையில் முன்னெடுக்கப்படும் நடைமுறை வழிபாடாக இருக்கிறது.
ஆக, குருந்தூர்மலையை இப்போது பௌத்தர்களாலும் விட்டுக் கொடுக்க முடியாது, சைவர்களாலும் விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைக்கு மூலாதாரமாக இருந்தது தொல்பொருள் திணைக்களம் தான்.
தொல்பொருள் திணைக்களம், அனுராதபுரத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் புராதன விகாரைகளை ஆய்வு செய்வதிலோ, அவற்றின் இருப்பிடத்தை கண்டறிவதிலோ அதிக அக்கறை செலுத்துவதில்லை.
வடக்கிலும், கிழக்கிலும் இல்லாத விகாரைகளையும் தேடிக் கொண்டிருக்கிறது தொல்பொருள் திணைக்களம்.
குருந்தூர்மலையை தொல்பொருள் இடமாக அறிவித்து விட்டு, அதனை முழுமையாக ஆய்வு செய்ய முன்னரே, விகாரைகளை அமைப்பதற்கு அனுமதி அளித்தது. அரச படைகள் தான் குருந்துமலையை விகாரையை புனரமைத்ததாக அங்கு நிறுவப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது.
தொல்பொருள் திணைக்களம் பெரும்பாலும் பௌத்த பிக்குகளால் நிரம்பிய ஒன்று. அதன் சின்னத்திலும் கூட பொதுமைத் தன்மை இல்லை. பௌத்த விகாரையின் தாதுகோபம் தான் இருக்கிறது. இதனை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒருமுறை சுட்டிக்காட்டியிருந்தார். பௌத்த பிக்குகளால் தொல்பொருள் திணைக்களம் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குருந்தூர்மலையில் விகாரை கட்டப்பட்டது ஆச்சரியமல்ல.
தொல்பொருள் திணைக்களத்துக்கு வெளியில் இருந்து நிதி கிடைக்கிறது. இராணுவத்தினரும் அதற்கு உதவியாக இருக்கின்றனர். படைபலத்தையும், பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தியே குருந்து விகாரை அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது இதையெல்லாவற்றையும் தோற்கடித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால், அது சிக்கலானது.
குருந்தூர்மலை விவகாரம் தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது. அது எந்தவொரு மதத்துக்கும் சொந்தமானதல்ல என்று வடக்கு கிழக்கு பிரதம சங்கநாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் கூறியிருக்கிறார்.
அதாவது, தொல்பொருள் இடத்தை தொல்பொருள் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் சுருக்கம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர்.
ஆனால், தொல்பொருள் இடத்தில் விகாரை அமைத்து பாதுகாப்பது தான் முறை என்று தொல்பொருள் திணைக்களத்துக்கு பொறுப்புவாய்ந்த கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறியிருக்கிறார்.
அவரைப் போன்றவர்கள், இந்த விவகாரம் அரசியல்வாதிகளால் அரசியலாக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளின் பின்னால் அரசியல் இருக்கிறது. அது உள்நோக்கத்துடன் செயற்படும் போது, அரசியல் ரீதியாக செயற்படும் போது, அதற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
அத்துடன், குருந்தூர்மலையில் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்திருக்கவில்லை என்றும், அது தமிழ் பௌத்தத்தின் எச்சம் என்றும் கூறியிருக்கிறார் வடக்கு கிழக்கு பிரதம சங்கநாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.
இலங்கையில் தமிழ் பௌத்தம் இருந்ததற்கு பல சான்றுகள் இருக்கின்றன.
ஆனால், இராவணனை சிங்கள மன்னன் என்றும், தமிழ் பௌத்தம் இருந்ததில்லை, சிங்கள மன்னர்கள் தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்ட பெண்கள் வழிபடுவதற்காக கட்டப்பட்டவை தான், சைவ ஆலயங்கள் என்றும், வரலாற்றுப் புரட்டுகளை முன்வைத்து வருகின்றனர் சரத் வீரசேகர, மேர்வின் சில்வா போன்றவர்கள்.
13இற்கு எதிரான அரசியல் எவ்வாறு தெற்கின் அரசியலில கூர்மைப்படுத்தப்படுகிறதோ, அதற்கு இணையாக குருந்தூரமலை விவகாரமும் தெற்கின் அரசியலில் மையப்படுத்தப்பட்டு வருகிறது.
குருந்து விகாரை பற்றிய ஒரு நூல் அண்மையில் பேராசியரியர் சன்ன ஜயசுமணவினால் வெளியிடப்பட்டது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அவரின் ஊடாக அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இப்போது தெற்கின் இந்த இரண்டு கூர்மைப்படுததப்பட்ட அரசியல் முனைப்புகளிலும் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த கூர்மையான இரண்டு வாள்களையும் தோற்கடிப்பது, ரணில் விக்ரமசிங்ககவினால் இயலக் கூடிய காரியமாகத் தெரியவில்லை.
இதில் எந்த வாளைக் கையில் எடுத்தாலும் அது அவரையே காயப்படுத்தும்.
குருந்தூர்மலை விவகாரத்தை தீர்த்து வைத்தல் என்பது இப்போது அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டது.
மாறாத புண்ணாக அது மாறி விட்டது. இனி அதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்திட்டுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது. அந்தப் புண் உள்ள உறுப்பை அறுத்து விட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க அப்படியொரு அறுவைச் சிகிச்சை நிபுணரல்ல.
அவர் எப்போதும் காலத்தை இழுத்தடித்துப் பழக்கப்பட்டவர் என்பதால், காலம் பூராவும் புண்ணுக்கு மருந்திடுவதைத் தான் சிறந்த தெரிவாக கருதுவார்.
கார்வண்ணன்