வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் (30) ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றுடன் 2383 ஆவது நாளாகத் தொடர்ச்சியான கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் நீட்சியாக இன்று புதன்கிழமை வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதன்படி வடமாகாணத்தில் மன்னாரில் சதொச மனிதப்புதைகுழிக்கு அண்மையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் பேரணி மன்னார் விளையாட்டரங்கத்துக்கு (மன்னார் ஸ்டேடியம்) அண்மையில் நிறைவடையும். அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இருந்து காலை 9 மணிக்கு பேரணி ஆரம்பமாகும்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், உள்ளகப்பொறிமுறையின் ஊடாகத் தமக்குரிய நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையைத் தாம் முற்றுமுழுதாக இழந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், எனவே நம்பத்தகுந்த சர்வதேசப்பொறிமுறையின் மூலம் தமக்கான நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியே இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சர்வதேசக் கண்காணிப்புடன்கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் இப்போராட்டத்தின் ஊடாகத் தாம் வலியுறுத்தவிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply