உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்ததாக சில மாதங்களுக்கு முன்னர் பேசப்பட்டது.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதை கடுமையாக எதிர்க்கும் எதிரணி அரசியல் கட்சிகளும் அத்தகைய திருத்தத்தை ஆதரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. முதலில் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக பெரும்பாலும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகளே பேசினார்கள். இப்போது அடுத்த வருட நடுப்பகுதியில் அந்த தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன.

தேசிய தேர்தல்களை குறிவைத்து அரசியல் கட்சிகள் புதிய அணி சேருகைகளுக்கு முன்னெடுக்கும் முயற்சிகள் குறித்து கடந்த வாரம் இந்த பத்தியில் ஆராய்ந்தோம். கூட்டணிகளை அமைக்கும் கட்சிகளின் முயற்சிகளில் ஒரு தடுமாற்றத்தை இப்போது அவதானிக்க முடிகிறது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் முதலில் பேச்சுவார்த்தைகளை நடத்திய பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் – டலஸ் அழகப்பெரும அணி (சுதந்திர மக்கள் சபை) பிறகு விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகாயவுடனும் ஜனதா விமுக்தி பெரமுனவுடனும் (ஜே.வி.பி.) பொது நிலைப்பாடுகளுக்கு வரக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய தனித்தனியாக பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறது.

இது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுதந்திர மக்கள் சபை நம்பிக்கையுடன் முன்னெடுக்கக்கூடிய சாத்தியம் குறித்து சந்தேகத்தை கிளப்புகிறது. தேசிய மக்கள் சக்தி முக்கியமான பிரச்சினைகளில் அரசாங்கத்துக்கு எதிராக மற்றைய எதிரணிக் கட்சிகளுடன் ஒத்துழைத்து செயற்பட முன்வரக்கூடுமே தவிர கூட்டணியொன்றை அமைக்க முன்வரப்போவதில்லை என்பது நிச்சயம்.

மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் ஆதரவு குறித்து கடும் நம்பிக்கையுடன் இருக்கும் ஜே.வி.பி. தலைவர்கள் ஆட்சிப்பொறுப்பை தங்களிடம் தருமாறு மக்களிடம் கேட்டுவருகிறார்கள்.

விமல் வீரவன்ச அணியை உள்ளடக்கிய கூட்டணி ஒன்றுக்கு பிரேமதாச இணங்குவாரேயானால், அவருடன் தற்போது இருக்கும் தமிழ், முஸ்லிம் பங்காளிக் கட்சிகளை அவர் இழக்கவேண்டிய நிலை தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோரை ஐக்கிய தேசிய கட்சியுடனான உத்தேச கூட்டணிக்கு இழுக்கும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவின் முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து கடந்த வாரம் பெரிதாக தகவல் எதுவும் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் குறித்து திட்டவட்டமான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையிலும் கூட கட்சிகள் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கத் தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரம் கூடிய தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுச் சபை தன்னை வேட்பாளராக அங்கீகரித்ததாக திசாநாயக்கவே தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடப்போவது முதல் தடவை அல்ல. 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலிலும், பிறகு கடந்த வருடம் கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் கிளர்ச்சியை அடுத்து பதவி விலகிய பிறகு அவரின் எஞ்சிய பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலிலும் திசாநாயக்க போட்டியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி அதன் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை சில மாதங்களுக்கு முன்னரேயே அறிவித்துவிட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஒரு ராஜபக்ஷவை தவிர வேறு எவரும் நியமிக்கப்படமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்விடயத்தில் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களே பெரிதாக அடிபடுகின்ற போதிலும், ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்ஷவை களமிறக்கவேண்டும் என்றும் சிலர் குரல்கொடுக்கிறார்கள். பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதில்லை என்பது தற்போது தெளிவாக தெரிகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மீண்டும் களமிறங்குவது குறித்து இடைக்கிடை பேசுகிறார். ஆனால், அவர் எந்த கட்சிகளுடன் கூட்டுச் சேர்வார் என்று தெரியவில்லை. அவருடன் கூட்டுச்சேர எவராவது முன்வருவாரா என்பது ஒரு பிரச்சினை.

இலங்கை இதுவரையில் 8 ஜனாதிபதி தேர்தல்களை கண்டிருக்கிறது. அந்த தேர்தல்கள் பற்றிய அறிவிப்பு வந்த பிறகுதான் பெரும்பாலும் கட்சிகள் தனியாக வேட்பாளரை நிறுத்துவதா அல்லது கூட்டணி அமைத்து வேட்பாளரை நிறுத்துவதா என்பதை தீர்மானித்ததை கண்டோம். ஆனால், ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் அதற்கு சுமார் ஒரு வருடம் இருக்கும் நிலையிலேயே கட்சிகள் அவற்றின் வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டன.

இன்று எந்தவொரு கட்சியும் மக்களின் அமோக ஆதரவுடன் இல்லை. கூட்டணிகளை அமைப்பதை தவிர அவற்றுக்கு வேறு வழியில்லை. அத்துடன் எதிரணி கட்சிகள் நம்பிக்கை உணர்வுடன் பேசுவதாகவும் இல்லை. உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைத்தது போன்று ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்ற தேர்லையும் கூட அரசாங்கம் தாமதிக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் அவை கிளப்புகின்றன.

இதுவரையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் 2010, 2015 தேர்தல்களில் மாத்திரமே பதவியில் இருந்த ஜனாதிபதிக்கு எதிராக எதிரணி கட்சிகள் பொது வேட்பாளர்களை நிறுத்தின. அவை ஒரு தடவை தோல்வியையும் மறு தடவை வெற்றியையும் கண்டன. ஆனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு வாய்ப்பு பெரும்பாலும் இல்லை. முன்னர் கூறியவாறு சில கட்சிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் அதை வாபஸ் பெறும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

எதிரணியின் பொது வேட்பாளர்கள் களமிறக்கப்பட்ட முன்னைய இரு தேர்தல்களிலும் அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருந்த மகிந்த ராஜபக்ஷ போன்று தற்போதைய ஜனாதிபதி (ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார் என்பதைத் தவிர) அரசியல் ரீதியில் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளர் அல்ல. ஐக்கிய தேசிய கட்சி மக்கள் செல்வாக்கைப் பொறுத்தவரையில், தொடர்ந்தும் மிகவும் பலவீனமான நிலையில்தான் இருக்கிறது.

ஜனாதிபதியாக வந்த பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகள் எந்தளவுக்கு அவரது கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மீட்டெடுத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை.

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் சவாலுக்கு முகங்கொடுக்க ஆட்சிப்பொறுப்பை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்துக்குள் கணிசமானளவுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கிய திசையில் வழிநடத்தும் தலைவர் என்று விக்கிரமசிங்கவை மக்கள் முன்னிறுத்த முடியும் என்ற ஒரே நம்பிக்கையில்தான் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. என்றாலும் கூட பரந்தளவிலான கூட்டணியொன்று அவர்களுக்கு தேவை.

பரந்த கூட்டணியை அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி பேசுகின்றபோதிலும், பொதுஜன பெரமுனவில் இருந்தும் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் உறுப்பினர்களை இழுத்தெடுப்பதே தற்போது ஜனாதிபதியின் பிரதான தந்திரோபாயமாக இருக்கிறது. பதவிகளை எதிர்பார்த்து போகக்கூடியவர்களை தவிர, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு வேறு கட்சிகள் விரும்பி வரக்கூடிய நிலையில் அதன் செல்வாக்கு இல்லை.

சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தனக்கு ஆதரவாக இருப்பர் என்ற நம்பிக்கை விக்கிரமசிங்கவுக்கு எப்போதும் இருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களில் கடைப்பிடித்துவரும் குழப்பகரமான அணுகுமுறைகள் அந்த ஆதரவை தற்போது எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பது முக்கியமான கேள்வி.

இரு ஜனாதிபதி தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வி கண்ட பிறகு, விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்த்தார். அந்தளவுக்கு அவர் மக்கள் முன் செல்வதற்கு பயந்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்பது நிச்சயம். ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு எந்த தேர்தலையும் பற்றி அவர் பேசுவதில்லை. மக்களின் ஆணையுடன் ஒரு தடவையேனும் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது அவரது கனவாக இருக்கலாம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாமல் தேர்தல் வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஒரு கட்சியின் தலைவர், இன்று அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு பெரிய கூட்டணிகளை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை எதிரணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்ற அளவுக்கு – ‘அவரை தவிர திறமையான ஜனாதிபதி வேட்பாளர் இல்லை’ என்று பேசப்படுகின்ற அளவுக்கு அரசியல் நிலைவரம் தலைகீழாக மாறியிருக்கிறது.

இதை விக்கிரமசிங்கவின் பலம் என்பதா, இல்லை, எதிரணியின் பலவீனம் என்பதா?

வீரகத்தி தனபாலசிங்கம் – Virakesari

Share.
Leave A Reply