விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம் PSLV C-57 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதையடுத்து, சரியாக ஒரு மணி நேரம் 12 நிமிடங்களுக்கு பின், ராக்கெட்டிலிருந்து பிரிந்து ஆதித்யா விண்கலம் தனது தனித்த பயணத்தைத் தொடங்கியது.

இது குறித்து ISRO தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் செய்தியாளர்களிடையே தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

இதன்போது, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா விண்கலம், சரியான பாதையில் செல்வதாக ISRO தலைவர் சோம்நாத் குறிப்பிட்டார்.

மேலும், அடுத்தடுத்து சுற்றுகளைக் கடந்து மிக நீண்ட தூர இலக்கை அடையும் என்றும் சோம்நாத் நம்பிக்கை வௌியிட்டார்.

நிலவை ஆராய சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடா்ந்து ISRO-வின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமைந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், திட்ட இயக்குநருமான நிகர் ஷாஜி, ஆதித்யா விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் சூரிய தகடுகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

சூரியனை ஆய்வு செய்யும் வகையில், ஆதித்யா L-1 எனும் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளன.

Share.
Leave A Reply