உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் – வெளிப்படுத்தல்கள் (டிஸ்பச்சஸ்)’ என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடவிருப்பதாக சனல்-4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சனல் – 4 செய்திச்சேவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படம் பல்வேறு அதிர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படத்தில், இத்தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தொடர்புபட்டிருந்தமை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகவுள்ளதாக ‘லண்டன் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது புகலிடம்கோரி ஜெனிவா, சுவிஸ்லாந்தில் வசித்துவருபவரும் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் பேச்சாளருமான அஸாட் மௌலானா என்பவரால் வழங்கப்பட்டிருப்பதாக லண்டன் டைம்ஸின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த ஆவணப்படத்தை கடந்த ஓகட்ஸ் மாதம் 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு சனல்-4 செய்திச்சேவை திட்டமிட்டிருந்ததாகவும், இருப்பினும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவினால் அவரது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கப்பட்ட விளக்கமளிப்பைத் தொடர்ந்து அக்காணொளி அன்றைய தினம் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமாத்திரமன்றி குறித்த காணொளியில் தனது பெயரைப் பயன்படுத்தி அஸாட் மௌலானாவினால் குறிப்பிடப்படும் சம்பவ தினத்தன்று தான் இலங்கையில் பணியில் இருக்கவில்லை என்பதை உரிய ஆவணங்கள் மூலம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே உறுதிப்படுத்தியிருப்பதாகவும் லண்டன் டைம்ஸின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட ஆவணப்படம் செவ்வாய்க்கிழமை (5) லண்டன் நேரப்படி இரவு 11.05 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒளிபரப்பப்படவிருப்பதாக சனல்-4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply