நல்லிணக்க விவகாரத்தில் அரசாங்கம் அர்த்தமுள்ள வகையில் ஆக்கபூர்வமாக செயற்படவேண்டியதன் அவசியத்தை சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் மீளவலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் -அன்ட்ரூ பிரான்ஸ், இனிவருங்காலங்களில் இலங்கையில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாக அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ பிரான்ஸ் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார்.

அந்தவகையில் மார்க்-அன்ட்ரூ பிரான்ஸுக்கும் தலைநகர் கொழும்பைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய நடவடிக்கைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாதத்தடைச்சட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை, சிவில் சமூக அமைப்புக்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதன்படி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுபோல் தெரிந்தாலும், அச்செயன்முறைகளின் ஊடாகக் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படவில்லை என்று ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் சிவில் சமூக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு உதாரணமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது எனக் கண்டறியப்படவில்லை என்றும், இழப்பீட்டுக்கான அலுவலகம் நிறுவப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரியவாறு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் உண்மையான அக்கறையையும் அரசியல் ரீதியிலான தன்முனைப்பையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தற்போது அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு முயலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை இலக்காகக்கொண்ட கண்துடைப்பு முயற்சி மாத்திரமே என்று ஐ.நா வதிவிடப்பிரதிநிதியிடம் தெரிவித்தனர்.

மேலும் ‘நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைவிட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னேற்றகரமான விடயங்களைச் செய்வார் என்ற அபிப்பிராயத்தை ஐக்கிய நாடுகள் சபை கொண்டிருப்பதுபோல் தெரிகின்றது. இருப்பினும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டைவிடுத்து, நியாயமான முறையில் செயற்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் ஐ.நா வதிவிடப்பிரதிநித மார்க்-அன்ட்ரூ பிரான்ஸிடம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இவற்றை செவிமடுத்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி நல்லிணக்க விவகாரத்தில் அரசாங்கம் அர்த்தமுள்ள விதத்தில் ஆக்கபூர்வமாக செயற்படவேண்டியதன் அவசியத்தை மீளவலியுறுத்தியதுடன் இனிவருங்காலங்களில் இலங்கையில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply