உக்ரேனின் கோடைகாலத் தாக்குதலின் தோல்வியின் பின்னணியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்கள்கிழமை உக்ரேனுக்குப் பயணம் செய்து,

உக்ரேன் போர் “நீடித்து இருக்கும்வரை” அமெரிக்காவின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பிளிங்கனின் வருகை தந்த சரியான நேரத்தில், கோஸ்ட்யாண்டினிவ்கா நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் ரஷ்யாவினால் நடத்தப்பட்டது என்று, செலென்ஸ்கி ஆட்சியால் அறிவிக்கப்பட்டது.

US Secretary of State Antony Blinken

பிளிங்கனின் வருகையானது, இறப்பு எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தொடரும் (இதற்கு உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் வாழ்க்கை விலையாக செலுத்தப்படும்) என்ற செய்தியை அனுப்பும் நோக்கத்தை கொண்டிருந்தது.

உக்ரேனிய தாக்குதலை அமெரிக்க ஊடகங்கள் இரண்டாம் உலகப் போரின் போது நோர்மண்டி தரையிறக்கத்திற்குச் சமமானதாகக் கருதி பாராட்டுகின்றன.

ஆனால் இவ்வளவு உயிரிழப்புக்கு மத்தியில், போர் முனையில் உக்ரேனின் முன்னேற்றம் என்பது, அது இருக்கும் அளவிற்கு, சில மீட்டர்கள் தூரத்தில் மட்டுமே அளவிடப்படுகிறது.

போரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் (இப்போது அதன் 19வது மாதத்தில்) எதுவும் கியேவ் அல்லது வாஷிங்டனால் வெளியிடப்படவில்லை.

ஆனால், வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, 50,000ம் அல்லது அதற்கு மேற்பட்ட உக்ரேனியர்கள் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

நம்பகமான அறிக்கைகள் போரில் கொல்லப்பட்ட உக்ரேனிய படையினர்களின் எண்ணிக்கை 350,000 மற்றும் 400,000 என்று கூறுகின்றன.

அத்துடன், மேலும் இறப்புகளை எதிர்பார்க்கும் உக்ரேனிய ஆட்சி, முடிவில்லாத கொள்ளைக்கு ஈடாக, நாட்டின் இளைஞர்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், 600,000 படையினர்களுக்கான இராணுவ மயானம் இப்போது கட்டுமானத்தில் உள்ளது.

இந்த பேரழிவை எதிர்கொண்டு, அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி மற்றும் போரைத் தூண்டும் அதன் உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

பிளிங்கனின் பயணத்துடன் அமெரிக்கா கூடுதலாக 1 பில்லியன் டொலர் ஆயுதங்களை, நன்கு ஊறிப்போன லஞ்சங்களுடன் அறிவித்தது. பைடென் நிர்வாகம் தற்போது காங்கிரஸில் 20 பில்லியன் டொலர் கூடுதல் நிதியுதவியை போருக்காக அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றி வருகிறது.

பகிரங்கமாக, இந்தப் பேரழிவின் அளவை பிளிங்கன் அல்லது பைடென் ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், கிரிமியன் தீபகற்பத்திற்கான “தரைவழிப் பாலத்தை” துண்டிப்பதற்காக அசோவ் கடலுக்குச் செல்லும் அதன் முக்கிய நோக்கத்தை அடைவதில் தாக்குதல் தோல்வியடையும் என்று அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக, உக்ரேனியத் தலைமை உக்ரேனியத் துருப்புக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் இராணுவத் தோல்விகளுக்குக் காரணம் என்று அமெரிக்க இராணுவம் மற்றும் பைடென் நிர்வாக அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை கொடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஜெனரல்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அமெரிக்க ஊடகங்களில் வரும் கருத்துக்கள், போர் இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்று இப்போது தெரிவிக்கின்றன

தி வாஷிங்டன் போஸ்ட்டில் கடந்த வாரம் வெளியான ஒரு கட்டுரையில், கட்டுரையாளர் மேக்ஸ் பூட், “2024 இல் உக்ரேன் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக” எழுதினார்.

பூட் அமெரிக்க இராணுவ பிரிகேடியர் ஜெனரலை மேற்கோள் காட்டினார். “உக்ரேனிய வெற்றியை நோக்கி ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தீர்க்கமான போர் இந்த ஆண்டு நிகழும்” என்று தான் மிகவும் சந்தேகம் கொண்டிருப்பதாக அறிவித்த அமெரிக்க இராணுவ பிரிகேடியர் ஜெனரல் மார்க் அர்னால்டை பூட் மேற்கோள் காட்டினார்.

“அடுத்த ஆண்டு தீர்க்கமான நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறித்து தான் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக” அர்னால்ட் மேலும் கூறினார்.

முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ ஜெனரல் ரிச்சர்ட் பாரன்ஸ் பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், “உக்ரேன் இப்போது ரஷ்யாவிற்கு எதிராக வெற்றி பெற முடியாது, ஆனால் “2025 க்குள் வெற்றி சாத்தியமாகும்.

உக்ரேனின் தற்போதைய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவைச் செயலிழக்கச் செய்யாது – இருப்பினும் யாரும் அதனை எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். குளிர்காலத்திற்கு முன்பு ஆக்கிரமிப்பு பாதியாகக் குறைக்கப்பட வாய்ப்பில்லை, இது மிகவும் நம்பிக்கையான இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம்.

இருப்பினும், ரஷ்ய இராணுவத்தை 2023 இல் அல்ல, ஆனால் 2024 அல்லது 2025 இல் தோற்கடிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

தி எகனாமிஸ்ட், பத்திரிகை அதன் பங்கிற்கு, “ஒரு மூத்த அமெரிக்க உளவுத்துறை அதிகாரியை” மேற்கோள் காட்டி, “நீங்கள் ஐந்து ஆண்டுகளில் போர்க்களத்தைப் பார்த்தால், அது பரந்த அளவில் ஒத்ததாக இருக்கும்” என்று எழுதியது.

அந்தளவுக்கு யுத்தத்தை நீடிக்க அனுமதித்தால், இறப்பு எண்ணிக்கை மில்லியன்களில் இருக்கும். ஆனால், போரை வழிநடத்தும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு இது முற்றிலும் அலட்சியமான பிரச்சினையாகும்.

பைடெனின் 20 பில்லியன் டொலர் இராணுவச் செலவு மசோதாவை அங்கீகரிக்க செனட் சபைக்கு அழைப்பு விடுக்கும் உரையில், செனட் குடியரசுக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கானெல் உக்ரேனைப் பற்றி “தள்ளாட” வேண்டாம் என்று தனது சகாக்களை கேட்டுக்கொண்டு வலியுறுத்தினார். உக்ரேனுக்கு நிதியளிப்பது என்பது “அமெரிக்காவின் மிகப் பெரிய மூலோபாய எதிரிகளில் ஒருவரைச் சுடாமல் பலவீனப்படுத்துவது, மற்றொருவரை [அதாவது சீனா] செயல்பாட்டில் தடுத்து நிறுத்துவது” என்று மெக்கனெல் கூறினார்.

“இது இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் நேரடியாக அமெரிக்க பலத்தில் முதலீடு செய்வதாகும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மெக்கனெலின் அறிக்கைகள் போரை உந்தும் உண்மையான நோக்கங்களையும் அதன் இடைவிடாத விரிவாக்கத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

ஊழலால் நிரம்பிய மற்றும் ஒரு கிரிமினல் தன்னலக்குழுவால் ஆளப்படும் உக்ரேனில் உள்ள “ஜனநாயகத்திற்கும்” இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

ரஷ்யா முக்கியமான கனிமங்கள் மற்றும் எரிசக்தி வளங்களின் வளமான இருப்புகளை வைத்திருப்பதால் மட்டுமல்ல, சீனா மீதான இராணுவத் தாக்குதலுக்கு அது ஒரு தடையாகக் கருதப்படுவதால், வாஷிங்டன் வேண்டுமென்றே போரைத் தூண்டிவிட்டு, ரஷ்யாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இறுதியில் அதனை தகர்ப்பதன் மூலம் அமெரிக்க மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்கு வழிநடத்துகிறது.

நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் உயிர்களைப் பலி கொடுத்து, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை அதிகரிப்பதை இந்தப் போர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கியேவில் உள்ள வலதுசாரி ஆட்சி மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் உள்ள அதிதீவிர வலதுசாரி அரசாங்கங்களுடனான கூட்டணியுடன் இந்தப் போர் நடத்தப்படுகிறது.

“அமெரிக்க சண்டைக்கு மத்தியில், புட்டினுடன் அமைதிப் பேச்சு வார்த்தை எழுப்பும் அச்சம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா அரசாங்கங்கள், மிகவும் ஆக்ரோஷமாக போரை அதிகரிக்கக் கோரும் அரசாங்கங்களில் அடங்கும் என்று ஹில் இணையதளம் குறிப்பிடுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, ​​இந்த நாடுகள் நாஜி ஜேர்மனியுடன் இணைந்திருந்தன. அவற்றின் இராணுவ மற்றும் புலனாய்வுக் கருவிகளில் பெரும்பாலானவை யூத இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தன.

இன்று கடுமையான ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சிகளால் ஆளப்படுகின்ற இந்த நாடுகள், குறிப்பாக லிதுவேனியாவைப் பொறுத்தவரை, நாஜிக்களுடன் ஒத்துழைத்த அவர்களது மூதாதையர்களை வெளிப்படையாக மகிமைப்படுத்துகிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நம்பகத்தன்மை இந்த மோதலின் தலைவிதியில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் உக்ரேனிய பினாமிப் படைகளின் சரிவை எதிர்கொள்ளும் அமெரிக்கா, மோதலில் அதன் ஈடுபாட்டை, பாரியளவில் அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளது. குறிப்பாக, நேட்டோ துருப்புக்களின் நேரடி ஈடுபாடு அல்லது உக்ரேனுக்கு அணு ஆயுதங்களை அனுப்புவது ஆகிய ஆபத்துக்களாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடியால் உந்தப்பட்டு, அதன் உலகளாவிய நிலையின் நீண்டகால சரிவுக்கு ஈடுகொடுக்கும் அவநம்பிக்கையில், ஒரு இராணுவ மோதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதால், அதன் இறப்பு எண்ணிக்கை கணக்கிட முடியாததாக இருக்கும். அமெரிக்காவிற்குள் போருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பைடென் நிர்வாகம் ஒரு இராணுவ வெற்றிக்காக அதிக அளவில் அவநம்பிக்கையுடன் உள்ளது.

அதன் பங்கிற்கு, புட்டினின் தன்னலக்குழு அரசாங்கம், பிப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான அதன் அவநம்பிக்கையான மற்றும் அரசியல் ரீதியாக திவாலான படையெடுப்பிற்கு இழுக்கப்பட்டு, சீனாவுடனான மோதலுக்கு ஒரு முன்னோடியாக ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்கும் இறுதிவரை தகர்ப்பதற்கும் உறுதிபூண்ட அதன் ஏகாதிபத்திய “பங்காளிகளுடன்” பேரம் பேசும் வீண் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும். பைடென் நிர்வாகம் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள், ஏகாதிபத்திய உளவுத்துறை அமைப்புகளின் ஊடக ஊதுகுழல்கள், வெறித்தனமான போருக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

Share.
Leave A Reply