சென்னை: நடிகை விஜயலட்சுமி கொடுத்த திருமண மோசடி, 7 முறை கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்கள் கொடுத்த விசாரணைக்காக சென்னை வளவசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளார்.

நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் தனக்கு 2008-ல் திருமணம் நடந்தது; பின்னர் நகை, பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என 2011-ல் ஒரு புகார் கொடுத்தார்.

அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த புகார். ஆனால் பின்னர் தமது புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

அதேநேரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக சீமான் மீது பல்வேறு புகார்களை வீடியோ பதிவுகள் மூலம் நடிகை விஜயலட்சுமி தெரிவித்து வந்தார்.

தற்கொலைக்கும் முயன்று சர்ச்சையில் சிக்கினார் விஜயலட்சுமி. இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் மீண்டும் சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமி வாக்குமூலம் கொடுத்தார்.

மேலும் சீமான் தம்மை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணிநேரம் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து சீமான் விசாரணைக்கு கடந்த 9-ந் தேதி ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஆனால் அன்றைய தினம் கட்சிப் பணிகள் இருப்பதால் செப்டம்பர் 12-ந் தேதி விசாரனைக்கு ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக நாளை காலை 10 மணிக்கு சீமான் ஆஜராக இருக்கிறார்.

இந்த வழக்கு பற்றி பேசிய சீமான் ஏற்கனவே, நடிகை விஜயலட்சுமியை மானங்கெட்ட ஒருத்தியோடு மல்லுக்கட்டுவதா? என காட்டமாக விமர்சித்திருந்தார்.

அத்துடன் தமிழ்நாடு போலீசாரையும் எங்கே என் மீது கைவைத்து பாருங்களேன் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் சீமான்.

Share.
Leave A Reply