கேரள மாநிலம், கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று, கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த மர்மநபர் கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
மறுநாள் கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதர்ச்சியடைந்துள்ளனர், மேலும் கடையில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வதும், அந்த நபர் கடையின் உள்ளே மேசையில் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை தனியாக எடுத்து வைத்து விட்டு, சில்லறை காசுகளை மட்டும் திருடிச்சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது..
பொதுவாக திருட்டில் ஈடுபடக்கூடிய நபர்கள், திருடச்செல்லும் இடத்தில் பணம் மற்றும் அதிக விலை உள்ள பொருட்கள் சிக்கினால் அவற்றை விட்டு வைப்பதில்லை.
ஆனால் கொல்லம் கடைகளில் கை வரிசை காட்டிய நபரோ, வித்தியாசமாக பணக்கட்டுகளை வைத்துவிட்டு சில்லறை காசுகளை மட்டும் திருடிச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.