சிங்கப்பூரின் ஜனாதிபதியாக இலங்கை வம்சாவளித்தமிழரான யாழ்ப்பாணம் ஊரெழுவை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70.4 வீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதியாக அவர் சாதனை படைத்துள்ளார்.
சுமார் 25 இலட்சம் வாக்காளர்களை கொண்ட சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலில் 24 இலட்சத்து 80 ஆயிரத்து 860 பேர் வாக்களித்திருந்தனர்.
அதில் 50ஆயிரத்து 152 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அளிக்கப்பட்ட வாக்குகளில் தர்மன் சண்முகரட்ணம் 17 இலட்சத்து 46 ஆயிரத்து 427 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருக்கின்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய இரண்டு வேட்பாளர்களும் சொற்ப வீதமான வாக்குகளையே பெற்றிருந்தனர்.
75 வீதமான சீனர்களைக் கொண்ட சிங்கப்பூரில் இலங்கை வம்சாவளித்தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
அதுவும் 70 வீதத்துக்கும் மேலான வாக்குகளை அவர் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார். சிங்கப்பூரில் சீனர்கள், மலே, மற்றும் தமிழர்கள் என பல்லின மக்கள் வாழ்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளமையானது சிங்கப்பூரில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாகவே நோக்கப்படுகின்றது. இந்த விடயமானது எமது நாடான இலங்கைக்கு ஒரு படிப்பினையாக அமைந்திருக்கின்றது.
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கப்பூரானது இலங்கையை முன்னுதாரணமாக கொண்டு செயற்படுமளவுக்கு எமது நாடானது முன்னோக்கியிருந்தது.
ஆனால் தற்போது எமது நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இதற்கு என்ன காரணம் என்பதை பின்நோக்கி பார்க்கவேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.
சிங்கப்பூரானது பெரும் முன்னேற்றமடைந்த நாடாக திகழ்வதுடன் பல்கலாசார நாடாகவும் பரிணமித்து வருகின்றது.
இன, மத, கலாசார வேறுபாடுகளை மறந்து அந்த நாடு செயற்படுவதனாலேயே இத்தகைய முன்னேற்றம் அங்கு ஏற்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரின் சிற்பி என்று வர்ணிக்கப்படும் காலஞ்சென்ற லீ குவான் யூவின் தூரநோக்கு சிந்தனையானது இன்று சிங்கப்பூரை முன்னேற்றியுள்ளது.
அவரது ஆளுமையான தலைமைத்துவம் சிங்கப்பூரை பல்கலாசார நாடாக மாற்றியிருந்தது. இதனாலேயே தமிழர் ஒருவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையைப் போன்று சிங்கப்பூரை கட்டியெழுப்ப வேண்டுமென்று லீ குவான் யூ தெரிவித்திருந்தார்.
அந்தளவுக்கு இலங்கையானது முன்னேற்றமடைந்த நாடாக அன்று காணப்பட்டது. ஆசியாவிலேயே முன்னுதாரணமான நாடாக அன்று இலங்கை திகழ்ந்திருந்தது.
ஆனால் பிற்காலத்தில் எடுக்கப்பட்ட தவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் பெளத்த சிங்கள மேலாதிக்கவாத நிலைப்பாடுகள் என்பன காரணமாக இலங்கையானது தரம்தாழ்ந்து போனது.
சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கும் எழுச்சிக்குமான அடிப்படையான காரணமாக அமைவது இன, மத வேறுபாடுகளற்ற பல்லின கலாசார தன்மை என்றால் அதனை எவரும் மறுக்க முடியாது.
அன்று நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட லீ குவான் யூ இனவாத, மதவாத செயற்பாடுகளுக்கு அனுமதிக்காது நாட்டை பல்லின கலாசாரம் பேணும்வகையில் உருவாக்கியிருந்தார். அதன் காரணமாகவே இன்று சிங்கப்பூர் தலைமிர்ந்து நிற்கின்றது.
சிங்கப்பூரானது அனைத்து இன மக்களையும் ஒரே மக்களாகக் கொண்டு முன்னேறி வருகின்றது.
அங்கு அரசியல்வாதிகளை மக்கள் திறமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கும் நிலைமை காணப்படுகின்றது.
அவர் சீனரா, தமிழரா, அல்லது மலேயினத்தவரா என்று அந்த மக்கள் சிந்திக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது இலங்கையை பூர்வீமாகக் கொண்ட தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆசனத்தை அலங்கரித்திருக்கின்றார். இத்தகைய நிலை காரணமாகவே பொருளாதார ரீதியிலும் சிங்கப்பூர் உயர்ந்து நிற்கின்றது.
முன்னொரு காலத்தில் சிங்கப்பூருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை இன்று இன,மதவாத முரண்பாட்டுக்குள் சிக்கி சின்னாபின்னமான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்றும் இங்குவாழும் சிறுபான்மையினர் சிறு செடிகொடிகள் என்றும் வர்ணிக்கப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்கவே இத்தகைய கூற்றினை கூறியிருந்தார்.
இதேபோன்றே நாட்டை ஆட்சி செய்த சிங்களத் தலைமைகள் பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்கியதுடன் ஏனைய மதங்களை புறக்கணிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டன.
இதேபோன்றே சிங்கள பெளத்த தேசிய வாதத்தை வளர்த்ததுடன் ஏனைய சிறுபான்மை இனங்களை புறக்கணிக்கும் வகையில் செயற்பட்டன.
இவ்வாறான புறக்கணிப்புக்கள் காரணமாகவே தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
மூன்று தசாப்தகால யுத்தமானது நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த யுத்தத்துக்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்தும் வகை தொகையின்றி கடன்கள் பெறப்பட்டன. நாட்டில் யுத்தம் இடம்பெற்றதே தவிர எத்தகைய அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது.
நாட்டில் மூன்று தசாப்தகால யுத்தம் பேரழிவுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் இன்னமும் வரலாற்றுத்தவறுகளை உணர்ந்து அந்த படிப்பினைகளைப் பெற்று எம்மை திருத்திக்கொள்வதற்கு எவரும் தயாராக இல்லை.
சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு இன்னமும் பெளத்த சிங்கள பேரினவாதம் தயாராக இல்லாத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுமானால் அது நாடு முன்னேறுவதற்கு வழி சமைக்கும் என்று தெரிந்திருந்த போதிலும் சுயநல அரசியல்நோக்கங்களை கருத்தில் கொண்டு அதற்கு எதிரான செயற்பாடுகளே தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவே வரக்கூடிய சூழ்நிலை இதுவரை ஏற்படவில்லை. நாட்டில் இனவாதமும் மதவாதமும் தலைதூக்கியுள்ள நிலையில் சிறுபான்மையின பிரதிநிதி ஒருவர் இந்த உயரிய பதவிகளுக்கு வருவது என்பது வெறும் கானல் நீராகவே இருக்கும். ஏனெனில் இலங்கையில் சிங்களவர்கள் 75 வீதத்துக்கும் மேல் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் அவர்களது மனங்களில் மாற்றம் ஏற்படும் வரையில் இத்தகைய உயர் பதவிகளுக்கு சிறுபான்மையின பிரதிநிதிகள் வரமுடியாது.
ஆனால் சிங்கப்பூரில் 75வீதமானோர் சீனர்களாக இருக்கின்ற போதிலும் அங்கு சிறுபான்மையாக உள்ள தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அதுவும் 70 வீதத்துக்கும் மேலதிகமாக வாக்குகளை பெற்று தெரிவாகியிருக்கின்றார் என்பது மிகப் பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
எனவே இதிலிருந்து சிங்கப்பூர் மக்களின் மன நிலையில் உள்ள மாற்றத்தை அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டால்தான் ஒருநாடு முன்னோக்கி செல்ல முடியும். ஆனால் எமது நாட்டில் அதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை.
இத்தகைய போக்கு எமது நாட்டில் தொடரும் வரை நாடு முன்னோக்கி செல்வது என்பது சாத்தியப்படாத ஒன்றாகவே காணப்படும். தெற்கின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் நாட்டை முன்னேற்றுவதை விட சிங்கள பெளத்த தேசியவாதத்தை வளர்க்கும் செயற்பாட்டிலேயே அக்கறை காண்பித்து வருகின்றனர்.
அவ்வாறான நிலை இருந்தால்தான் தமது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்று அவர்கள் இன்னமும் எதிர்பார்க்கின்றனர்.
உண்மையிலேயே சிங்கப்பூரில் இன்று நிகழ்ந்திருப்பது இலங்கையில் எப்போதோ இடம்பெற்றிருக்கவேண்டிய விடயமாகும்.
ஒரு பல்லின, பல்மத கலாசாரம் கொண்ட நாடாக இலங்கையை கட்டியெழுப்பியிருந்தால் அனைத்து மக்களினதும் பங்களிப்புடன் இலங்கையை முன்னேற்றியிருக்க முடியும்.
அவ்வாறு முன்னேற்றம் கண்டிருந்தால் இன்று இலங்கையானது தெற்காசியாவில் தலைசிறந்த நாடாக திகழ்ந்திருக்கும். ஆனால் இன்றோ இலங்கையானது சிங்கப்பூரை பார்த்து மலைத்து நிற்கும் நிலையில் காணப்படுவது துரதிஷ்டவசமானதாகும்.
எனவே இனியாவது சிங்கப்பூரை முன்னுதாரணமாக கொண்டு பல்லின, பல் கலாசார நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும். அவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்பட்டால்தான் இலங்கையின் முன்னேற்றம் சாத்திப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.