முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் தடையப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளன.

இதுவரை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஆறு நாட்கள் இடம்பெற்றுள்ளநிலையில், 06மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (12) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது.

அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன், செப்ரெம்பர் (11) திங்களன்று பகுதியளவில்அகழந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதிப் பாகங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

அத்தோடு குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும் தடையப் பொருட்களாக பெறப்பட்டுள்ளன.

அதேவேளை இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயோ, கைகள் கட்டப்பட்ட நிலையிலேயோ மீட்கப்படவில்லை.

இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர்.

இதனைவி தடையவியல் போலிசார் அகழ்வுப்பணிகளின்போது புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்துகின்றனர்.

இவ்வாறான சூழலில் இங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும்நிலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் எலும்புக்கூட்டுத் தொகுதிகளோ, கண்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட துணிகளோ இதுவரை இனங்காணப்படவில்லை என்றார்.

Share.
Leave A Reply