தமிழீழ விடுதலைப்புலிகளினால் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் விளையாட்டினையும், அரசியலினையும் வெவ்வேறாக வேறுப்படுத்தி தனது இலக்கை நோக்கி பயணித்ததாகவும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஒருபோதும் தடைவிதிக்காது அரசியலினையும்,விளையாட்டினையும் வேறுப்படுத்தி பார்த்தனர்.

அவர்களின் குறிக்கோள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்துறை சார்ந்ததே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு ஐ.நாவின் உணவு தூதராக இலங்கையில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கு மூன்று முறை சென்றிருந்தேன்.இருப்பினும் தலைவர் பிரபாகரனை இச்சந்தர்ப்பங்களில் சந்திக்க முடியவில்லை.

இதன்போது வடகிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஐ.நாவினால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் ஒழுங்கான முறையில் பாதிக்கப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில், விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து அங்கு மதிய உணவினை உட்கொண்டேன்.

மேலும், தனியார் நிறுவனமொன்றினால் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில் விடுதலைப்புலிகளின் இடங்களுக்கு சென்று கிரிக்கெட் விளையாடியதாகவும், தனக்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் எவ்வித தடையும் ஏற்படவில்லை.

இருப்பினும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குண்டுகளுக்கு பார்வையில்லை என்பதினால் சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலை சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் காணப்பட்டது.

அதேவேளை, சுனாமி அனர்த்தத்தின் போதும் விடுதலைப்புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன்.

இந்த காலக்கட்டத்தில் தான் பார்த்த மற்றும் எதிர்நோக்கிய விடயங்களே முத்தையா முரளிதரன் சுயசரிதையை தழுவி ‘800’ என்ற பெயரில் வெளியாகும் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ளதாகவும், பிரமாண்டத்திற்காக கதைகளை ஒருபோதும் திரிபுப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply