சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை (13) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றுக்கு அறிவித்தனர்.
அதனையடுத்து , துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு , அது தொடர்பிலான அறிக்கையை பெறுமாறு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.