“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.

அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல்
பிரியமுடன்
அற்புதன்

(19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது

-தொடரின் ஆரம்பம்

1970களில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் பேசுவதே இளைஞர்களுக்கு வேதம்.

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை..||

இது காசி ஆனந்தன் எழுதிய கவிதையொன்றில் உள்ள வரிகள்.

மட்டக்களப்பு அமிர்தகழியில் பிறந்த காத்தமுத்து சிவானந்தன் தனது பெயரை சுருக்கி வைத்துக் கொண்டு நிறைய கவிதைகளை எழுதினார். அநேகமான காசி ஆனந்தனின் கவிதைகள் தமிழக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளின் சாயலில் பிரசவமாயின.

காசி ஆனந்தன்

பாரதிதாசனின் ஒரு கவிதை-

“ கொலை வாளினை எடடா – மிகு
கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா||
என்று உணர்ச்சி தந்து அழைக்கும் அதே சாயலில் காசி ஆனந்தனின் ஒரு கவிதை.
“ பத்துத் தடவை பாடை வராது
பதுங்கிப் பாயும் புலியே தமிழா,
செத்து மடிதல் ஒரு தரமன்றோ
சிரித்துக் கொண்டே செருக்களம் வாடா||

செருக்களம் வருமாறு அன்று இந்தக் கவிதையை எழுதிய காசி ஆனந்தன் இப்போது களத்தில் இல்லை தமிழ்நாட்டில் இருக்கின்றார்.

“ வெறி கொள் தமிழர் புலிப்படை
அவர் வெல்வார் என்பது வெளிப்படை.
மறவர் படை தான் தமிழ்ப்படை.
குலமான ஒன்றே அடிப்படை||

இதுவும் காசி ஆனந்தன் எழுதிய கவிதை தான். ஆனால் காசி ஆனந்தன் அந்தக் கவிதையை எழுதியபோது புலிகள் இயக்கம் உருவாகியிருக்கவில்லை.

ஒரு சுவையான சம்பவம் சொல்கிறேன்.கேளுங்கள்.

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளுக்கு முதன் முதலாக உரிமை கோரியது. அதன் பின்னர் தான் புலிகள் இயக்கம் என்று ஒரு அமைப்பு இருக்கின்றது என்று வெளியே தெரிய வந்தது.

பத்திரிகைகளில் புலிகள் இயக்கத்தின் அறிக்கை வந்தவுடன் சி.ஐ.டி. பிரிவினரின் சந்தேகப்பார்வை காசி ஆனந்தன் மீது விழுந்தது.

எப்போதோ எழுதிய கவிதைக்காக சந்தேகவலையில் சிக்கிய காசி ஆனந்தன் சிறைக்கும் போகவேண்டியேற்பட்டது.

காசி ஆனந்தன் கதையை இந்த அரசியல் தொடரில் சொன்னதற்குக் காரணம் இருக்கின்றது. காசி ஆனந்தன் போலத் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும். தமது பேச்சுக்கும் செயலுக்கும் எந்தவித தொடர்புமில்லாமல் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு தாமே பிற்காலத்தில் உதாரணமாக மாறப்போவது தெரியாமல் உணர்ச்சிகளை விதைத்துக் கொண்டிருந்தார்கள். 1972ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கியது. அந்த ஒற்றுமையும் தமிழ்பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

1971 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசு கொண்டு வந்த ‘தரப்படுத்தல் கல்வி முறை| தமிழ் மாணவர்களை கொதிப்பேற்றியது. பல்கலைக்கழக அனுமதியை நாடிய தமிழ் மாணவர்கள் தரப்படுத்தலால் தூக்கி வீசப்பட்டனர்.

அன்றைய கல்வி அமைச்சர் பதிய+தீன் முஹ்முதினீன்  கொடும்பாவிகள் தமிழ் மாணவர்களால் கொழுத்தப்பட்டன. தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ‘தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்’ என்ற எண்ணத்திற்கு விதை போட்ட பெருமை தரப்படுத்தல் முறைக்கே சாரும்.

தமிழ் இளைஞர்களதும் மாணவர்களதும் நாடித்துடிப்பையறிந்து கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன்னரும் வேறு சிலர் தமிழ் ஈழக்கோரிக்கையைப் பற்றிப் பேசினார்கள்.

வி.நவரட்ணம்,

தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வி.நவரட்ணம், அடங்காத் தமிழர் எனப்படும் அமரர் சுந்தரலிங்கம் போன்றோரே அவர்கள்.

அவர்களது தமிழ் ஈழக்கோரிக்கைக்கு தமிழர்களது ஆதரவினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. “நாமே முதலில் தமிழ் ஈழம் கேட்டோம் என்று அவர்களும் அவர்களது விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆதரவாளர்களும் பின்னர் சொல்லிக் கொள்ள மட்டுமே அது பயன்பட்டது.

தமிழ் ஈழம் கேட்ட   தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் வி.நவரட்ணம்  தமிழரசுக்கட்சியிடம் படுதோல்வியடைந்தார். ஊர்காவற்றுறைத் தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பண்டிதர் கா.பொ.இரத்தினத்திடம் பரிதாபமாகத் தோற்றுப்போனதே முதலில் தமிழ் ஈழம் கேட்டவரின் வரலாறு.

எந்தவொரு கோரிக்கையும் அது எத்தகைய சூழலில் முன்வைக்கப்படுகின்றது என்பதனைப் பொறுத்தே மக்களைப் பற்றிக் கொள்கின்றது. மாக்சிச தத்துவ வித்தகர் தோழர் மாக்ஸ் சொன்னது இது: “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்||

தமிழர் விடுதலைக் கூட்டணி காலம் அறிந்து போட்ட உணர்ச்சி விதை தமிழ்த் தேசிய நெருப்பாகியது. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி வெள்ளம். தலைவர் அமுதர் முதல் அடிமட்டப் பேச்சாளர்கள் வரை தமது எதிராளிகளையெல்லாம் துரோகிகள் என்று தமிழ் மக்களிடம் சுட்டிக்காட்டத் தொடங்கினார்கள்.

மேயர் அல்பிரட் துரையப்பா,

அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டவர்களில் முதன்மையானவர்கள்-

யாழ்.நகர முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா, முன்னாள் அமைச்சர் செல்லையா குமாரசூரியர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்வநாயகம், நல்லூர் பா.உ.அருளம்பலம்,வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா, யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ்.மார்ட்டின்…..

இவர்களில் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலமும் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவும் தமிழ் காங்கிரஸ் கட்சி மூலம் தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர்கள். பின்னர் கட்சி மாறிய பட்சிகளானவர்கள்.

யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சி.எக்ஸ்.மார்ட்டின் தமிழரசுக்கட்சி மூலம் வெற்றி பெற்று பின்னர் கட்சி தாவியவர்.

மார்ட்டின் கட்சி மாறியது பற்றி பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம் மேடைகளில் கேலி செய்து பாடுவார்.

“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த எம் மார்ட்டின் எம்மை விட்டுப் போனானாடி||

கூட்டத்தில் சிரிப்பொலி அலை மோதும்.ஆனால் பாராளுமன்றம் அப்போது இருந்தது இரண்டடுக்கு மாடியில் தான்.

எப்படியோ சொல் அலங்காரங்களாலும் இடி முழக்கப் பேச்சுக்களாலும் ‘துரோகிகள்’ எனத் தம்மால் கூறப்பட்டோரை கூட்டணியினர் தாக்கினார்கள்.

இளைஞர்கள் மத்தியில் ~துரோகிகளை’ வாழவிடக்கூடாது என்ற எண்ணம் வெறியாகியது.

வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசாவை கொழும்பில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி ஒன்று நடந்தது. (ஆண்டு நினைவில் இல்லை)

இரு இளைஞர்கள் தியாகராசாவின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி “ஐயாவைப் பேட்டி காண வந்திருக்கின்றோம்|| என்று சொன்னார்கள்.

“குமாரசூரியர் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றார் இருங்கோ தம்பி||

ஒரு இளைஞர் ஆசனத்தில் அமர மற்றவர் கதவருகில் நின்று சூழலை அவதானித்தபடி தன் இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை உருவிக்கொண்டார்.

(தொடரும்)

1978 இல் உரிமை கோரியவை:

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற கடிதத் தலைப்போடு ஓர் அறிக்கை சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பிரதியே இங்கு காணப்படுகின்றது
அந்த அறிக்கையில் புலிகள் உரிமை கோரியிருந்த நடவடிக்கைகள்:

1. அல்பிரட் துரையப்பா (யாழ்.மேயரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடபகுதி அமைப்பாளரும்)
2. திரு.என்.நடராஜா (உரும்பிராய் பெற்றோல் நிலைய அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும்)
3. திரு.கருணாநிதி (காங்கேசன்துறை சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர்)
4. திரு.சண்முகநாதன் (காங்கேசன்துறை சி.ஐ.டி. பொலிஸ்)
5. திரு.சண்முகநாதன் (வல்வெட்டித்துறை சி.ஐ.டி. பொலிஸ்)
6. திரு.தங்கராசா (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்,நல்லூர் பா.உ.அருளம்பலத்தின் செயலாளர்)
7. திரு.சி.கனகரத்தினம் (தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பின்னர் ஐ.தே.க பா.உ,இவர் சுடப்பட்டு உயிர் தப்பியவர்)
8. திரு.பஸ்தியாம்பிள்ளை (சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்)
9. திரு.பேரம்பரம் (சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர்)
10. திரு.பாலசிங்கம் (சி.ஐ.டி. சாரஜன்ட்)
11. திரு.ஸ்ரீவர்த்தன (சி.ஐ.டி.பொலிஸ் சாரதி)

இக்கொலைகள் நடந்த சூழல்களும் இத்தொடரில் விளக்கப்படும்.

தொடரும்…

தொகுப்பு: கி.பாஸ்கரன்- சுவிஸ்

Share.
Leave A Reply