திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அதனை அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை – கொழும்பு வீதியில், சர்தாபுர பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

இன்று (17) திருகோணமலை மூதூர், சேனையூர், தம்பலகாமம் பகுதிகள் ஊடாக திருகோணமலை நகரத்தை நோக்கி, திகோணமலை – கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

இதன்போது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சர்தாபுர பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்திருந்தனர்.

அந்த பகுதியில் பொலிசார், இராணுவ புலனாய்வுத்துறையினரும் பிரசன்னமாகியிருந்ததாகவும், பொலிசார் தாக்குதலை தடுக்க தவறியதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம் சாட்டினர்.

முதலில் முகத்தை கறுப்புத்துணியால் கட்டிய இளைஞரொருவர் பெரிய கல்லால் வாகனத்தை தாக்கியுள்ளார்.

தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, அடித்து தாக்கியுள்ளனர்.

வாகனத்தில் இருந்தவர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

அங்கு கடமையிலிருந்த பொலிசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த அவர்கள், ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந. காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்த ஊர்திப் பவனிக்கு நேற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று ஒரு குழுவினர் மட்டக்களப்பு, மொறக்கொட்டான்சேனை இராணுவமுகாமுக்கு அருகாமையில் நின்று சிங்கக் கொடிகளை ஏந்தியவாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதனைக் கடந்து சென்றபோது வாழைச்சேனை சந்திக்கு அண்மையில் நின்ற ஒரு குழுவினர் பதாகைகளைத் தாங்கியவாறு மாலை 6.30 மணியளவில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவ்விடத்தைக்கடந்து ஊர்தி பயணித்துக் கொண்டிருந்தபோது அதே குழுவினர் பட்டா ரக வாகனமொன்றில் ஏறி ஊர்தியை முந்திச் சென்று நாவலடியிலுள்ள பொலன்னறுவை – வாகரை – மட்டக்கப்பு சந்தியில் இறங்கி வீதிக்குக் குறுக்காக பதாகைகளை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply