ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த போது முதல் நான்கு ஓவரில் கிட்டதட்ட இலங்கை அணியில் பாதி பேர் பெவிலியன் திரும்புவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 16 ரன்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணி அப்போது வெறும் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பின்பு ஆட்டத்தின் 12ஆவது ஓவரில் தனது ஆறாவது விக்கெட்டை வீழ்த்தி இலங்கை மிக குறைந்தபட்ச ரன்களை இலக்காக வைக்க காரணமாக அமைந்தார்.
விளம்பரம்

மொத்தத்தில் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களை எடுத்த இலங்கை அணி, இந்திய அணிக்கு 51 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவுடன் இதற்கு முன்பு 43 ரன்கள் எடுத்ததே இலங்கை அணியின் குறைந்த பட்ச ஸ்கோராகவுள்ளது. எனவே இது இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ரன்னாகும்.

இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.

துஷன் ஹேமந்தா அவுட் ஆகாமல் 13 ரன்களை எடுத்தார். இதுதான் இலங்கையின் அதிகபட்ச ரன்கள்.

அந்த அணியில் கிட்டதட்ட ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

இன்றைய போட்டியின் முதல் விக்கெட்டை தொடங்கி வைத்தவர் பும்ரா;

ஹர்திக் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தாமதமாக தொடங்கிய இறுதிப் போட்டி

மழையின் காரணமாக இன்றைய போட்டி சற்றுத் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. டாஸின் போது வானம் தெளிவாக இருந்தாலும் டாஸுக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது.

இந்த ஆசிய கோப்பை தொடங்கியதிலிருந்து பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியும் மழையின் காரணமாக ரிசர்வ் டேக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இறுதிப் போட்டியிலும் மழை வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல இன்று மழை வந்தது.

 

விக்கெட்டை இழக்காமல் இலக்கை அடைந்த இந்திய அணி

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என மிக எளிதான ஒரு இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷாந்த் கிஷன் மற்றும் சுஷ்பன் கில் களமிறங்கினர்.

இருவரும் சேர்ந்து வெறும் 6 ஓவரில் 51 ரன்கள் இலக்கை அடைந்தனர்.

இந்தியாவின் சார்பாக இஷான் கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களையும், ஷுப்மன் கில் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய கோப்பை தொடரில் தனது எட்டாவது வெற்றியை பதித்துள்ளது.

யார் இந்த சிராஜ்?

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு முகமது சிராஜூக்கு கிரிக்கெட் உலகில் தொடர்ந்து ஏறுமுகம்தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கால் பதித்த கால கட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித்சிங் பும்ராவும், முகமது ஷமியும் ஆதிக்கம் செலுத்தினர்.

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பிரதான வீச்சாளர்களாக இருக்க, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே அணியில் நுழைந்தார் முகமது சிராஜ்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிகக் குறுகிய கால கட்டத்திலேயே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறியுள்ளார்.

அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை தடுமாறிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருந்தார் முகமது சிராஜ்.

பந்தை வீசும் போது அவர் கைக்கொள்ளும் முறை, வேகமாகவும் துல்லியமாகவும் தொடர்ச்சியாக வீசும் திறன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீசுவது,

பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது போன்றவையே சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜை அபாயகரமான வேகப்பந்துவீச்சாளராக மாற்றியுள்ளன.

Share.
Leave A Reply