• தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் இது தனிப்பட்ட முடிவு அல்ல.
• கட்சியின் முடிவைதான் பேசுவேன்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு தகுதி மீறிய பதவி. அரசியல் கட்சி தலைவருக்கான தகுதி இல்லை,
பா.ஜனதா தலைவருக்கான தகுதியில்லாமல் சிறுமை புத்திக்கொண்ட, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் எண்ணத்தோடு, சிங்கக் கூட்டமாகிய அதிமுக-வை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது.
ஊளையிடும் சிறுநரி தனியாக நிற்கட்டும். நோட்டாவைவிட கீழ்தான் வாக்கு வாங்குவார். அதை தாண்டி வாக்கு வாங்கமாட்டார். அப்படி உள்ளது அவருடைய செல்வாக்கு.
அப்படி இருக்கும்போது பெரியார் பற்றி பேசுகிறார். பெரியாரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
கழக பொதுச்செயலாளரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அம்மாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
கூட்டணி கட்சியை விமர்சனம் செய்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால், அதிமுக தொண்டர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பலமுறை எச்சரித்தோம்.
இனிமேல் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஒரு கருத்து தெரிவித்தால், ஓராயிரம் பதிலடி கொடுக்கப்படும். கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேசி வருகிறார்கள்.
இதை நிறுத்துங்கள் என மேலிடத்தில் அறிவித்துவிட்டோம். பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறார்கள்.
ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலைக்கு காலே கிடையாது. பா.ஜனதா இங்கே கால் ஊன்றவே முடியாது.
அப்படிபட்ட நிலைமை. உங்களது வாக்கு வங்கிகள் எங்களுக்குத் தெரியும். எங்களை வைத்துதான் உங்களுக்கு அடையாளம்.
தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். கூட்டணி இப்போதைக்கு இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு.
இது தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் முடிவைதான் தெரிவிப்பேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.