கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 6,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இப்புயல், இரண்டு அணைகளை தகர்த்துள்ளதுடன், துறைமுக நகரமான டெர்னாவின் பெரும்பகுதியை அழித்துள்ளது.
பல ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் அடித்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எச்சங்கள் கரைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கின்றன.
இந்த பயங்கரமான பேரழிவு, காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்த கடுமையான வானிலையின் விளைவு மட்டுமல்ல, இது நாட்டை சின்னாபின்னமாக்கி உள்நாட்டுப் போரில் மூழ்கடித்த, 2011 இல் லிபியாவிற்கு எதிராக நேட்டோ நடத்திய போரில் இருந்து ஊற்றெடுக்கிறது.
லிபியாவில் நேட்டோ போரை தொடங்கியவர்கள் அல்லது அதை ஒரு “மனிதாபிமான” தலையீடு என்று பாராட்டியவர்கள் மற்றும் இன்று உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு ஆதரவளிப்பவர்கள் டெர்னா பேரழிவிற்கு நேரடி அரசியல் மற்றும் தார்மீக பொறுப்பாளிகளாக இருக்கின்றனர்.
Derna’s dams
கடந்த ஆண்டு, நீர்வியலாளர் அப்துல் வானீஸ் ஆஷூர், டெர்னாவின் அணைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஒரு பெரிய வெள்ளத்தினால் “இரண்டு அணைகளில் ஒன்று இடிந்து விழும் அபாயம் ஏற்படும் … ஒரு பிரமாண்டமான வெள்ளம் ஏற்படுமாயின் அதன் விளைவு, வாடி இன மற்றும் நகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கைவிடுத்து கட்டுரைகளை எழுதினார்.
கேர்னல் மும்மர் கடாபி
எவ்வாறாயினும், 2011 போரின் போது, கேர்னல் மும்மர் கடாபியின் ஆட்சியை நேட்டோ அழித்ததில் இருந்து, கிழக்கு மற்றும் மேற்கு லிபியாவில் உள்ள போட்டி அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக, அணையில் திருத்த வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை.
“கடாபி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் 10 ஆண்டுகால போர்கள், கொள்கைப் போட்டி மற்றும் தனிமையினால் இரு அரசாங்கங்களும் உள்கட்டமைப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டன.” என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அதிகாரி கிளவ்டியா கஜ்ஜினி பிரான்ஸ் 24 இடம் கூறினார்.
எவ்வாறாயினும், வெள்ளத்திற்கான நிலைமைகளை உருவாக்கிய, இந்த உள்நாட்டுப் போரைத் தூண்டிய நேட்டோ சக்திகளின் பங்கு முறையாக மறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள் லிபியாவில் 2011ல் போரைத் தொடங்கியபோது, முக்கிய ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடது கட்சிகளில் உள்ள தொழில்முறை பொய்யர்களை நம்பி, போரை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒரு சிலுவைப் போராக விற்றனர். இந்த அனைத்து சக்திகளின் கைகளிலும் இரத்தம் சிந்துகிறது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசி ஆகியோர் அடங்குவர்.
இவர்களுடைய அரசாங்கங்கள் 2011 இல் லிபியா மீது போர் நடத்துவதற்கு மிகக் கடுமையான அழுத்தம் கொடுத்தன.
நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் CNN போன்ற முக்கிய ஊடகங்கள் மேலும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜுவான் கோல் போன்ற கோழைத்தனமான மற்றும் இணக்கமான கல்வியாளர்களின் படைகளும், பிரான்சின் பேராசிரியர் ஜில்பேர் ஆஷ்கார் போன்ற போலி-இடது அரசியல் செயற்பாட்டாளர்களும், மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) அனைத்துமே CIA-அதிகாரத்தினால் செய்யப்பட்ட பிரச்சாரத்தை பரப்பின.
இன்று, அவர்கள் நேட்டோவின் உக்ரேன் போரை ஆதரிப்பது போல் அன்று லிபியாவில் நடந்த போரை ஆதரித்தனர்.
Abdelhakim Bekhadj,
பிப்ரவரி 2011 இல் லிபியாவின் மீது நேட்டோ போரைத் தொடங்கியது, அதன் தலையீட்டினால் மட்டுமே கிழக்கு லிபியாவில் கடாபியினால் எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும் என்று கூறியது,
அந்த பகுதி தான் இப்போது வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளது. கடாபியைக் கவிழ்க்க, லிபிய இஸ்லாமிய சண்டைக் குழுவின் தலைவர் அப்தெல்ஹகிம் பெக்காட்ஜி, CIAயின் கைக்கூலி கலீஃபா ஹஃப்தார் மற்றும் மிஸ்ரதா படைப்பிரிவின் தலைவர்களின் தலைமையில் போட்டி இஸ்லாமிய மற்றும் பழங்குடி ஆயுதக்குழுக்களின் தொகுப்புக்கு நேட்டோ ஆயுதம் வழங்கியது.
அதன் பின்னர் நேட்டோ ஆதரவு கிளர்ச்சிப் படைகளை எதிர்த்துப் போரிட்ட இராணுவப் படைகள் மீது குண்டுவீசித் தாக்கி, அதன் பினாமி படைகளுக்கு வான் ஆதரவை வழங்கியது.
கடாபியின் சொந்த நகரமான சிர்டே மற்றும் திரிப்போலி மீது நேட்டோ குண்டுவீசித் தாக்கியதால், 25,000 பேர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த ஏழு மாதப் போருக்குப் பிறகு போர் முடிவுக்கு வந்தது. அக்டோபர் 20, 2011 அன்று, பிரான்சின் உளவுத்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு கும்பல், சிர்டே நகரின் இடிபாடுகளில் சிக்கிய கடாபியை பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்தது.
கடாபியின் மரண நாள் அன்று அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குதூகலிப்புடன் சிரித்துக்கொண்டே “நாங்கள் வந்தோம், நாங்கள் பார்த்தோம், அவர் இறந்துவிட்டார்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
லிபியா மீதான தாக்குதலை மனித உரிமைகளுக்கான வெற்றியாகப் போற்றுபவர்கள், ஏதோ ஒரு வகையில், அதன் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களில் தலையிட்ட நாடுகளைத் தாக்கித் தகர்ப்பதில் அமெரிக்கா ஆற்றிய அசுரத்தனமான பங்கை நினைத்துப் பார்க்கவில்லை.
கடந்த காலம் மட்டும் மறக்கப்படவில்லை, (வியட்நாம், நிகரகுவாவில் “கொன்ட்ராஸின்” காட்டுமிராண்டித்தனமான போர், அங்கோலா மற்றும் மொசாம்பிக்கில் உள்நாட்டுப் போர்களைத் தூண்டியது, காங்கோவில் லுமும்பா தூக்கியெறியப்பட்டு கொலை செய்யப்பட்டது, தென்னாப்பிரிக்கா நிறவெறி ஆட்சிக்கு நீண்டகால ஆதரவு, ஈராக் மீதான் படையெடுப்பு ஆகியவை) நிகழ்காலம் புறக்கணிக்கப்படுகிறது.
கடாபி தனது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக அவரை அகற்றும் பணியை போருக்கு ஆதரவான “இடது” அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் போது, ஆட்கொல்லி ஆளில்லா விமானங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மீது ஏவுகணை மழையை பொழிந்து கொண்டிருந்தது, அங்கு தினசரி மக்கள் கொல்லப்பட்டனர்.
போர் தொடங்கியதும், அதற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பின் மீது, மத்திய கிழக்கு பதிவர் ஜுவான் கோல், தாக்குதல் தொடுத்து இவ்வாறு அறிவித்தார், ”இடதுசாரிகள் வெளிநாட்டு தலையீட்டை முழுமையாக தடையாக்குவதைத் தவிர்க்க வேண்டும், ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’ மற்ற எல்லா மதிப்புகளையும் ஒரு சிந்தனையற்ற வழியில் துருப்பு சீட்டாக்குவது வெளிப்படையான அபத்தமான நிலைப்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. அத்தோடு, நேட்டோவுக்கு நான் தேவைப்பட்டால், நான் அங்கே இருப்பேன்” என்று அவர் மேலும் கூறினார்,
அதேபோல், லண்டனின் கிழக்கத்திய மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியரும், பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆலோசகராக செயல்படும் பப்லோவாத NPA இன் உறுப்பினருமான ஆஷ்கார், லிபியாவின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிப்பதை போர் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை ஒப்புக்கொண்டாலும், அவர் நேட்டோவுக்கு ஆதரவளித்தார்.
மேற்கத்திய பதிலிறுப்பு, நிச்சயமாக, சுவையான எண்ணெய் வாசனை கொண்டது என்று ஆஷ்கார், 2011 இல் கூறினார். இருப்பினும், போரை எதிர்ப்பதற்கு இது ஒரு காரணம் அல்ல என்று அவர் வாதிட்டார்:
ஒரு மக்கள் தொகை உண்மையிலேயே ஆபத்தில் இருக்கும் ஒரு சந்தர்ப்பம் இங்கே உள்ளது. அதைப் பாதுகாக்கக்கூடிய நம்பத்தகுந்த மாற்று எதுவும் இல்லை. கடாபியின் படைகளின் தாக்குதலுக்கு இன்னும் சில மணிநேரம் அல்லது அதிகபட்சம் சில நாட்களே உள்ளன. ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகள் என்ற பெயரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.
கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்டவுடன், நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோப் லிபியாவிற்குச் சென்று நேட்டோ போர் தன்னை திரிப்போலியில் ஒரு கதாநாயனாக மாற்றியதாக பெருமையடித்துக் கொண்டார். “நன்றி அமெரிக்கா!” என்ற தலைப்பில், கிறிஸ்டோப் எழுதினார்:
அரபு உலகில் அமெரிக்கர்கள் பெரும்பாலும் கதாநாயகர்கள் அல்ல, ஆனால் இங்கே லிபிய தலைநகரில் இடைவிடாத கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அறிந்த சாதாரண மக்களை நான் எதிர்கோண்டேன். பின்னர் அதே சொற்றொடரின் மாறுபாடுகளை ஆர்வத்துடன் மீண்டும் கூறினர்: ‘நன்றி அமெரிக்கா!’
உண்மையில், லிபியாவில் நேட்டோவின் வெற்றி மனித சோகத்தில் விளைந்தது. எண்ணெய் வளம் மிக்க கிழக்கு லிபியா, பெரிய நேட்டோ எண்ணெய் நிறுவனங்களுடனான தனது சொந்த ஒப்பந்தங்களைத் துண்டிக்கவும், பிரிந்து செல்லவும் முயற்சித்த பின்னர், நாடு மீண்டும் 2012 இல் உள்நாட்டுப் போரில் மூழ்கியது.
அடுத்த தசாப்தத்தில் உள்நாட்டுப் போர் அதிகரித்ததால், இன்னும் பல்லாயிரக்கணக்கான இறப்புகள் ஏற்பட்டன. பொருளாதார உற்பத்தி 2012ல் $92 பில்லியனில் இருந்து கடந்த ஆண்டு $46 பில்லியனாக குறைந்தது, அதே சமயம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி-தோராயமாகச் சொன்னால், சராசரி தனிநபர் வருமானம்-$15,765ல் இருந்து $6,716 ஆக குறைந்தது.
லிபியாவை நேட்டோ கைப்பற்றுவது அமைதி, செழிப்பு மற்றும் ஜனநாயகத்தை உருவாக்கும் என்று வாதிட்ட அனைத்து அதிகாரிகளும் பேராசிரியர்களும், அவர்கள் ஆதரித்த மற்றும் தீவிரமாக ஊக்குவித்த, போரின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இறப்புகள் மற்றும் கணக்கிட முடியாத மனித துயரங்களுக்கு பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள்.
“லிபியர்களை சாதாரண வாழ்க்கைக்கு அனுமதிக்கும்” வாய்ப்பை உருவாக்கியதால் தான் போரை ஆதரித்ததாக கோல் கூறினார். ஆனால் ஜனநாயகம் மற்றும் இயல்புநிலைக்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர் லிபியாவை நாசமாக்கியது மற்றும் நாட்டில் அடிமைத்தனத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வழிவகுத்தது.
2017 இல், உலக ஊடகங்களில் பல அறிக்கைகளை மேற்கோள் காட்டி, சர்வதேச மன்னிப்புச்சபை லிபியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் அகதிகளை தடுத்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட முகாம்களில், கைதிகள் தாக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அடிமைத்தனத்திற்கு ஏலத்தில் விற்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டது.
இன்று, போர் பிரச்சாரகர்கள் டெர்னாவில் ஏற்பட்ட பேரழிவு மற்றும் போருக்கு அவர்களின் ஆதரவு வகித்த பங்கு பற்றி என்ன சொல்கிறார்கள்? கோல் மற்றும் ஆஷ்கார், அவர்களின் வலைப்பதிவுகளில், எதுவும் கூறவில்லை. அவர்கள் லிபியாவில் உருவாக்க உதவிய பேரழிவை விட்டுவிட்டு, சமீபத்திய நேட்டோ போருக்கு ஆதரவாக-இம்முறை ரஷ்யாவிற்கு எதிராக ஆதரவை வழங்குவதற்கு நகர்ந்துள்ளனர்.
உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போர் நேரடியாக நேட்டோவால் தொடங்கப்பட்ட இராணுவ விரிவாக்கத்தின் சுழலில் இருந்து வருகிறது.
லிபியா போருக்குப் பிறகு, நேட்டோ சக்திகள் விரைவில் கடாபிக்கு எதிராகப் பயன்படுத்திய, அதே இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை சிரியாவில் போரை நடத்த பினாமி படைகளாக அணிதிரட்டினர்.
செப்டம்பர் 2013 இல், நேட்டோ கப்பல்கள் சிரியா மீது குண்டுவீசுவதைத் தடுக்க செவஸ்டோபோலில் இருந்த ரஷ்ய போர்க்கப்பல்கள் தலையிட்டன. ஐந்து மாதங்களுக்குள், வாஷிங்டனும் பேர்லினும் பெப்ரவரி 2014 உக்ரேனில் நடந்த மைதான் சதியை ஆதரித்து, ரஷ்யா செவஸ்டோபோல் மற்றும் முழு கிரிமியன் தீபகற்பத்தையும் கீயேவில் புதிதாக நிறுவப்பட்ட நேட்டோ-சார்பு ஆட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தன.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பணி, இந்த இராணுவ விரிவாக்கத்தின் சுழலை நிறுத்துவதற்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதாகும். நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் போரை தீவிரப்படுத்தி, ரஷ்யாவையும் அதன் இயற்கை வளங்களையும் துண்டாடுவது பற்றி விவாதிக்கையில், இந்த தடவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக அவர்கள் மீண்டும் தங்களை “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரத்தின்” பாதுகாவலர்களாக காட்டிக் கொள்கிறார்கள் – உண்மையில், லிபியா மீதான பலாத்காரம் மற்றும் டெர்னாவில் நடந்த பேரழிவு ஆகியவை, அதன் சூறையாடும் போர்களில் நேட்டோ வெற்றியின் பேரழிவுகரமான விளைவுகளைப் பற்றிய அழிக்கமுடியாத எச்சரிக்கைகளாக இருக்கின்றன.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.