தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு பகுதிகளிலும் வித்தியாசமான வழிகளில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

குறிப்பாக சென்னை கீழ்கட்டளையில் சந்திரயான் 3 ராக்கெட்டை, விநாயகர் லேப்டாப் மூலம் விண்ணில் ஏவுவதுபோல தத்ரூப வடிவில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஐயாயிரம் தேங்காய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அரங்கில் பிரம்மாண்டமான விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் இயற்கைச் சூழலை பாதுகாக்கும் வகையில் கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட 1000 கிலோ அளவில் நவதானியங்களை கொண்டு 12 அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

அந்த வகையில், மகாராஷ்டிரா முழுவதும் விநாயக சதுர்த்தி 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த ஆண்டு திருவிழா, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருக்கிறது.

அதற்காக வடமாநிலமான மகாராஷ்டிராவில் மும்பையில் கவுட் சரஸ்வத் பிராஹ்மன் (ஜிஎஸ்பி) சேவா மண்டல் சார்பில் இந்தியாவின் பணக்கார விநாயகர் சிலையை இன்று அமைத்துள்ளனர்.

இந்தச் சிலைக்காக அவர்கள், 69 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடனும், 295 கிலோ கிராம் வெள்ளிப் பொருட்களுடனும் கூடிய மிகப் பணக்கார விநாயகரை வடிவமைத்துள்ளனர்.

முதல்முறையாக, முழுக்க முழுக்க தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் இருக்கும் இந்த விநாயகரை, பாதுகாக்கும் நோக்கில் ஆங்காங்கே கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த விநாயகர் சிலைக்காக ரூபாய் 360.45 கோடி அளவுக்கும் இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டுள்ளது.

69வது ‘கணபதி உத்சவ்’ கொண்ட்டாட்டத்தை நடத்தும் சேவா மண்டல், நாளை (செப்டம்பர் 19) சந்திரயான் -3 வெற்றிக்காக சிறப்புப் பூஜைகளும், அடுத்து செப். 20ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து, திறப்பு விழா காண்பதற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகளும் செய்யப்பட இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply