16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளர் பாலாஜி கபா. இவர் Madhav Media Private Ltd என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
இந்த நிறுவனம் மூலம் நடிகர் சிம்பு நடித்த `ஈஸ்வரன்’ உள்ளிட்ட படங்களை பாலாஜி கபா தயாரித்திருக்கிறார்.
பாலாஜி கபாவும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தரும் நண்பர்கள். அதனால் இருவரும் சேர்ந்து பிசினஸ் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
அந்தத் திட்டத்தில் 15,83,20,000 ரூபாயை பாலாஜி கபா முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்தத் திட்டத்தை ரவீந்தர் சொன்னபடி தொடங்கவில்லை.
அது குறித்து ரவீந்தரிடம் பாலாஜி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் பாலாஜி, தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பத் தரும்படி ரவீந்தரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரவீந்தர், மழுப்பலான பதிலை தெரிவித்து மாதக்கணக்கில் பாலாஜியை ஏமாற்றிவந்திருக்கிறார்.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாஜி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், 2020-ம் ஆண்டு Libra Production Pvt Ltd என்ற நிறுவனத்தை நடத்திவரும் ரவீந்தர் என்பவர் தனக்கு (பாலாஜி) அறிமுகமானார்.
பின்னர் அவர், நகராட்சி திடக்கழிவுகளை மின்ஆற்றலாக மாற்றுதல் திட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தில் நான் சுமார் 16 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால், ரவீந்தர் அந்தத் திட்டத்தை ஆரம்பிக்காமல் என்னை ஏமாற்றிவந்தார்.
எனவே, ரவீந்தரிடமிருந்து என்னுடைய பணத்தை மீட்டுத் தருவதோடு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் EDF பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.
மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில், போலீஸார் இந்தப் புகாரை விசாரித்து வந்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட ரவீந்தரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் பாலாஜி கபா வங்கிக் கணக்குகளிலிருந்து ரவீந்தர் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது.
அந்த ஆதாரங்கள் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை போலீஸார் கைதுசெய்தனர்.
அவரின் வங்கிக் கணக்குகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது அதில் பணம் இல்லை. இருப்பினும் அந்த வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த வழக்கில் ரவீந்தரின் நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களையும் போலீஸார் தேடிவருகிறார்கள்.
ஏற்கெனவே ரவீந்தர் மீது மத்திய குற்றப்பிரிவில் இரண்டு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.