தற்போது ஜெனிவாவில் இடம்பெற்று வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரில், இலங்கை நிலவரங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 11ஆம் திகதி இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல்– நசீவ் பேரவையில் சமர்ப்பித்திருந்தார்.
அதையடுத்து நடந்த ஊடாடல் கலந்துரையாடலில், உரையாற்றிய இலங்கைப் பிரதி நிதி ஹிமாலி அருணதிலக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்து, அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்திருக்கிறார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்துக்கு இணங்க, 16 பக்கங்களைக் கொண்ட இந்த எழுத்துமூல அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னைய அறிக்கைகளில் வலியுறுத்தப்படாத ஓரிரு விடயங்கள் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த விடயங்களில், மிக முக்கியமானது, பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு பற்றியதாகும்.
“இராணுவச் செலவினங்களைக் கணிசமாகக் குறைத்தல், ஆய்வு செய்தல் மற்றும் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய, விரிவான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு,” ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், தனது அறிக்கையில், இலங்கை அரசுக்கான பரிந்துரையில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளில், இராணுவ மயப்படுத்தல் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
அரசாங்கத்திலும், வடக்கு, கிழக்கிலும் இராணுவ மயமாக்கல் அதிகளவில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு வந்தது.
ஆனால், இந்த அறிக்கையில், பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு வலியுறுத்தப்பட்டிருப்பதுடன், புதிதாக ஒரு விடயம் குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு என்ற விடயத்தை தனியானதொரு தலைப்பின் கீழ், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது.
ஒன்று, பாதுகாப்பு மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அளித்துள்ள வாக்குறுதிகள்.
இரண்டு, தொடர்ந்தும் தீவிரமாக இருந்து வருகின்ற இராணுவத் தலையீடுகள், இராணுவ மயமாக்கல்.
மூன்று, பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான காரணியாக இருப்பது.
இது தவிர நான்காவதாக, ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது. அது என்னவென்று, இந்த பத்தியில் இன்னொரு பகுதியில், விபரிக்கப்படும்.
2023 ஜனவரி 13ஆம் திகதி, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இலங்கை இராணுவத்தின் தற்போதைய எண்ணிக்கை 200,800 என்றும் அது, 2024 ஆண்டுக்குள் 135,000 ஆகவும், 2030 ஆண்டுக்குள் 100,000 ஆகவும் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இராணுவத்தை மேலும் குறைத்து, இராணுவ வரவு– செலவுத் திட்டத்தை மாற்றியமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும், அது அண்மைய ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்களை பிரதிபலிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து, இந்த நடவடிக்கைகள் ஆழமான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்குள் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தீவிரமான மனித உரிமை மீறல் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களில் தொடர்புடைய, தனி நபர்களை படையில் இருந்து அகற்றும், படைப்பிரிவுகளை கலைக்கும் விரிவான மற்றும் வெளிப்படையான சோதனை முறையை பின்பற்றுமாறும் வலியுறுத்தியிருக்கிறது மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்.
இது இதற்கு முன்னர் குறிப்பிடப்படாத ஒரு விடயம்.
அதாவது முன்னைய அறிக்கைகளில் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் , அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விசாரணை செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், குற்றங்களில் ஈடுபட்ட தனிநபர்களை படையில் இருந்து நீக்குமாறும், படைப்பிரிவுகளை கலைக்குமாறும் இப்போது தான் கூறப்பட்டிருக்கிறது.
முன்னைய அறிக்கைகளில், போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, 53, 55, 58, 59, 68 ஆவது டிவிசன்கள் உள்ளிட்ட பல படைப்பிரிவுகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
இந்தப் படைப்பிரிவுகளில் சிலவற்றில் கட்டளை அதிகாரிகளாக பணியாற்றியதற்காகவே, அமெரிக்கா, சில உயர்மட்ட படை அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்தது.
இப்போது, குற்றமிழைத்த படைப்பிரிவுகளை கலைத்து விடுமாறு வலியுறுத்தியிருக்கிறது ஐ.நா.
ஆனால் அவ்வாறு கலைக்கப்பட வேண்டிய படைப்பிரிவுகள் எவையென ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் குறிப்பிடவில்லை.
தற்போதைய பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமற்ற, முன்னைய மோதல் பகுதிகளில் இருந்து- இராணுவப் பிரசன்னத்தை படிப்படியாக குறைக்குமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கிறது.
பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கு, குற்றமிழைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது முக்கியமானது.
தனிநபர்கள் அல்லது படைப்பிரிவுகள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
ஒட்டுமொத்த இலங்கை இராணுவமும் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை குறிப்பிடவில்லை.
குற்றமிழைத்த படையினரையும், படைப்பிரிவுகளையும் தான் கலைக்குமாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
குற்றமிழைத்த தனிநபர்களையே தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்கும் அரசாங்கம், குற்றங்களுடன் தொடர்புடைய படைப்பிரிவுகளைக் கலைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இவ்வாறானதொரு பரிந்துரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் இருந்து வரும் என்று அரசாங்கம் எதிர்பார்த்திருக்காது.
ஏனென்றால், அண்மையில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, கிளிநொச்சியில் உள்ள 1ஆவது கோர்ப்ஸ் படைப்பிரிவின் தலைமையகத்துக்குச் சென்று, அதன் கட்டளைத் தளபதியை சந்தித்திருந்தார்.
அதன் போது, இராணுவ மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்தும், இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவைப்படும் உதவிகள் குறித்தும் அவர் கலந்துரையாடியிருந்தார்.
அந்த தகவல் வெளியான போது அரசியல் வட்டாரங்களில் அது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
ஏனென்றால், இலங்கை இராணுவம் போர்க்காலத்தில் மீறல்களில் ஈடுபட்டதென்றும், குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்- தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தது அமெரிக்கா.
பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குற்றம்சாட்டப்பட்ட படை அதிகாரிகள் பலருக்கு தடை விதித்தது. குறிப்பிட்ட படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா மறுக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்துடன், மனிதாபிமான விடயங்கள் தவிர, ஏனைய பயிற்சி மற்றும் ஒத்துழைப்புகளையும் மட்டுப்படுத்தியது.
கடற்படை, விமானப்படையுடன் உறவுகளை பேணி வந்தாலும், இராணுவத்துடன் உறவுகளை தவிர்த்து வந்தது.
இது பொறுப்புக்கூறலுக்கான அமெரிக்காவின் அழுத்தமாகவே பார்க்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கிளிநொச்சிக்குச் சென்று 1ஆவது கோர்ப்ஸ் படைப்பிரிவுடன் கலந்துரையாடியது ஆச்சரியத்தையே கொடுத்தது.
எனினும், 1ஆவது கோர்ப்ஸ் போர்க்காலத்துக்குப் பின்னரே உருவாக்கப்பட்டது.
ஆயினும், அதில் இடம்பெற்றுள்ள 53, 58 ஆவது டிவிசன்களும், விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ படைப்பிரிவும், போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுடன் அதிகம் தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தவை.
அவ்வாறான படைப்பிரிவுடன் அமெரிக்க தொடர்புகளை ஏற்படுத்த – பலப்படுத்த முயன்றமை கூட, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், பாதுகாப்பு மறுசீரமைப்பு விவகாரம் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
அது தான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நான்காவது காரணம்.
அதேவேளை, குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய நபர்களையும், படைப்பிரிவுகளையும் கலைப்பதன் மூலம், இலங்கை இராணுவத்துக்கு வெள்ளையடிக்கும் வேலையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் பார்க்கிறதா என்ற விமர்சனங்கள் எழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த ஒரு தசாப்தமாக, குற்றமிழைத்த படையினர் மீது நடவடிக்கைகளை எடுக்கும் விடயத்தில், ஐ.நாவின் ஒட்டுமொத்த முயற்சிகளும், தோல்வியையே சந்தித்திருக்கின்றன.
இவ்வாறான நிலையில், தண்ணீரில் இருந்து மீனை பிரித்து தரையில் போட்டு விட்டால், அதனை சுலபமாக சாகடித்து விடலாம் என்று ஐ.நா கணக்குப் போடக் கூடும். ஆனால், அரசாங்கத்தின் நிழலில் இருக்கும் வரையில் தான், இலங்கையில் போர்க்குற்றவாளிகளுக்கு பாதுகாப்புக் கிடைக்கும். என்று ஐ.நா தவறாக கணக்குப் போடுகிறது.
தண்டனையில் இருந்து தப்பித்தலும், தப்பிப்பதற்கு ஒத்துழைப்பதும் இலங்கையில் ஊறிப்போன அரசியல் கலாசாரம். ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தாலும் சரி இல்லாது போனாலும் சரி, தவறிழைத்தவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
அந்த நிலை மாற்றியமைக்கப்படாத வரையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் எத்தனை அறிக்கைகளை சமர்ப்பித்தாலும், அது குளத்தில் வீசிய கல்லாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக இருக்குமே தவிர, வேறெந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.
-சுபத்ரா–