சணல் 4 தொலைகாட்சியின் கானொளி இலங்கை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்தக் கானொளியின் இலக்கு என்ன, என்பதற்கான பதில் அந்தக் காணொளியிலேயே இருக்கின்றது.

பிள்ளையானின் பேச்சாளராக இருந்தவரான ஆசாத் மௌலானா என்பவரால் கூறப்படும் விடயங்கள்தான், குறித்த காணொளியின் பிரதான விடயமாகும்.

அவரது கூற்றின்படி, இந்தக் தாக்குதலானது, ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதி நடவடிக்கையாகும்.

பிள்ளையான்

இதில் பிள்ளையானும் தொடர்புபட்டிருக்கின்றார். பிள்ளையானுடன் இருந்த ஒருவர் என்னும் வகையில் பிள்ளையானுடன் தொடர்புடுத்தியே, மௌலானா விடயங்களை கூறுகின்றார்.

அப்படிக் கூறும் போதுதான் தனது பேச்சு எடுபடுமென்றும் அவர் கருதியிருக்கலாம்.
காணொளியின் இலக்கு மிகவும் தெளிவானது.

அதாவது, ராஜபக்சக்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது. இந்த ஒரு நோக்கத்தின் அடிப்படையில்தான் குறித்த கானொளி வெளியிடப்பட்டிருக்கின்றது.

ராஜபக்சக்களின் செல்வாக்கு ஏற்கனவே சரிவுநிலையில்தான் இருக்கின்றது. பின்னர் எதற்காக ராஜபக்சக்கள் இலக்கு வைக்கப்பட வேண்டும்? கோட்டபாய ராஜபக்சவோ அல்லது ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர்கள் எவருமே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இல்லை.

இந்தப் பின்புலத்தில் நோக்கும் போது, இந்தக் காணொளிக்கு பின்னால் இரண்டு நோக்கங்கள் இருக்கலாம்.

ஒன்று, ராஜபக்சக்கள் மற்றும் ராஜபக்சக்களின் நிழலிலிருந்த கடும்போக்குவாதிகள் எழுச்சியடைவதற்கான வாய்ப்புக்களை தடுப்பது.

அண்மைக்காலமாக அவ்வாறானதொரு தோற்றம் தென்பட்டது. இரண்டு, இவ்வாறான தடைகளையும் மீறி, ஒரு வேளை, ராஜபக்சக்கள் எழுச்சியடைந்தாலும் கூட, அவர்களை இறுக்குவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்துவது.

ஏனெனில், இதில் இலங்கையர்கள் மட்டும் கொல்லப்படவில்லை. ஜரோப்பியர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஜந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே குறித்த காணொளிக்கு உடனடி இலக்குமுண்டு அதே வேளை, நீண்டகால இலக்கும் உண்டு. ஜரோப்பியர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பில் தலையீடு செய்வதற்கான நியாயபூர்வமான உரிமை ஜரோப்பிய ஊடகம் ஒற்றிற்குண்டு.

அந்த வகையில் சணல் 4 இதில் தலையீடு செய்திருப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று எண்ணுவதும் நியாயமானதுதான்.

ஆனால் ஒரு சாதாரண நபரது வாக்குமூலத்தை மட்டும் முன்வைத்து, இவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டிருப்பதுதான் சிக்கலானது. தவிர, இந்தக் காணொளி தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுகொள்ளவில்லை.

இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல். இந்தக் தாக்குதல் இடம்பெற்று, இரு தினங்களின் பின்னர், எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.எஸ்.ஜ, இந்தக் தாக்குதலுக்கு உரிமைகோரியிருந்தது.

அதன் உத்தியோகபூர்வ செய்தி அமைப்பான அமாக், (யுஅயங நேறள யுபநnஉல) இதனை உறுதிப்படுத்தியதுடன், தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளை, அமைப்பின் போராளிகளென்றும் அறிவித்திருந்தது.

அதே வேளை, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் வாராந்த வெளியீடான அல் நபா, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் மூலம், சிலுவை யுத்தக்காரர்களுக்கான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தது.

இந்தக் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்தே, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி சில வருடங்களுக்கு பின்னர் தனது இருப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சுமார் ஜந்து வருடங்களுக்கு பின்னர் பாக்தாதியின் முகம் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டது. ஜ.எஸ்.ஜ.எஸ், அமெரிக்காவினால் பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது,

அதன் சர்வதேச வலையமைப்புகள் முற்றிலுமாக, வீழ்சியுற்றுவிட்டது என்னும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்தான், இலங்கையில் இந்தக் தாக்குதல் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்தே அல் பாக்தாதி உற்சாகமாக தனது இருப்பை வெளிப்படுத்துகின்றார். அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமான ராண்ட் அப்போது, பாக்தாதி வெளியிட்ட காணொளியின் பொருள் என்ன என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன.

இலங்கையில், இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஏற்கனவே இந்திய உளவுத்துறை, இலங்கை புலனாய்வு பிரிவை எச்சரித்திருந்தது.

ஆனால் அதன் பின்னரும் இந்தக் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. அப்போது, இலங்கையின் முப்படைகளின் தலைவராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன.

அவ்வாறாயின் இது தொடர்பான முதல் குற்றவாளிவாக மைத்திரிபால சிறிசேனவைத்தான் குறிப்பிட வேண்டும். இந்த அடிப்படையில் ஏற்கனவே மைத்திரியால நீதிமன்றத்தினால் குற்றவாளியாகவும் இனம்காணப்பட்டிருக்கின்றார்.

இந்தக் தாக்குதலில் ஜந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க உள்ளக உளவுத்துறையான எப்.பி.ஜ விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இரண்டு வருட விசாரணைகளின் விளைவாக 2020 டிசம்பர் மாதம் 11ம் திகதி, லொஸ்ஏஞ்சல் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கொன்றையும் தாக்கல் செய்திருந்தது.

இந்தக் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் மற்றும் தாக்குதலுக்கான உதவிகளை செய்தவர்கள் என்னுமடிப்படையில் மூன்று முஸ்லிம் நபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆசாத் மௌலான

நிலைமை இவ்வாறிருக்கின்ற போது, மூன்று வருடங்களின் பின்னர், ஆசாத் மௌலான என்னும் ஒரு நபரின் வாக்குமூலத்தை முன்வைத்து,

ஈஸ்டர்தின தற்கொலைக் தாக்குதலானது, உள்ளுர் அரசியலுக்காக மேற்கொள்ளப்பட்டதாக சணல் 4 ஒரு புதிய கதையை கூற முற்படுகின்றது.

விடயங்களில் இலங்கை புலனாய்வுத் துறை கவனக் குறைவாக இருந்திருக்கின்றது என்னும் குற்றச்சாட்டை முன்வைக்கலாம்.

ஆனால் எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.எஸ்.ஜ அமைப்பின், தொடர்பை முற்றிலும் நிராகரிக்கும் வகையில், இவ்வாறானதொரு காணொளியை வெளியிட்டிருப்பது,

சணல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் தொடர்பான நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கின்றது.

கோட்டபாய ராஜபச்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக பிள்ளையானின் உதவியுடன், தற்கொலை குண்டுதாரிகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தர்க்கரீதியில் நம்பக் கூடிய கதையாக இல்லை.

ஆசாத் மௌலானா என்னும் நபர் தனது சொந்த தேவைகளுக்காக அல்லது வேறு எவருடைய தேவைகளுக்காகவோ, சில விடயங்களை வலிந்து புனைவதான தோற்றமே தெரிகின்றது.

கோட்டபாய ராஜபக்ச முஸ்லிம்கள் தொடர்பில் ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவரல்லர்.

இது முஸ்லிம்களுக்கும் தெரிந்த விடயம்;. இந்த நிலையில் கோட்டபாயவின் தேவைக்காக, பிள்ளையானின் ஆதரவுடன், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் வெடித்து சிதறியிருக்கின்றார்கள் என்பது விடயத்தின் கனதியை மலீனப்படுத்துவதாகவே இருக்கின்றது.

பிள்ளையானால் முஸ்லிம்களை தற்கொலை குண்டுதாரிகளாக்க முடியுமா?

கோட்டபாய மற்றும் பிள்ளையான் தொடர்பில் அரசியல்ரீதீயில் பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கலாம்.

ஜனநாயக தளத்தில் அதனை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. அது வேறு விடயம். கோட்டபாய ராஜபக்ச தமிழ் மக்களை பொறுத்தவரையில் முற்றிலும் எதிர்மாறானதொரு சிங்கள அரசியல்வாதி. தன்னையொரு சிங்கள பௌத்த தலைவன் என்று பிரகடணம் செய்த ஒருவர்.

இப்படியான பல்வேறு சிக்கல்கள் கோட்டபாயவின் பக்கத்திலுண்டு. அடிப்படையில், கோட்டபாய போன்ற ஒருவர் ஆட்சிக்கு தகுதியான ஒருவருமல்ல. கோட்டபாய தொடர்பில் இந்த அடிப்படையில் ஒருவர் விவாதித்தால் அதில் முரண்பட ஒன்றுமில்லை.

ஆனால் ஒரு எல்லைதாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை வெறும் உள்ளுர் விவகாரமாக சுருக்குவது ஆபத்தானது. இது மீண்டும், இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகள் எழுச்சிகொள்வதற்கான களத்தை இலகுபடுத்தவே பயன்படும்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே, கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் வேர்கொண்டுவருவது தொடர்பில், பல்வேறு தகவல்கள், ஆங்காங்கே வெளியாகியிருந்தன.

அதே வேளை, ஜ.எஸ்.ஜ.எஸ் கருத்தியலால் ஈர்க்கப்படும் போக்கும் துளிர்விடுவதான அவதானத்தையும் சிலர் வெளியிட்டிருக்கின்றனர். இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள், சிரியாவிற்கு சென்று, ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தகவல்களும் வெளியாகியிருந்தன.

இவ்வாறானவர்கள் இந்தியாவின் கேரள மானிலத்திலுள்ள ஜ.எஸ்.ஜ.எஸ் வலமைப்பின் மூலமாகவே, சிரியாவிற்கு சென்றிருப்பதாகவும் ஏற்கனவே இந்திய புலனாய்வு தகவல்கள் உண்டு.

ஆசாத் மௌலான என்னும் நபரும் இந்தியாவிற்கு சென்று, அங்கிருந்தே ஜரோப்பாவில் தஞ்சமடைந்திருக்கின்றார்.

இவர் எவ்வாறான தொடர்புகளின் வழியாக சென்றார், இவர் எதற்காக இவ்வாறான தகவல்களை வெளியிட்டார். ஆசாத் மௌலானாவின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை வேறுவிதமாக விசாரிக்க வேண்டிய அவசியமுண்டு.

அதாவது, எல்லைதாண்டிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள், தங்களின் இலக்கிற்காக, உள்ளுர் அரசியல்வாதிகளை பயன்படுத்தியிருக்கின்றனரா?

இந்தக் கோணத்தில் விசாரணை செய்வதற்கான தேவையுண்டு. குறித்த மௌலானாதான் இதற்கான பிரதான சாட்சியாகும். ஏனெனில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலங்கைக்கான தொடர்பாளராக அவர் செயற்பட்டிருக்கின்றார் என்னும் முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது.

ஜரோப்பிய புலனாய்வுத் துறைகள், விடயத்தை, இந்தப் பின்புலத்தில் விசாரிக்க முற்பட்டால்தான், இதன் உண்மைத் தன்மை வெளியில்வரும்.

– யதீந்திரா

 

Share.
Leave A Reply