p>ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு 10 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் தெஹ்ரான்  இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம்  (பெர்சியா) என்று அழைக்கப்பட்டது.

“ஈரான்” என்னும் சொல் பாரசீக மொழியில் “ஆரியரின் நிலம்” எனப் பொருள்படும். இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்ற மக்களை அதிகளவில் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க நாடு. இங்கு கடந்த வருடம்  உடையால் ஏற்பட்ட வன்முறையால் உயிர்களும் உடைமைகளும் சேதங்களுக்கு உள்ளாகின. உலகம் முழுவதையும் இந்த வன்முறை ஈரம் பக்கம் திரும்பச்செய்தது.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு பொலிஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த  மாஷா அமினி என்ற 22 வயதுடைய பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.

அப்போது சிறப்புப் படை பொலிஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

பொலிஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டமையால் அவர் உயிரிழந்தார். மாஷாவின் மரணம் ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியது. ஆனால் பொலிஸார் தாக்கி இளம் பெண் கொல்லப்பட்ட குற்றச்சாட்டடை அரசுமறுத்தது.ஆயினும்,இந்தசம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.போராட்டங்களின்போது, ஈரானிய பெண்கள் தங்களது கேசத்தை வெட்டி போர்க்கொடி போல் கம்பங்களில் ஏற்றி, அரசுக்கு எதிரான கலகக் குரல்களை வலுவாக்கினர். தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்களை காற்றில் சுழற்றி, அவற்றுக்கு தீயிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, உலக நாடுகளின் பார்வையை ஈரான் வசம் திருப்பியது.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடமாகிவிட்ட போதிலும் உடை தொடர்பான சர்ச்சைகள் அங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய மசோதாவை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது.

290 உறுப்பினர்களை கொண்ட ஈரான் பாராளுமன்றத்தில் இந்த ஹிஜாப் மசோதா  152 உறுப்பினர்களின் வாக்குகளின் ஆதரவுடன் புதிய சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, “பொது இடங்களில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்கள், அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் விதிகளின்படி, பொது இடங்களில் “தகாத முறையில்” உடை அணிந்தவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த மசோதா அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என்று கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.

மேலும் பெண் சாரதிகள் அல்லது பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் மூலம் மறைக்க வேண்டும். அவர்களின் உடலை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply