லண்டன்: இங்கிலாந்தின் 2 வது பெரிய நகரமான பிர்மிங்க்ஹாமில் இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை கொண்டாடும் வகையில் ஹிஜாப் அணிந்த பெண்ணின் சிலையை வடிவமைத்து வருகிறார் பிரபல சிற்பக் கலைஞர் லுக் பெர்ரி.
உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அண்மையில் சுவிட்சர்லாந்திலும் முகத்தை மறைப்பதற்கு தடை செய்யப்பட்டது.
இதேபோல் பல்வேறு நாடுகளில் ஹிஜாபுக்கு தடை உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களை போற்றும் வகையில் ஒரு தனித்துவமான எஃகு சிற்பம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
இந்த சிற்பத்திற்கு ‘ஹிஜாபின் வலிமை’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஒரு டன் எடை கொண்ட 16 அடி உயரம் உள்ள இந்த சிலை துத்தநாக எஃகு மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் மாதம் திறக்கப்பட இருக்கும் இந்த சிற்பத்தில் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் போன்று வடிவமைத்து உள்ளார் பிரபல சிற்ப கலைஞர் லுக் பெர்ரி.
அந்த சிற்பத்தின் கல்வெட்டில், “ஒரு பெண் என்ன அணிவது என்பதை கடந்து, அன்பும் மரியாதையும் கிடைப்பது அவரது உரிமை. உண்மையான வலிமை அவரின் இதயத்திலும் மனதிலும் உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சிலையை வடிவமைக்கும் புகழ்பெற்ற ஆங்கில சிற்பியான லூக் பெர்ரி உலகளவில் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமூகங்கள், விளிம்புநிலை சமூகத்தினரை கௌரவிக்கும் வகையில் படைப்புகளை வெளிப்படுத்தி வருபவர்.
‘ஹிஜாபின் வலிமை’ என்ற சிலை இஸ்லாமிய நம்பிக்கையில் ஹிஜாப் அணிபவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பு என்று அவர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் இங்கிலாந்தை சேர்ந்த நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இது நமது சமூகத்தில் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஒரு பகுதி என்றாலும், மிகவும் முக்கியமான ஒன்றாகும்,
‘இந்தப் படைப்பிற்கான யோசனை, கம்யூனிட்டி கனெக்ட் பவுண்டேசன் என்ற அமைப்பில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களுடன் நான் பேசியதிலிருந்து வந்தது.
எந்த விதமான கலைப்படைப்பைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன்.
அப்போது அவர்களுக்கு எந்த விதமான பிரதிநிதித்துவமும் இல்லை. தங்களைப் போன்ற எதுவுமே இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.
காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது நல்லது. ஏதாவது ஒன்றை மக்களுக்கு சொந்தமாக இருப்பதாக உணர வைப்பது அவசியம். என் கலைப்படைப்புகளின் மூலமாக, குடும்பம் மற்றும் சமூகத்தில் இருக்கும் பெருமை ஆகிய கருப்பொருள்களை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
ஹிஜாப் அணியும் முஸ்லீம் பெண்கள், தாங்கள் குறைவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள். இந்த சிற்பம் அவர்களுக்கு தேவையான பார்வையை அளிக்கும்.
மக்கள் இந்த சிலையின் சில புகைப்படங்களை மட்டுமே பார்த்திருக்கிறார்கள், ஆனால் உண்மையில் சிற்பத்தை அவர்கள் பார்க்கவில்லை.
படைப்பின் மூலமாக மக்கள் கவரப்படுவதாக நினைக்கிறேன். ஆனால் இந்த சிலையின் அளவு மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதுவும் மிகவும் திருப்தி அளிக்கிறது. சமூகத்தின் அன்பான பகுதியாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.