கனடாவில் சீக்கிய அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், இந்திய அரசாங்கம் இருப்பதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதை அடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது.
இரண்டு நாடுகளும் மூத்த இராஜதந்திரிகளை வெளியேற்றியிருக்கின்றன. தமது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருக்கின்றன.
இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம், இந்தியப் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடு அல்லது அதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தான்.
2014இல், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ அதிகாரி இளங்கோ செயற்படுகிறார் என்று, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக் ஷ
இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதுடன் அவரை கொழும்பில் இருந்து திருப்பி அழைக்குமாறும் வலியுறுத்தினார்.
அதையடுத்து றோ அதிகாரி இளங்கோ கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.
இதனால் இந்திய- இலங்கை உறவுகள் சீர்குலையத் தொடங்கின.
இதன் பின்னர், 2015 இல் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட போது, றோ தான் அதனைத் திட்டமிட்டு நடத்தியது என்று ராஜபக் ஷவினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புக்களுக்கு இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ, பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கியது.
இது அப்போதைய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அது இந்திய அரசாங்கத்துக்கு விரோதமான செயற்பாட்டை அவர் முன்னெடுக்கவும் காரணமாக அமைந்தது.
கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடுகள், நாடுகளுக்கிடையிலான உறவுகளை சீர்குலைத்திருக்கின்றன. உள்நாட்டிலும் குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றன.
இலங்கையிலும் புலனாய்வு அமைப்புகளின் செயற்பாடுகள் தற்போது கடுமையான சந்தேகங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
சனல் 4 ஆவணப்படம் வெளியான பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய- தற்போது அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக இருக்கின்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கியமான சூத்திரதாரி அவரா என சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
அவர் அதனை நிராகரித்திருக்கின்ற போதும், அவருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்படுகிறது.
அத்துடன் சனல் 4 குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்திருந்தாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை நியமித்திருக்கிறார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.
ஆனாலும், மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே இன்னமும் அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இத்தகைய நிலையில் தான், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும், புலனாய்வுப் பிரிவுகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக முன்னர் பணியாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தொலைக்காட்சி ஒன்றுக்கு விரிவான செவ்வியை வழங்கியிருக்கிறார்.
2012 தொடக்கம் 2019 வரை – நீண்ட காலம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பதவி வகித்த அவரிடம், சுமார் இரண்டு மணிநேரம் இந்த நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் அவர் ஐந்து முக்கிய விடயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.
1. மிகவும் அதி புத்திசாலியான ஒருவரே, சஹ்ரானை கட்டுப்படுத்தி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை ஒருங்கிணைத்திருக்கிறார்.
2. சஹ்ரான் மற்றும் அவரது உதவியாளர்களுடன் அரச மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும், தாக்குதலின் போதும், தாக்குதலுக்குப் பின்னரும் தொடர்புகளை வைத்திருந்தன.
3. வவுணதீவில் சஹ்ரான் குழுவினரால் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை, விடுதலைப் புலிகளின் செயலாக திசை திருப்பும் செயற்பாட்டில் இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகள் ஈடுபட்டன.
4. சஹ்ரான் குழுவினருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வெளியக ஆதரவு கிடைத்திருக்கவில்லை.
5. சுரேஷ் சலேவுக்கு எதிரான சனல் 4 குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
ஆகிய ஐந்து விடயங்களையும் ரவி செனவிரத்ன வலியுறுத்தியிருக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு முன்னரும், நடந்த பின்னரும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிப்பது, மற்றும் அவர்களின் ஊடாக உண்மை வெளிப்படுவதை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகியிருக்கிறது.
குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லது அவர்கள் பற்றிய உண்மையை மறைப்பதற்கு அரச புலனாய்வுப் பிரிவுகளே முற்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு இப்போது பல்வேறு தரப்புகளில் இருந்து வருகிறது.
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இந்த சந்தேகத்தை முதலில் வெளியிட்டார். பேராயர் மல்கம் ரஞ்சித்தும் வெளியிட்டார். சனல் 4 ஆவணப்படமும் அதனை வெளியிட்டது. இப்போது முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் ரவி செனவிரத்னவும் அதே சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதிலிருந்து, அரச புலனாய்வுப் பிரிவுகள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அமைப்பாக செயற்படுகின்றனவா அல்லது, தனிநபர்கள், அல்லது அமைப்புகள், தரப்புகளின் நலன்களுக்காக செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
அதைவிட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்துகின்ற அளவுக்கு- அதாவது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துகின்ற அளவுக்கு சஹ்ரான் ஒரு தகைமைவாய்ந்த நபர் அல்ல என்பது, ரவி செனிவிரத்னவின் கருத்தாக உள்ளது.
சஹ்ரானிடம் அதற்கான கல்வி அறிவு இல்லை. அவருக்கு பயிற்சிகளோ அனுபவமோ இல்லை. என்று கூறும் அவர், இந்த தாக்குதலை நடத்துவதற்கு சஹ்ரானை ஒருவர் கட்டுப்படுத்தி வழிநடத்தியிருக்கிறார் என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.
ஏனென்றால் விடுதலைப் புலிகள் கூட இவ்வாறான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்துகின்ற வல்லமையை நிரூபித்திருக்கவில்லை என்பது அவரது கருத்து.
புலிகள் பல ஒருங்கிணைந்த தாக்குதல்களை வடக்கு, கிழக்கில் நடத்தியிருக்கின்றனர்.
ஆனால், கொழும்பிலோ நாட்டின் பிற பகுதிகளிலோ இவ்வாறான ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதில்லை. பல தாக்குதல்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்துச் செயற்படுத்துவது சுலபமான காரியம் இல்லை.
விடுதலைப் புலிகள் அவ்வாறு ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதற்கு பல இடையூறுகள் இருந்தன.
தாக்குதலுக்கான ஆட்களையும் வெடிபொருட்களையும் ஒரே நேரத்தில் பெருந்தொகையில் கொண்டு சென்று சேர்ப்பது கடினம்.
அப்போது கொழும்பில், பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம்.
அதனைத் தாண்டி ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவது கடினம்.
ஆனால் ஸஹ்ரான் குழுவினர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய காலகட்டம், வேறு. அமைதியான அந்தச் சூழலில் யாரும் யாரையும் சந்தேகிக்கும் சூழலோ, சோதனையிடும் சூழலோ இருக்கவில்லை. பாதுகாப்புக் கெடுபிடிகளும் இருக்கவில்லை.
வவுணதீவில் இரண்டு பொலிஸாரை சஹ்ரான் குழுவினர் கொன்று, துப்பாக்கிகளை பறித்துச் சென்ற போதும், அதனை புலிகளே செய்தனர் என்று திசை திருப்பி விடும் விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டன.
அதாவது ஸஹ்ரான் குழுவினர் ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுக்க, தேவையான உள்ளக ஆதரவும் புற ஆதரவும் இருந்திருக்கிறது.
இத்தகைய நிலையில் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் அதிக சிரமம் இருக்கவில்லை.
ஆனாலும், அவ்வாறு ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தும் ஆற்றலை ஸஹ்ரான் கொண்டிருக்கவில்லை என்பதே ரவி செனவிரத்னவின் கருத்து.
Zahran-Hashim
ஸஹ்ரானை கட்டுப்படுத்தி வழிநடத்தும் ஒரு அதி புத்திசாலி இருந்திருக்கிறார். அவர் தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்துவதற்கான பயிற்சி மற்றும் அனுபவத்தைக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று முக்கியமான சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார் ரவி செனிவிரத்ன.சுரேஸ் சலே மீது சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் நேரடியாக குற்றச்சாட்டை முன்வைக்காவிடினும், அவரை நோக்கிய சந்தேகப் பார்வையை வலுப்படுத்தியிருக்கிறார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் சுரேஸ் சலே இணங்கிச் செயற்பட்டவரல்ல என்பதும் ரவி செனிவிரத்னவின் கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தநிலையில் தான் அவர், சுரேஸ் சலே மீதான சனல் 4 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது, அரசின் புலனாய்வுப் பிரிவுகள் செயலிழந்து விட்டதாகவும், நல்லாட்சி அரசாங்கம், பாதுகாப்புக் கட்டமைப்புகளை சீர்குலைத்து விட்டதாகவும் ராஜபக் ஷவினர் குற்றம்சாட்டினர்.
கோட்டாபய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்தவுடன், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் கட்டமைப்புகளை மாற்றியமைத்தார்.
ஆறு மாதங்களுக்குள் வலுவான புலனாய்வுக் கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டதாகவும், இனி யாராலும் அதனை அசைக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
அவ்வாறான புலனாய்வுக் கட்டமைப்பின் மீது தான் இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
கோட்டாபய ராஜபக் ஷவினால் வலுப்படுத்தப்பட்ட புலனாய்வு கட்டமைப்பு நாட்டுக்காக பணியாற்றும் வகையில் வலுப்படுத்தப்பட்டதா அல்லது தனிநபர்கள் அல்லது சில தரப்பினரை பாதுகாப்பதற்காக பலப்படுத்தப்பட்டதா என்ற கேள்விகள் இப்போது தோன்றியுள்ளன.
இந்தச் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாது போனால் புலனாய்வுப் பிரிவுகள், இந்திய – கனேடிய நட்புறவில் ஏற்பட்டிருக்கின்ற விரிசலைப் போல, அரசாங்கத்தை நெருக்கடிக்குள் கூட தள்ளி விடும்.
சுபத்ரா virakesari