சனல் 4 காணொளி பெரும் அரசியல் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப்பேரவை அமர்வுக்காலம் என்பதால் இந்தப் பரபரப்பு அதிகமாகியுள்ளது.
ஒரு மினி சூறாவளி எனலாம். ஜனாதிபதியின் தெரிவுக்குழு, விசாரணைக்குழு யோசனைகளை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. அவர்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் இதனையே கோருகின்றார். எதிர்பார்க்காத வகையில் சரத்பொன்சேகாவிடம் இருந்தும் இக்கோரிக்கை வந்துள்ளது. தன்னை பழிவாங்கிய ராஜபக்ஷக்களை பழிவாங்குவது அவரது நோக்கமாக இருக்கலாம்.
மொட்டுக்கட்சியும் சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியுள்ளது. சர்வதேச விசாரணை எதிர்ப்பு விமல் வீரவன்ச கட்சியுடனும், உதய கம்மன்பில கட்சியுடனும் சுருங்கிப்போயுள்ளது.
இந்த அலைகள் கண்ணுக்கு முன்னாலேயே ராஜபக் ஷர்கள் சரிந்து வீழ்வதையே காட்டுகின்றன. முன்னர் ஒவ்வொரு தடவை வீழ்கின்ற போதும். குறுகிய காலத்திலேயே மீண்டெழும் ஆற்றல் ராஜபக்ஷர்களுக்கு இருந்தது. பெருந்தேசியவாதத்திடம் அடைக்கலம் புகுவதே மீண்டெழும் ஆற்றலுக்கு காரணம்.
2015 ஆம் ஆண்டு வீழ்ந்த போது மிக சொற்ப காலத்திலேயே மீண்டெழும் ஆற்றல் அவர்களுக்கு கிடைத்தது.
ஆனால் இந்தத் தடவை அதற்கான வாய்ப்பு அறவே இல்லை அல்லது மிகக் குறைவு எனக் கூறலாம். தமிழர் சம்பந்தமான போர்க்குற்ற விவகாரம் அல்லது முஸ்லிம் விவகாரம் என்றால் அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்திருக்கும். சனல் 4 விவகாரம் சிங்களப்பிரச்சினையாக இருக்கின்றமையால் அடைக்கலம் பெறுவது கடினமாக உள்ளது.
சனல் 4க்குப் பின்னால் இருக்கும் சர்வதேச சக்திகள் பெருந்தேசியவாதத்திடம் ராஜபக்ஷர்கள் அடைக்கலம் பெற்றுவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.
இதற்கேற்ப ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் தமிழர் சம்பந்தமான போர்க்குற்ற விவகாரத்தை சற்று அடக்கி வாசித்து ராஜபக்ஷர்கள் கால மனித உரிமை விவகாரங்களை உயர்த்தி வாசிக்கின்றது.
ராஜபக்ஷர்களை பொறுத்தவரை ஒன்றில் தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அல்லது தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஆட்சி இருக்க வேண்டும்.
சுருக்கக் கூறின், நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்க வேண்டும். இல்லையேல், தாங்கள் அழிவது தவிர்க்க முடியாதது என்பதை நன்றாகவே புரிந்திருக்கின்றனர்.
தற்போது அவர்கள் நேரடி ஆட்சியில் இல்லை. கட்டுப்படுத்தும் பிடியும் தளர்ந்து வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிக இலாவகமாக இதனை தளர்த்தி வருகின்றார்.
மொட்டுக்கட்சி கண்ணுக்கு முன்னாலேயே சிதறிக் கொண்டிருக்கிறது. அதில் அங்கம் வகித்த பெருந்தேசியவாதத்தின் தீவிரப்பிரிவினர் விலகி ஓடிவிட்டனர்.
விமல் வீரவன்ச கட்சியும், உதயகம்மன்பில கட்சியும் தற்போது ராஜபக்ஷர்களோடு இல்லை. லிபரல் பிரிவிலும் பேராசிரியர் பீரிஸ் அணி விலகிவிட்டது. நிமல் லான்சா குழுவினர் வெளியேறுவதற்கு ரணிலின் சிக்னலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது கட்சியில் மிஞ்சியிருப்பது ராஜபக்ஷர்களின் எடுபிடிகள் மட்டும்தான். சுருக்கக் கூறின் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலை’ மொட்டுக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கோட்டா காலத்தில் ‘கம சமக பிரிசந்திர’ திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்றவர்கள் மீளவும் சில முயற்சிகளை தொடங்கியுள்ளனர்.
அண்மையில் இத்திட்டத்தில் பணியாற்றிய வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு முன்னர் சென்ற அதே கிராமங்களுக்குச் சென்று கோட்டாவின் பிரதிமையை உயர்த்த முயன்றுள்ளது. ஆனாலும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.
பசில் ராஜபக்ஷவின் முயற்சிகளும் ‘சாண் ஏற முழம் சறுக்குவதாகவே’ உள்ளது அவரது ஆலோசனைகளைக் கேட்க மொட்டுக்கட்சிக்குள் பெரிதாக ஆட்கள் இல்லை. மஹிந்த தனது வாரிசாக நாமலுக்கு முடிசூட்ட கனவு கண்டிருந்தார். அந்தக்கனவும் நனவாகும் நிலை தற்போதைக்கு இல்லை. எதிர்கால வெளிச்சங்களும் மிகக் குறைவு.
ஏற்கனவே இலங்கை பொருளாதாரத்தை வங்குரோத்து பொருளாதாரமாக மாற்றியவர்கள் என்ற பெயர் ராஜபக்ஷர்களுக்கு உண்டு. அதனுடன் தற்போது ஆட்சி அதிகாரத்திற்காக மக்களை கொலை செய்துள்ளனர் என்ற பெயரும் இணைந்துள்ளது. இவ்விளைவு ராஜபக்ஷர்களின் வீழ்ச்சியை தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.
உண்மையில் ராஜபக்ஷர்களுக்கு சிங்கள அரசியலில் மரபு ரீதியாக முதன்மைப்பாத்திரம் இருக்கவில்லை அது சேனநாயக்கக்களிடமும், பண்டாரநாயக்கக்களிடமுமே இருந்தது. ராஜபக்ஷர்களின் பாத்திரம் பகுதிப் பாத்திரம் மட்டுமே.
அவர்களின் எழுச்சி தற்காலிக மாயைதான் போர் வெற்றி அந்த மாயையை கொடுத்தது. ராஜபக் ஷர்கள் அதனை நிரந்தரம் என நினைத்தது தான் வீழ்ச்சிக்கு காரணம். நம்பர் 2 என்ற நிலையில் இருந்திருந்தால் தனது விருப்பத்தை தக்க வைத்திருக்கலாம். அவர்கள் அவசரப்பட்டு விட்டனர்.
போர் வெற்றி நிரந்தர முடிசூடலை தரும் என நினைத்ததால் ஒரு கட்டத்தில் நாட்டை சொந்தச் சொத்துப் போல சூறையாடத் தொடங்கினர்.
அதுவும் தமிழர் தாயகத்தில் அது பச்சை சூறையாடல்களாக இருந்தது. ஏழைத்தமிழ் மக்கள் புலிகளின் வங்கியில் வைப்பிலிட்ட ஆதார ரீதியான சொத்துக்களைக் கூட கொள்ளையடிக்க அவர்கள் தயங்கவில்லை. ‘ஆட்சி அதிகாரத்தை’ சூறையாடுவதற்கான ‘லைசன்ஸ்’ என அவர்கள் கருதினர்.
ஆட்சி அதிகாரம் என்பது ‘நம்பிக்கை பொறுப்பாளர்’ என்ற அந்தஸ்தை உடையது என்பதை அவர்கள் கணக்கெடுக்கவில்லை .
மறுபக்கத்தில் இலங்கைக்குள் உலகம் இருக்கிறது எனக் கருதி உலக ஒழுங்குகளை எல்லாம் தாம் நினைத்த மாதிரி மீறினர்.
புவிசார் அரசியலையோ பூகோள அரசியலையோ ஒரு பொருட்டாக அவர்கள் பார்க்கவில்லை. வரலாறு அவர்களுக்கு உலகத்திற்குள் தான் இலங்கை இருக்கிறது என்பதை இடித்துரைத்திருக்கும். மனித உரிமைகள் பேரவை தீர்மானம், கனடாவின் தடைகள் எல்லாம் இடித்துரைப்பின் வெளிப்பாடுகள் தான்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது பண்டாரநாயக்காக்களை உள்வாங்க முனைகிறது. கட்சியை உயிர்ப்பிக்க பண்டாரநாயக்காக்கள் அவசியம் என அது கருதுகிறது. சந்திரிகா விரைவில் உள்வரக் கூடும்.
எதிர்காலத்தில் மகனும் உள்வரலாம். அவ்வாறு வந்தால் ராஜபக் ஷர்களுக்கு சுதந்திரக்கட்சியின் வாசல்படியையே மிதிக்க முடியாத நிலை ஏற்படும். பண்டாரநாயக்காக்களை சிங்கள அரசியலில் பூச்சிய நிலைக்கு கொண்டு வந்தது ராஜபக்ஷர்கள் தான். இதனை பண்டாரநாயக்காக்கள் ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை.
தென்னிலங்கை அரசியல் தற்போது முற்றாக குழம்பியுள்ளது. இக்குழம்பிய குட்டை தான் ரணிலின் ராஜயோகத்திற்கு காரணம். ராஜபக் ஷர்கள் கண்ணுக்கு முன்னால் உதிர்கின்றனர்.
பிரேமதாசாக்கள் தமது இயலாமையை பகிரங்கப்படுத்தியுள்ளனர். பிரேமதாசாக்களுக்கும் சிங்கள அரசியல் மரபு ரீதியான முதன்மை இடமில்லை. அவர்களின் எழுச்சியும் தற்காலிகம் தான். ராஜபக்ஷர்கள் உதிர்வதை போல பிரேமதாசாக்கள் உதிரத்தொடங்கும் காலமும் ஒன்று வரும். ஜே.வி.பி. ஒருபோதும் முடிசூடப்போவதில்லை.
இந்தக்குழம்பிய சூழல் தான் ரணிலுக்கு சாதகமானது. தமிழ், முஸ்லிம் மலையக வாக்கு வங்கி எப்போதும் அவருக்குபோனஸ். தன்னை விட்டால் வேறு தெரிவு சிங்களத்திற்கு இல்லை என்ற பிரதிமையை ரணில் தோற்றுவித்து வருகின்றார். ரணிலை வெறுப்பவர்களும் தற்போது ரணிலை இழக்கத் தயாராகஇல்லை. உண்மையில் அவரைப்போல ஜனநாயகத்தை சூறையாடியவர்கள் இலங்கையில் இல்லை.
அவரது சூழல் அவருக்கு அத்துணிச்சலை கொடுத்திருக்கிறது. ‘மிஸ்டர் மீட்பர்’ என்ற தோற்றம் அவருக்கு மகா துணிச்சலை கொடுத்திருக்கிறது.
குறிப்பிட்ட காலத்திற்கு அவரது காட்டில் தான் மழை பெய்யப் போகிறது. அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் அவர் நடத்தப் போவதில்லை. அது ஒரு யாப்பு மீறலாக இருக்கின்ற போதும் அவர் பொருட்படுத்தப்போவதில்லை.
நாடே குழம்பியிருக்கின்ற பொது யாப்பிற்கு மதிப்பு எப்படி கிடைக்கும்? உயர் நீதிமன்றம் கட்டளைகளைப் போட்டாலும் அவர் சிரித்துக் கொண்டே அதனைக் கடப்பார்.
அவரின் ஜனநாயக அழிப்பை அவருக்கு பின்னால் நின்று வழிநடத்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் கண்டு கொள்ளப்போவதில்லை. மேற்குலகத்தின் இலங்கை நோக்கிய முதலீடு எல்லாம் ரணிலை நம்பித்தான். ரணில் என்ற மிகப்பெரும் சொத்தை இழக்க அவை ஒரு போதும் முன்வரப்போவதில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கொஞ்சம் சிணுசிணுக்கும் என்பது உண்மையே! அவை சிணுங்கலோடு நின்றுவிட வேண்டியது தான். ராஜபக் ஷர்கள் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கினர் என்றால் ரணில் ஜனநாயகத்தையே வங்குரோத்தாக்கியுள்ளார்.
மறுபக்கத்தில் பிராந்திய, சர்வதேச சூழல் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது இரு துருவ அரசியல் ஒரு துருவ அரசியலாக மாறி பிராந்திய அரசுகளின் எழுச்சிக்கு பின்னர் பல்துருவ அரசியலாக மாறியது. தற்போது ரஷ்ய, சீன எழுச்சியை தொடர்ந்து இரு அணிகளும் துருவ அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
பிராந்திய வல்லரசான இந்தியா இரு அணிகளுக்கிடையேயும் சமநிலை பேண முயற்சிக்கின்றது. அது குவாட்டுக்கும் பிறிக்ஸ்க்கும் இடையே நடனமாடுகிறது. ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற நிலை அதற்கு.
இந்தோ – பசுபிக் மூலோபாயக்காரர்கள் குவாட் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றனர். மறுபக்கத்தில் பட்டு பாதைக்காரரும் முன்னாள் கூட்டணியும் பிறிக்ஸ் பக்கம் இழுக்கின்றனர். இழுவை தாங்காமல் பிராந்திய வல்லரசின் மீசை கிழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தோ – பசுபிக் மூலோபாயத்தின் பிதா இந்தியாவில் வைத்தே பட்டு பாதைக்கான மாற்றுத்திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
அதுவும் தனித்தில்லாமல் சவூதி அரேபியா, ஐக்கியஅரபு இராச்சியம் என்பனவற்றுடன் இணைந்து இவ் அறிவிப்பு இடம் பெற்றிருக்கின்றது.
ரயில் சேவை, துறைமுகங்கள் ஊடாக இந்தியாவை மத்திய கிழக்குடனும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் திட்டமே இதுவாகும். இத்திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ் என்பவையும் உள்ளடக்கம்.
இந்த வழித்தடம் தனித்தனியாக இரு மார்க்கங்களைக் கொண்டிருக்கின்றது. கிழக்கு வழித்தடம் வளைகுடா அரபு நாடுகளை இந்தியாவுடன் இணைக்க, வடக்கு வழித்தடம் வளைகுடாநாடுகளை ஐரோப்பாவுடனும் இணைக்கப் போகின்றது.
வளைகுடா நாடுகளுக்கு இது சங்கடமான நிலைதான் ஒரு புறம் அமெரிக்கா போன்ற பாரம்பரிய நட்பு நாடுகள். மறுபக்கத்தில் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள். இரண்டுக்கும் இடையே சமநிலையை எவ்வாறு பேணுவது என்பதில் அவை குழம்பிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த வாரம் சூழல் பற்றி எந்த அக்கறையுமில்லாமல் தொடர் நித்திரையில் இருக்கும் தமிழ் அரசியலை தட்டியெழுப்புவது பற்றி யோசிப்போம்.
(சி.அ.யோதிலிங்கம்)