உலகம் முழுவதும் மக்களைக் கொன்று குவித்த கொரோனா வைரஸைக் காட்டிலும் 7 மடங்கு ஆபத்தான எக்ஸ் என்ற வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்தது. உலகம் முழுவதும் சுமார் 70 இலட்சம் பேர் அதன் விளைவாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸைக் காட்டிலும் பல மடங்கு வீரியமிக்க புதிய வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த வைரஸ் ஏற்படுத்தும் தொற்றுநோயால் சுமார் 5 கோடி மக்கள் இறக்க நேரிடும் என்றும், கடந்த 1918-1920ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய ‘ஸ்பானிஷ்’ காய்ச்சலைப் போலவே ஆபத்தானது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான டேம் கேட் பிங்காம்,
“விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை வைரஸ்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்முடிவில் புதியதாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘எக்ஸ்’ என்ற வைரஸ் பரவினால் குறைந்தது 5 கோடி மக்களை கொல்லக் கூடியதாக இருக்கும்.
இந்த தொற்றுநோயைச் சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கும். கொரோனா வைரஸை விட 7 மடங்கு ஆபத்தானது. எக்ஸ் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னதாக, அதை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 25 வகையான வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.