இறுதி யுத்தத்தில் பாரிய போர்க்குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதை சர்வதேசமே அறியும். அந்நேரத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேக்கா. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஓய்வு பெற்ற அவர் 2010 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இரண்டாவது தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாவதை தடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ்க் கட்சிகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இருந்தது.
இதன் காரணமாக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளராக சரத் பொன்சேக்காவை தெரிவு செய்தனர்.
வடக்கு கிழக்கின் கூட்டணி கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவளிக்க முன்வந்தமையை எவரும் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
தமது பிரதேசத்தின் அழிவுக்கும் உயிரிழப்புகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் காரணமான ஒருவரை ஆதரிப்பதற்கு அவர்கள் முன்னே இருந்த ஒரே காரணம் மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகி விடக் கூடாது என்பதாகும்.
தமது சொந்தங்களை யுத்தத்தில் பறிகொடுத்து விட்டு தவித்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் கூட சரத் பொன்சேக்காவுக்கு வாக்களித்திருந்தனர்.
ஏனென்றால் சரத் பொன்சேக்காவை விட மோசமானவர்களாக மகிந்தவும் அவரது சகோதரர்களும் விளங்கினர் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.
எனினும் சரத் பொன்சேக்கா இத்தேர்தலில் மகிந்தவிடம் தோல்வியைத் தழுவினார். தேர்தல் முடிவுகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என பல்வேறு ஊகங்கள் கிளம்பின. எனினும் மீண்டும் மகிந்த அதிகாரத்தை கைப்பற்றினார்.
அதன் பிறகு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அதன் பிறகே சரத் பொன்சேக்காவுக்கு பிரச்சினைகள் தலை தூக்கின. அவர் இராணுவ புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார் என குற்றஞ்சுமத்தப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டதோடு அவரது இராணுவ கெளரவ விருதுகள் மற்றும் பதவிகளும் பறிக்கப்பட்டன.
பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் அவருக்கு முழுமையான பொது மன்னிப்பு வழங்கி அனைத்து சலுகைகளையும் திருப்பி வழங்கினார். மேலும் இராணுவ சேவையில் வழங்கப்படக் கூடிய மிக உயரிய பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் அவர் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கினார்.
ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல. பாராளுமன்றில் மைத்ரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என பகிரங்கமாக திட்டும் அளவுக்கு பொன்சேக்கா மாறிவிட்டார்.
காரணம் அவரின் மனதில் குடிகொண்டிருக்கும் இராணுவ வீரர் தான். மைத்ரி மற்றும் ரணில் இருவரும் இணைந்து 2015 ஆம் ஆண்டு உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சை தன்னிடம் வழங்கும்படி அவர் வற்புறுத்தியிருந்தார்.
ஏனென்றால் அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவர் கோட்டாபயவை பழிவாங்க விரும்பினார். கோட்டாபயவை சிறைக்கு அனுப்புவதே தனது ஒரே குறிக்கோள் என அவர் பகிரங்கமாகவே கூறி வந்தார்.
மைத்திரிபால சிறிசே
ஆனால் அந்த தவறை பிரதமரும் ஜனாதிபதியும் செய்யவில்லை. பாதுகாப்பு அமைச்சை மைத்ரியே வைத்துக்கொண்டார்.
அவ்வாறு அவரை செய்யச் சொன்னது பிரதமர் ரணில் தான். ஏனென்றால் சரத் பொன்சேக்காவைப் பற்றி ரணில் நன்கு அறிந்திருந்தார்.
எனினும் நல்லாட்சி காலத்தின் நான்காவது ஆண்டில் திடீரென மைத்ரி மகிந்தவை பிரதமராக்கி விட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். அதற்கெதிராக ரணில் உயர்நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார்.
நாட்டில் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கிய மைத்ரி மீது கடுங்கோபம் கொண்ட ஒருவராக மாறினார் சரத் பொன்சேக்கா.
அதன் பிறகு இடம்பெற்ற சம்பவங்கள் அவரை கடும்போக்கு கொண்ட ஒருவராக மாற்றியது. சனல் –4 அலைவரிசையில் காணொலிக்குப் பிறகு அவர் பாராளுமன்றில் கோட்டாபய மற்றும் மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக தாக்கி வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிகளான இவர்கள் இருவமே இதற்கு பதில் கூற வேண்டும் என அவர் பாராளுமன்றில் கூறியதோடு தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் மைத்ரி உட்பட பலருக்கும் பாடம் புகட்டுவேன் என சூளுரைத்திருந்தார்.
ஆனால் லசந்த விக்ரமதுங்க கொலை பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஏனென்றால் இவர் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே அவரது கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
அப்போது பாதுகாப்பு செயலாளராக விளங்கிய கோட்டாபயவின் இரகசிய பிரிவான திரிப்போலி பிளட்டூன் இராணுவப் புலனாய்வுக் காரர்களே இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சனல்–4 காணொலி கூறியிருந்தது.
இந்த விடயம் சரத் பொன்சேக்காவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதும் பலரின் சந்தேகம். இதன் காரணமாகவே சரத் பொன்சேக்கா பாராளுமன்றில் அது குறித்து வாய் திறக்கவில்லை. அதே போன்று கோட்டாபய ராஜபக்சவும் லசந்த விக்ரமதுங்க கொலை பற்றி வாய் திறக்கவில்லை.
ஆனால் இப்போது சரத் பொன்சேக்காவுக்கும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளதாகவே தெரிகின்றது.
உயிர்த்த ஞாயிறு சம்பவ சூத்திரதாரிகளை அடையாளம் காண வேண்டுமானால் தனக்கு அதிகாரங்கள் வேண்டும் என அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோட்டாபய மற்றும் மைத்ரி உள்ளிட்ட மகிந்த ராஜபக்சவும் கலங்கிப்போயுள்ளனர் என்றே கூற வேண்டியுள்ளது .இதுவரை மகிந்த இந்த காணொலி பற்றி வாய் திறந்து ஒரு வார்த்தை கூறவில்லை.
அடுத்த வருடம் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், சரத் பொன்சேக்கா யாருக்கு ஆதரவளிக்கின்றாரோ அவர்கள் நிச்சயம் இவருக்கு அதிகாரமிக்க பதவி ஒன்றை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஆனால் நாட்டுக்கு ஒரு கோட்டாபயவே போதும் என்ற நிலையில் மக்களும் ஏனையோரும் இருக்கின்றனர்.
கோட்டாபய
முழுக்க முழுக்க இராணுவ நிர்வாக கோட்பாட்டின் படி நாட்டை ஆட்சி செய்யப்போய் மக்களால் துரத்தியடிக்கப்பட்டார் கோட்டாபய. அதே போன்று சரத் பொன்சேக்காவும் நடந்து, மறுபக்கம் ராஜபக்சகளுக்கு எதிராக தனது பழிவாங்கலை ஆரம்பித்து விடுவாரோ என்ற அச்சமும் உள்ளது.
அடுத்த ஒரு தேர்தலுக்கு முன்பதாக சரத் பொன்சேக்காவை தம்மோடு சேர்த்துக்கொள்வதா அல்லது விட்டு விடுவதா என்ற கேள்வி தற்போது சஜித் மற்றும் ரணில் ஆகியோருக்கு எழுந்துள்ளது.
எது எப்படியானாலும் சரத் பொன்சேக்கா இராணுவத்தினருக்கு எதிராக வாய் திறக்கமாட்டார். ஆனால் அவர் ராஜபக்ச சகோதரர்களை சிறைக்கு அனுப்பும் திட்டங்களை வைத்திருக்கின்றார் என்பது மாத்திரம் நிச்சயம்.
இராணுவத் தளபதியாக மிடுக்கோடு செயற்பட்ட அவரை சிறைக் கைதி உடையணிய வைத்த அவர்களை பழிவாங்கும் எண்ணம் இந்த 72 வயதிலும் சரத் பொன்சேக்காவுக்கு உள்ளது. .
இராணுவத்தில் பணி புரிந்தவர்கள் தமது சீருடையை கழற்றினாலும் அவர்கள் மனதில் உள்ள இராணுவ மிடுக்கும் அந்த பழக்கவழக்கங்களும் என்றும் அவர்களுடன் இருக்கும்.
அதற்கு ஒரே உதாரணம் கோட்டாபய. சரத் பொன்சேக்கா மாத்திரம் அதில் விதிவிலக்கா என்ன? ஆனால் மீண்டும் ஒரு கோட்டாபய ராஜபக்சவை இந்த நாடு என்றும் அனுமதிக்காது என்பதே உண்மை.
சி.சி.என்