கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதி அருகே ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில காலமாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் அந்நாட்டுக் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உதவி கோரும் அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். விலைவாசி உச்சமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு: இதற்கிடையே பாகிஸ்தான் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. இப்படி மோசமான நிலையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டில் இப்போது குண்டுவெடிப்பும் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதிக்கு அருகே முகமது நபியின் பிறந்தநாளான மிலாது நபியை கொண்டாடும் வகையில் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அங்கே பொதுமக்கள் ஒன்றுகூடிய நிலையில், திடீரென அங்கிருந்த குண்டு வெடித்துச் சிதறி இருக்கிறது.

இது தற்கொலைப் படை தாக்குதல் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டுகள் உடன் வந்த பயங்கரவாதி, பேரணி நடக்கும் இடத்தில் வந்து குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த மோசமான தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

எப்படி நடந்தது: பலுசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதீனா மசூதிக்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதில் பேரணியை முறைப்படுத்தும் பணியில் இருந்த மஸ்துங்கின் டிஎஸ்பி நவாஸ் காஷ்கோரியும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

முகமது நபியின் பிறந்தநாளான மிலாது நபியை முன்னிட்டு அங்கே பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதல் என்பதை உறுதி செய்த அப்பகுதி போலீஸ் அதிகாரி முகமது ஜாவேத் லெஹ்ரி, டிஎஸ்பியின் காருக்குப் பக்கத்தில் வந்து அந்த நபர் தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாகக் கூறினார்.

52 பேர் பலி: இதில் சுமார் 130 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோசமான தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெற்று வருவோரில் சிலர் படுகாயமடைந்துள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடச் சிறப்புக் குழுக்கள் அங்கே அனுப்பப்பட்டுள்ளதாக பலுசிஸ்தான் அமைச்சர் ஜான் அச்சக்சாய் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை, அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அங்குள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இப்போது காபந்து அரசே இருந்து வருகிறது. இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை உறுதியான உடன் நாடாளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டின் அப்போதைய பிரதமர் ஷெரீப், தேர்தலுக்கு ரெடியானார். அதன்படி அங்கே அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

 

Share.
Leave A Reply