கம்பஹா – சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட நிலையில், அறையொன்றுக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையடுத்து, குறித்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27 ஆம் திகதி காலை முதல் 51 வயதான பிரதீபா என்ற பெண்ணை காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய முல்லேரியா பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராவை பரிசோதித்த போது, குறித்த பெண் அங்கொடையில் இருந்து கடுவலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கடுவெல நகரில் அமைந்துள்ள கடையொன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த சாம்பல் நிற காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின் குறித்த பெண் உணவகமொன்றுக்கு சென்று சிற்றுண்டிகளை வாங்கிக் கொண்டு அதே உணவகத்தில் கார் சாரதியுடன் சுமார் 10 நிமிடம் உணவருந்திவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதன் பின்னர் இருவரும் KI 3030 என்ற சாம்பல் நிற காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின் குறித்த பெண் அன்றிலிருந்தே காணாமல்போயுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த கார் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது, அது சியம்பலாப்பே பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுதீர வசந்த என்பவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையில் சிறிது காலமாக முறுகல் நிலை காணப்பட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டன.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கை, கால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.

இந்நிலையில், “ நாம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இதனையடுத்து 55 வயதான சுதீர வசந்தவுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா மற்றும் சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply