சென்னை: நடிகர் கமல்ஹாசன் பூர்வீகம் கர்நாடகாவின் ஹாசன் என்றும் இதன் காரணமாகவே அவரது பெயர் ஹாசன் என வைக்கப்பட்டுள்ளதாகச் சாட்டை துரைமுருகன் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரத்தில் மோதல் தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகா அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்காகக் கடந்த வாரம் இரண்டு முழு அடைப்பு போராட்டங்களும் நடைபெற்றது. முதலில் பெங்களூரிலும் பிறகு மாநிலம் தழுவிய பந்த் போராட்டங்கள் அங்கே நடைபெற்றன.

இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சித்தார்த்: இதற்கிடையே நடிகர் சித்தார்த் நடித்திருந்த சித்தா படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாகி இருந்தது.

இதன் புரோமோஷன் நிகழ்ச்சிக்காகப் பெங்களூர் சென்ற நடிகர் சித்தார்த் அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அங்கே திடீரென உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் சித்தார்த்தைப் பேச விடாமல் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி சித்தார்த் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பினார்.

இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த சம்பவத்துக்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “சித்தார்த்தை அவர்கள் வெளியேற்றிய தடை செய்தது போலத் தமிழர்கள்- தமிழ்த் தேசியவாதிகள் இங்குள்ள தமிழ்நாட்டில் கன்னட நடிகர்களை வெளியேற்ற நினைத்தால் தமிழ்நாட்டில் ஒரு நடிகர் இருக்க முடியாது.

சாட்டை துரைமுருகன்: உலக நாயகன் எனக் கொண்டாடப்படும் கமல்ஹாசன்.. பரமக்குடிக்காரர் என சொல்லப்பட்டாலும் அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.. அங்குள்ள ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர்..

திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ போன்றோர் எப்படி தங்கள் ஊர்ப் பெயரை தங்கள் பெயரில் சேர்த்துக் கொள்கிறார்களோ.. அதுபோல இதுவும். கர்நாடகாவின் ஹாசன் ஊர்ப் பெயரையே அவர்கள் சேர்த்துள்ளனர்.

கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், சாரு ஹாசன் என எல்லாம் இப்படிதான். அந்த கமல் ஹாசனை தமிழ்நாட்டில் உயர்ந்த நட்சத்திரமாக மாற்றி அழகு பார்ப்பது தமிழ்நாடு” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக பரவி வந்தது. இதற்கிடையே இது உண்மைதானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

உண்மை என்ன: இது தொடர்பாக கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன் முன்பு தான் அளித்த பேட ஒன்றில் விளக்கி இருந்தார்.

இதை நாம் பேக்ட் செக் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் அவர், “எனது தந்தை சீனிவாசன் ஐயங்கார் தனது அனைத்து பிள்ளைகளுக்கும் ஹாசன் என பெயர் வைத்துள்ளார்.

அந்த பெயருக்கு என்ன காரணம் என்பது ரொம்ப பேருக்குத் தெரியாது. அவரது நண்பரும் குருவுமான யாகூப் ஹாசன் என்ற ஒரு இஸ்லாமியர் இருந்தார்.

அதன் காரணமாகவே அனைத்து குழந்தைகளுக்கும் அவரது குருவான ஹாசன் பெயரையும் சேர்த்து வைத்தார்.

இதன் காரணமாகவே எனக்கு சாருஹாசன் என 1931இல் பெயர் வைத்தார். அதன் பின்னரே சந்திர ஹாசன், கமல்ஹாசன் என இதையே தொடர்ந்து வைத்தார்” என்றார்.

அப்போது நெறியாளர், “இந்த ஹாசன் என்பதற்குச் சமஸ்கிருத சொல்லான பொன் சிரிப்பு அல்லது மலர்ச்சி என்று பொருள் இல்லையா.. இஸ்லாமிய நண்பரின் பெயரையே உங்கள் தந்தை அனைவருக்கும் வைத்துள்ளாரா” என்று கேள்வி எழுப்பினார்.

ரியல் காரணம் இதுதான்: அதற்குப் பதிலளித்த சாருஹாசன், “ஆம்.. அப்படிதான் வைத்தார். அவர் ஒரு காங்கிரஸ்காரர். இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட வேண்டும் என்பதற்காக இப்படிப் பெயர் வைத்தார்.

மேலும், அவர் அப்போதே சாதி வித்தியாசங்களை எல்லாம் பார்க்க மாட்டார். இதனால் அந்த காலத்திலேயே எனது தாய் தந்தையை மற்ற பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து பிராமண சாதியில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

அனைத்து சாதியினரையும் ஒரே போல ஒதுக்கி வைத்தார்கள்” என்று தெரிவித்தார். இந்த வீடியோவை இப்போது கமல் ரசிகர்கள் இணையத்தில் வேகமாகப் பரப்பி வருகின்றனர்.

இதன் மூலம் கமல்ஹாசன் பெயரில் இருக்கும் ஹாசன் என்பது அவரது தந்தையின் நண்பரின் பெயர் என்பது தெளிவாகிறது.

Share.
Leave A Reply