டெல்லி: டெல்லியில் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் போலீசை தீர்த்து கட்டிவிட்டு 2 ஆண்டுகளாக பொய் சொல்லி நாடகமாடி வந்த ஏட்டுவை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அதோடு கடந்த 2 ஆண்டுகளாக அந்த பெண் போலீஸ் உயிருடன் இருப்பதுபோல் அவரது குடும்பத்தினரை நம்ப வைத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் மோனா. இவர் பிஎட் படிப்பை முடித்தார். இதையடுத்து அரசு அதிகாரியாக மாற விரும்பினார்.
இதையடுத்து போட்டி தேர்வுகளில் அவர் பங்கேற்று வந்தார். போலீஸ் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து 2014ம் ஆண்டு போலீஸ் பணியில் அவர் சேர்ந்தார்.
அதன்பிறகு அவர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லி கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியமர்த்தப்பட்டார்.
இதற்கிடையே அவர் எஸ்ஐ தேர்விலும் வெற்றி பெற்றார். உத்த பிரதேசத்தில் அவருக்கு பணி கிடைத்தது.
ஆனால் அந்த பணியை மோனா விரும்பவில்லை. இதையடுத்து பணியை ராஜினாமா செய்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக அவர் டெல்லியில் தங்கி படிக்க தொடங்கினார்.
இந்நிலையில் தான் கடந்த 2021 செப்டம்பர் மாதம் திடீரென்று மோனா மாயமானார். அவரது குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வீட்டுக்கு வருவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு தகவல் சென்றது.
இதையடுத்து மோனாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோனா எங்கு உள்ளார்? என்பதை அறிந்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.
ஆனால் எங்கு தேடியும் மோனா கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மோனாவை அவருடன் பணி செய்ய ஏட்டு ஒருவர் கொன்று உடலை புதைத்து கடந்த 2 ஆண்டுகளாக நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் டெல்லியில் ஏட்டுவாக பணியாற்றி வரும் சுரேந்திர ராணா (வயது 42) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது:
கைதாகி உள்ள சுரேந்திர ராணா போலீசில் 2012ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு 12 வயதில் மகன் உள்ளார்.
சுரேந்திர ராணாவும், மோனாவும் டெல்லி கட்டுப்பாட்டு அறையில் ஒன்றாக பணியாற்றினர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சுரேந்திர ராணா, மோனாவை காதலிக்க தொடங்கினார். இதனை அவர் மோனாவிடம் கூறவில்லை.
இதற்கிடையே தான் மோனா யுபிஎஸ்சி தேர்வுக்காக டெல்லியில் தங்கி பயில தொடங்கினார். இதையடுத்து சுரேந்திர ராணா, மோனாவின் நடவடிக்கையை கண்காணித்து பின்தொடர தொடங்கினார்.
இதனை மோனா கண்டுபிடித்ததோடு, ஏன் பின்தொடர்கிறீர்கள்? என கேட்டார். அப்போது சுரேந்திர ராணா அவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மோனா, ‛உங்களை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன்” எனக்கூறி அவரது காதலை ரிஜெக்ட் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திர ராணா மோனாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி மோனாவை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்று சாக்கடையில் புதைத்து கற்களை அடுக்கி வைத்தார்.
மோனாவின் உடலை புதைக்க சுரேந்திர ராணாவுக்கு அவரது உறவினர்களான ரவின் (26) மற்றும் ராஜ்பால் (33) ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதையடுத்து 3 பேரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டம் போட்டனர். இதையடுத்து சுரேந்திர ராணா, மோனாவின் குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
மோனா திடீரென்று மாயமாகி உள்ளதாக கூறினார். மேலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவும் அவர் உதவி செய்தார்.
வழக்கு விசாரணையின்போது மோனாவின் குடும்பத்தினருடன் சுரேந்திர ராணா பலமுறை போலீஸ் நிலையத்துக்கு சென்று வந்தார்.
அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து மோனா மாயமாகி இருந்தாலும் கூட அவர் உயிருடன் தான் இருக்கிறார் என குடும்பத்தினரையும், போலீசையும் நம்ப வைக்க சுரேந்திர ராணா திட்டம் போட்டுள்ளார். இதற்காக அவர் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.
அதாவது மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக மோனாவின் குடும்பத்துக்கு தெரிவித்தார்.
அதோடு மோனா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வேறு மாநிலத்துக்கு தப்பித்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
அதோடு கொரேனா தடுப்பூசியை மோனா செலுத்தி கொண்டதற்கான போலி சான்றிதழையும் அவர் உருவாக்கி குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு மோனாவின் செல்போன் சிம் கார்டை உறவினரான ராபின் என்பவரிடம் வழங்கி அவரை மோனாவின் காதலனான அரவிந்த் போல் பேச செய்துள்ளார்.
அவரும் மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ‛‛நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது குர்கானில் உள்ளோம்.
காதல் திருமணம் செய்ததால் மோனா உங்களிடம் பேச பயப்படுகிறார். நாங்கள் 10-15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் மோனா உண்மையில் காதல் திருமணம் செய்து தலைமறைவாகி உள்ளதாக நம்பினர். போலீசாரையும் அவர்கள் நம்ப வைத்தனர்.
ஆனால் கூறியபடி இருவரும் மோனாவின் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் எங்களுக்கு சந்தேகம் வலுத்தது. இதற்கிடையே செல்போன் எண்ணை கண்காணிக்க ஆரம்பித்தோம்.
அப்போது அந்த செல்போன் எண் ஹரியானாவின் டேராடூன், ரிஷிகேஷ் மற்றும் முசோரியில் உள்ள ஓட்டல்களில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்று விசாரித்தபோது மோனாவின் பெயரில் அறைகள் எடுத்து இருப்பது உறுதியானது. இதனால் மோனா உயிருடன் இருப்பதாக நினைத்தோம்.
அதோடு உண்மையிலேயே மோனா காதல் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் திட்டுவார்கள் என்பதால் அவர் வீட்டுக்கு செல்ல விரும்பிவில்லை என நினைத்தோம்.
மேலும் அடிக்கடி மோனாவின் குரல் பதிவுகளை போல் எடிட் செய்த ஆடியோக்களும் மேனாாவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் மோனா உயிருடன் இருப்பதாக போலீசார் எண்ணினார்கள். இதற்கிடையே தான் இந்த வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வேளையில் மோனாவின் காதலனான அரவிந்த் என்பவர் தொடர்பு கொண்ட செல்போன் எண் குறித்த விபரம் கிடைத்தது. அதனை ஆய்வு செய்தோம்.
அப்போது அந்த செல்போன் எண் இன்னொரு குற்றவாளியான ராஜ்பாலுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தோம்.
இந்த செல்போன் எண்ணின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் மோனாவை, ஏட்டு சுரேந்திர ராணா கொலை செய்து உறவினர்களான ராபின் மற்றும் ராஜ்பால் ஆகியோருடன் சேர்ந்து உடலை மறைத்ததை கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.
மேலும் மோனாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டினர். அது மோனாவின் உடல் தானா? என்பதை உறுதி செய்யும் வகையில் அதில் இருந்த எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கான போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
உடன் பணிபுரிந்த போலீஸ் பெண் காதலை ஏற்காத நிலையில் அவரை கொன்று உறவினர்கள் உதவியுடன் புதைத்து 2 ஆண்டுகளாக நாடகமாடிய ஏட்டுவின் இந்த செயல் டெல்லியை அலற வைத்துள்ளது