அண்ணா திமுகவை பாஜக கூட்டணியில் இருந்து விரட்டியதால் இப்போது ‘குற்றவாளி’ கூண்டில் நிறுத்தப்பட்டது போல நிற்கவைக்கப்பட்டுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பான விசாரணைக்காக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் அண்ணாமலை. ஆனால் டெல்லி சென்ற அண்ணாமலையை பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட சந்திக்க முடியாது என சொல்லிவிட்டனராம்.
இதனால் டெல்லியின் கோபத்தை எப்படி தணிப்பது என தமது சக நண்பரான கர்நாடகா எம்பியின் வீட்டில் அமர்ந்து ஆலோசனை நடத்தினாராம் அண்ணாமலை.
அப்போதுதான் உடனடியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை போய் பாருங்கள் என பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டதாம்.
இதுவரை தமிழ்நாடு பாஜக விவகாரங்களை கவனித்து வந்தவர் பிஎல் சந்தோஷ். அவருடன் மிக மிக நெருக்கமாக இருந்ததால் அண்ணாமலைக்கு சிக்கல் வராமல் இருந்தது.
தற்போது திடீரென நிர்மலா சீதாராமனை சந்திக்க வேண்டும் என மேலிடம் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்தாராம் அண்ணாமலை.
இதனையடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார் அண்ணாமலை.
தற்போது தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவரும் தமிழ்நாட்டு உண்மை நிலவரங்களை தெரியப்படுத்தாமல் மறைத்தவருமான பிஎல் சந்தோஷ் நீக்கப்படுவார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
பிஎல் சந்தோஷ் நீக்கப்படும் நிலையில் அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனி தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராக செயல்படுவார்; அறிவிக்கப்படுவார் என்கின்றன டெல்லி செய்தியாளர்கள் வட்டாரங்கள்.
இதுநாள் வரை எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தபடி கேம் ஆடிக் கொண்டிருந்த அண்ணாமலை மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை பெரும் கிலியை தரக் கூடும் என்கின்றன,
அக்கட்சியின் உள்வட்டாரங்கள். அதேநேரத்தில் அண்ணாமலையை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள் இப்போது நடந்து வரும் மாற்றங்களைக் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் மாறாதது!