நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌவல்ய நவரத்ன தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.தவபாலன் ஆகியோருக்கும், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று காலை நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பின்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட ரி.சரவணராஜா, நாட்டை விட்டு  வெளியேறியுள்ள நிலையில், அவ்வாறு அவர் வெளியேறுவதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர்ச்சியான அழுத்தம் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக பிரதம நீதியரசரின் கவனத்துக்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தினர் கொண்டுவந்திருந்தனர்.

அத்துடன், குறித்த விடயம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பேசுபொருளாகியுள்ளதோடு நாட்டின் நீதித்துறையின் மீதும் மிகப் பாரிய கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களம் மீதான விசனம் ஒட்டுமொத்தமாக நீதித்துறையை அகௌரவத்துக்கு உள்ளாக்குவதோடு, அச்சுறுத்தும் நிலைமையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே, இவ்விதமான நிலைமைகள் தொடராது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமாக இருந்தால், ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்த வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, குறித்த விடயத்தில் முழுமையான கரிசனை கொள்ளப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதனையடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்னவின் கையொப்பத்துடன் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிரச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை தாமதமின்றி கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பிலும் உண்மையான நிலைமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை கோரியும் இரு வேறு கோரிக்கை கடிதங்கள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி விடயங்களை இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் கௌசல்ய நவரட்ன வீரகேசரிக்கு உறுதிப்படுத்தியதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் தெளிவுபடுத்தல்களுக்காக காத்திருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply