வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம் குறித்து கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை சாட்சிகள், திங்கட்கிழமை (02) அடையாளம் கண்டனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில், நால்வரும் அடையாளம் காணப்பட்டனர்.
விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், சந்தேகநபர்களை ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி பதுளையைச் சேர்ந்த 42 வயதான ஆர்.ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தமைக்கமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்அடிப்படையில், ராஜன் ராஜகுமாரி கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியினால் கடந்த 25ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.