மதுரை: கணவர் இறந்த 4 நாளில் துக்கம் தாங்காமல், குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஜெயம்நகர் பகுதியில் மித்தல் நகரை சேர்ந்தவர் விவேக் . 30 வயதாகும் இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி ஷாலினிக்கு 25 வயதாகிறது. இவர் டிகிரி முடித்த பி.காம். பட்டதாரி ஆவார்.

இவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் விசாகா என்ற குழந்தை இருந்தது.

இந்த நிலையில் ஷாலினி 2-வது முறையாக கர்ப்பம் அடைந்து 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக விவேக் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு குழந்தை விசாகாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

அதன்பிறகு விவேக் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் விவேக் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனவருத்தத்தில் இருந்த ஷாலினி, வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதிக்கு நேற்று காலை தனது 2 வயது மகள் விசாகாவுடன் சென்றிருக்கிறார்.

பின்னர் அவர் விசாகாவை தனது முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தார். இதில் நீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக திருநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஷாலினி உடலை மீட்டனர்.

குழந்தை விசாகா உடலை நீண்டநேரம் தேடியும் கிடைக்கவில்லை.இதையடுத்து மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி குழந்தையின் உடலை மீட்டார்கள்.

கணவர் இறந்த துக்கத்தில் தாய் குழந்தையுடன் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் காண்போரை கலங்க வைத்தது. இதனிடையே இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவேக்கிற்கும், ஷாலினிக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் சம்பவம் பற்றி ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்

இதனிடையே மகன் இறந்த நிலையில், மருமகளும், பேத்தியும் இறந்த துக்கம் தாளாமல் ஷாலினியின் மாமனார் ரவிச்சந்திரன், அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

Share.
Leave A Reply