உலகில் ஒரு தலைவர் புகழப்பட்ட அளவிற்கு வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக சூகி ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

பர்மாவின் மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு அரசியல் புயல் தன் நாட்டில் நடந்த இனப் படுகொலைக்கு பொறுப்பு வகிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருக்கிறார்.

இதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களையும் அளித்துள்ளார். ரோஹிங்கியா மக்களின் விஷயத்தில் இவரின் மௌனம் மிகப் பெரிய வரலாற்று பிழையை செய்து விட்டதாக விமர்சனம் வைத்தாலும் சூகியின் ஆரம்பகால அரசியல் பர்மாவின் ஜனநயாகத்தைக் காதலித்ததாகத் தான் இருந்தது.

சூகியின் வாழ்க்கை, பர்மாவையும் பர்மாவின் அரசியலையும் கூடவே சேர்த்துக் கொண்ட ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பர்மாவின் அரசியலில் அசைக்க முடியாத ஒரு வரலாற்றுத் தூணாகவே இருந்திருக்கிறார் ஆங் சாங் சூகி.

பர்மாவின் தொடக்க காலக்கட்டம்

பர்மா எப்போதும் ஒரு வளமான நாடாகவே இருந்திருக்கிறது. கனிமம், பெட்ரோல், தேக்கு போன்றவற்றால் உலகின் பல நாடுகளின் கண்களை பர்மா எப்போதும் ஈர்த்தே வந்திருக்கிறது.

பர்மா ஒரே நாடாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். பைஸ், ஷான், பர்மா என்று மூன்றாக இருந்த பகுதிகளை பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போதுதான் ஒன்றாக இணைக்கப் பட்டன.

வெறுமனே 4 கோடி மக்களை கொண்ட பர்மா உலக அளவில் அரசியல் முக்கியத்துவம் உடைய நாடாக தற்போது வளர்ந்திருக்கிறது என்றால் அது சூகியையே சாரும்.

அந்த வரலாற்றுப் பக்கங்களில் என்றைக்குமே மன்னிக்க முடியாத கொடுமையாக ரோஹிங்கியா இனப் படுகொலையையும் சேர்ந்து கொண்டது.

இது தனியாக விவாதிக்க வேண்டிய ஒரு அத்யாயம். இங்கு சூகியின் ஆளுமையைக் குறித்த ஒரு வரலாற்று பதிவாகவே இக்கட்டுரை அமைகிறது.

பர்மா இந்தியாவைப் போன்று பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் ஆட்சியில் சிக்கி தவிக்கவில்லை என்றாலும் சொந்த நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் சித்தரவதையை அனுபவித்திருக்கிறது.

இந்த அரசியல் நிகழ்வுகள்தான் சூகி என்ற ஒரு பெரிய ஆளுமையை உலகிற்கு அடையாளம் காட்டவும் செய்திருக்கிறது.

1885 முதல் 1948 வரை பர்மா பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக பர்மா சிறிய அளவிற்கான போராட்டங்களையே முன்னெடுத்தன.

ஆனால், தனது சொந்த தேசத்தில் விடுதலைக்காகப் போராடிய அவல நிலைதான் உலக வரலாறுகளில் எங்குமே நடக்காத கதையாக இருந்தது.

வடக்கில் சீனம், மேற்கில் இந்தியா என்ற நெருக்கடியான நில அமைப்பை கொண்டது பர்மா. பூமிக்கு அடியில் கிடைத்த கனிமம், தேக்கு, பெட்ரோலியம் மூன்றும் இந்த நாட்டின் மீது அனைவரின் பார்வையையும் ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தன.

அமைதியான சூழலில் இருந்த பர்மா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாட்டிக் கொண்டது கூட ஒரு சுவாரசியமான கதை.

1824 இல் இந்தியாவின் அசாம், மணிப்பூர் பகுதிகளை பர்மா கைப்பற்றிக் கொண்டது. எதற்கு இந்த வேண்டாத வேலை என்று அப்போது பர்மீயர்களுக்கு புரியாமல் இருந்தது.

அப்போது, இந்தியர்களின் ஆட்சி அமையாத காலக்கட்டம். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதைக் கேள்விக் கேட்டது.

அசாம், மணிப்பூர் பகுதிகளை மீட்பதற்கு ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய பீரங்கிகளைக் கொண்டு போரிட தயாரானார்கள். வேல், கம்பு, ஈட்டிகளை வைத்திருந்த பர்மிய இராணுவம் தாக்குப் பிடிக்க முடியாமல் பல உயிர்களை இழந்தது தான் மிச்சம்.

இந்தப் போராட்டத்தில் பர்மாவின் நிலை படுமோசத்திற்கு தள்ளப் பட்டது. செவனேனு இல்லாமல் பர்மா செய்த வேலையால், 1885 இல் முழுமையாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாட்டிக் கொண்டது.

பர்மியர்கள் பிரிட்டிஷை எதிர்த்து 3 பெரிய போர்களையும் நடத்தினார்கள். பிரிட்டிஷ், பர்மாவை இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டு ஆட்சி செய்தது. 1937 வரை பர்மா, இந்தியாவில் ஒரு மாகாணமாகவே இருந்தது குறிப்பிடத் தக்கது.

எதற்கு இத்தனை கதை என்று யோசிக்கலாம். பிரிட்டிஷ்க்கு எதிரான போராட்டத்தில் தான் சூகியின் தந்தை ஆங் சாங் உலகம் முழுவதும் அறியப்படுகிற ஒரு போராளியாக இருந்தார்.

1913 இல் பிரிட்டிஷின் ஆளுகைக்குட்பட்ட ரங்கூன் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஆங் சாங் முதன்மையான இடத்தை வகித்தார் என்றே சொல்ல வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை பிரிட்டிஷ் அரசு துப்பாக்கியைக் கொண்டு ஒடுக்குகிறது.

சுமார் 200 மாணவர்கள் கீழே பிணமாக விழுந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை வரவழைக்கிறது. பின்னர் பிரிட்டிஷை எதிர்த்து மக்கள் போராடவே பயப்படும் நிலைமை உருவாகிறது.

மாணவர்களின் போராட்டம் ஒடுக்கப் பட்ட நிலையில் ஆங் சாங் ஒரு மாணவர் பத்திரிகையை நடத்துகிறார்.

அதில் வெளியான ஒரு அரசியல் கட்டுரையால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். பின்பு 1930 இல் அனைத்து பர்மா மாணவர் சங்க தலைவர் ஆகிறார். உலக நாட்டு மாணவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்கிறார். மாணவராக இருந்த ஆங் சாங் ஒரு புரட்சியாளராகவும் மாறுகிறார்.

மார்க்சியத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட ஆங் சாங் பின்னாளில் பர்மாவின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பிரிட்டிஷை எதிர்த்து மாணவர்களைத் தவிர பெரிய அளவிலான போராட்டங்களை யாரும் முன்னெடுக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் காலக் கட்டத்தில் ஆங் சாங் எடுக்கும் முடிவுதான் உலக அரசியலில் வியக்கத் தக்கதாகும். ஏறக்குறைய இந்தியாவின் சுபாஷ் சந்திர போஷ் என்ன நினைத்தாரே அதையே தான் ஆங் சாங் கும் செய்தார்.

“எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற வகையில் பிரிட்டிஷை எதிர்க்க வேண்டும் என்றால் அந்நாட்டின் எதிரியான ஜப்பான் படைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

ஜப்பானுக்கு சென்று டோஜோ வை சந்திக்கிறார். முதலில் பாம்பின் விஷத்தை அறியாத ஆங் சாங் ஜப்பான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறார். அதன்படி பர்மாவின் இளைஞர்களை அழைத்துச் சென்று ஜப்பானில் இராணுவப் பயிற்சி கொடுக்கப் படுகிறது.

ஜப்பானின் திட்டம் என்னவென்றால் சுபாஷ் சந்திர போஷின் இந்திய தேசிய ராணுவம் பர்மா வழியாக இந்தியாவிற்குள் நுழையும். அதே நேரத்தில் பர்மாவின் படையும் பிரிட்டிஷ் க்கு எதிராக போர் புரியும்.

பர்மாவில் பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி விடலாம். வெற்றி பெற்ற பின்பு பர்மா அந்த மக்களுக்கே சொந்தமாகக் கொடுக்கப் படும். இதுதான் ஜப்பான் கொடுத்த வாக்குறுதி. ஆனால் நடந்ததே வேறு.

பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்திய ஜப்பான் பர்மாவில் சொந்த மண்ணை சார்ந்தவர்களையே அடிமையாக நடத்த ஆரம்பிக்கிறது.

ஜப்பானின் ஒடுக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாத பர்மியர்கள் மீண்டும் தங்களது விடுதலைக்குத் தயாராக வேண்டிய நிலை வருகிறது.

எனவே ஆங் சாங் இங்கு ஒரு முக்கியமான முடிவினை எடுக்கிறார். தன் எதிரியான ஆங்கிலேயருடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்.

ஆங்கிலேயர் படையுடன் ஆங் சாங்கின் படை சேர்ந்து கொண்டு ஜப்பான் படையை விரட்டி அடிக்கிறார்கள். போர் நடைபெற்ற போது ஆங் சாங் உடல் நலக் குறைவினால் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். அந்த மருத்துவமனையின் செவிலியே இவருக்கு மனைவியாகவும் வாய்க்கப் பெறுகிறார்.

இந்தச் சந்திப்பின் பின்பு இரண்டு குழந்தைகளுக்குப் பின்னர் மூன்றாவதாக ஆங் சாங் சூகி பிறக்கிறார்.

இந்தப் பெயரே ஒரு மிகப் பெரிய வரலாறு தான். ஆங் சாங் என்பது அவரின் அப்பாவின் பெயர். சூ என்பது அவரின் அம்மாவின் பெயர். கி என்பது அவரது பாட்டியின் பெயரில் இருந்து எடுக்கப் பட்டது. இப்படி பலரின் பெயரை இணைத்து உலகின் “இரும்பு மனிதி” ஆங் சாங் சூகி உருவாக்கப் படுகிறார்.

Aung-San-1947

1948 இல் பர்மாவுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் பர்மாவுக்கு விடுதலை கிடைத்த உடனேயே நடைபெற்ற ஒரு கலவரத்தில் 1948 இல் ஆங் சாங் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

வரலாற்று முக்கியத்துவம் உடைய இரண்டு நாடுகளின் படைகளுடன் கூட்டணி வைத்து சொந்த நாட்டை மீட்ட ஆங் சாங் வெறுமனே சுட்டுக் கொல்லப் பட்டார். இப்படித்தான் அவரைப் பற்றிய எந்த வரலாறுகளும் இல்லாமல் ஆக்கப் படுகிறது.

விடுதலை நாடான பர்மா

பர்மாவின் முதல் விடுதலை அரசை 1948 இல் Sao shwe thaik அமைக்கிறார். ஆட்சியை அமைத்தவுடன் போராளி ஆங் சாங்கின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுக்கிறார். அதன்படி ஆங் சாங்கின் மனைவி San Diego அந்நாட்டின் வெளிநாட்டுத் தூதரராக அறிவிக்கப் படுகிறார்.

நமது கதையின் நாயகி சூகி, பிறந்தது முதல் பர்மாவை விட்டு தள்ளியே இருக்கிறார். டெல்லியில் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை முடிக்கிறார். டெல்லி மத்திய பல்கலைக்கழகத்தில் அரசியலைப் பயில்கிறார். பின்னர் இங்கிலாந்திற்கு சென்று தத்துவம், வரலாறு, அரசியல் துறைகளில் பட்டத்தைப் பெறுகிறார்.

தன்னுடன் பயின்ற Michael Aris என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வாழத் தொடங்குகிறார். இவருக்கு Alexander Aris, Kim Aris என இரண்டு குழந்தைகளும் பிறக்கின்றன.

1988 மார்ச் மாதம் சூகி தனது 43 ஆவது வயதில் பர்மாவுக்கு வருகிறார். தாயாரின் உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தினால் தான் பர்மாவிற்கே வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 43 வயது வரை சூகியின் உணர்வில் போராட்டக் குணம் இல்லை என்பதும் முக்கியமான அம்சம்.

அரசியல், பொருளில், தத்துவத் துறைகளில் பயின்று இருந்தாலும் மார்க்சியத்தை அவர் ஒருபோதும் நம்பவில்லை என்பதே முக்கியமான அம்சம். என் தந்தை வேண்டுமானால் கம்யூனிஸ்ட் ஆக இருக்கலாம். ஆனால் அந்தச் சித்தாந்தத்தில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்றே தெரிவிக்கிறார்.

சூகியின் வாழ்க்கையில் அவர் மிகவும் பெரிதாக நம்பியது அஹிம்சை தத்துவம் தான். இதற்கு அவர் இந்தியாவில் கல்வி பயின்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவின் தேசப் பிதா காந்தியின் கொள்கை அவருக்குள் முழுதாகப் பாய்ந்து இருந்தது என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

1948 இல் விடுதலை பெற்ற பர்மாவில் 1951, 1956, 1960 என மூன்று முறை தேர்தல் நடைபெறுகிறது.

அந்நாட்டில் மிகப்பெரிய கட்சியாக வூனு கட்சி இருக்கிறது. 1958 இல் இக்கட்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவும் நாட்டை அகல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. இதன் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட Ne win ஒரு சர்வாதிகாரி அரசைக் கட்டமைக்கிறார்.

1962 இல் வூனுவின் அரசைக் கவிழ்த்துவிட்டு கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறார் Ne win. அடுத்தடுத்து அவர் செய்த நலத் திட்டங்கள் தான் அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

முதலில் 2000 மூத்த அதிகாரிகளை கட்டாயமாக பணியில் இருந்து தூக்கியெறிகிறார் Ne win. அந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப் பட்ட விருப்ப ஓய்வின் பின்னணியில் இராணுவ ஆட்சி அந்நாட்டில் அமல்படுத்தப் படுகிறது.

அந்நாட்டில் இருந்த 234 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை Ne win உடைய இராணுவ அரசு ஒட்டுமொத்தமாக ரத்து செய்துகிறது.

பர்மாவில் 1962 – 1988 வரை 28 ஆண்டுகள் கொடுமையான இராணுவ ஆட்சியில் மக்கள் அலைக் கழிக்கப் படுகின்றனர். நாட்டில் எதையும் மக்கள் உரிமைக் கொண்டாடவோ, அனுபவிக்கவோ முடியாத நிலைமை உருவாகிறது.

மக்கள் உழைக்கலாம், சாப்பிடலாம், கூரைகளுக்கு நடுவில் முடங்கிக் கிடக்கலாம். ஆனால் சொந்த தேசத்தில் அடிமைகளாக இருக்க மட்டுமே அனுமதிக்கப் பட்டது.

அந்நாட்டில் மிகப்பெரிய வளமாக இருந்து வந்த தேக்கு காடுகளும் தாய்லாந்து கம்பெனிகளுக்கு விற்கப்படுகிறது.

விற்கப்பட்ட பணமும் அந்நாட்டில் மக்களுக்குப் பயன்படுத்தப் படவில்லை. சொந்த நாட்டில் மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேச முடியாமல், சம்பாதிக்க முடியாமல் ஜாடிக்குள் அடைந்து கிடப்பதைப் போலவே அடைந்து கிடக்கின்றனர். இந்த நிலைமையைப் பார்த்த சூகி அதிர்ந்து போகிறார்.

மக்கள் போராட்டங்களைக் கூட முன்னெடுக்க முடியாத கொடூர கட்டுப்பாட்டில் நாடு இருப்பதால் நிலைமை மோசமாகிறது.

எனவே சூகி மக்களை நேரில் சந்திக்க முடிவெடுக்கிறார். மக்களோடு தொடர்பு கொள்கிறார், மக்களோடு பேசுகிறார்.

ஆங் சாங் சூகி கட்சியைக் கூட தொடங்காத நிலையில் ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகிறார். தான் கலந்து கொண்ட முதல் கூட்டத்திலேயே சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதைக் கண்டு வியக்கிறார்.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டில் நடக்கும் கூட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடுவதே அரிதான காரணமாக இருக்கிறது.

சூகிக்கு ஆன் சாங்கின் மகள் என்பதால்தான் இத்தனை வரவேற்பு கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சூகியின் எழுச்சி Ne win கவனத்தைச் சிதற வைக்கிறது. இப்படியே வளர்ந்து விட்டால் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது என்ற கட்டத்தில் Ne win ஒரு அசுரத்தனமான முடிவினை எடுக்கிறார்.

இந்த முடிவுதான் வரலாற்றில் சூகியை வலிமை மிக்கவராக மாற்றுகிறது. 1989 இல் ஜுலை மாதம் சூகி வீட்டுக் காவல் வைக்கப்படுகிறார். 1989 – 1995 வரை வீட்டுக்காவல் தொடர்கிறது. தலைமை இல்லாமல் போராட்டம் அடங்கி விடும் என்று நினைக்கிறார் Ne win.

ஆனால் நடந்ததோ வேறு. நாட்டில் எங்கே பார்த்தாலும் கலவரம். கலவரத்தைக் கட்டுப் படுத்த முடியாத நிலைமை உருவாகிறது.

தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நெருக்குதல்கள் இராணுவத்திற்கு வருகிறது. இக்கட்டத்தில் Ne win ஆடிய விளையாட்டுத்தான் எவருக்கும் கோபத்தை விட சிரிப்பையும் சேர்த்து வரவழைத்துவிடுகிறது.

தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் “மக்களின் உணர்வை நான் மதிக்கிறேன். விரைவில் தேர்தல் நடத்தப் படும்” என Ne win அறிவிக்கிறார்.

தேர்தல் நடத்துவதற்கு கட்சியினர் மத்தியில் ஒப்புதல் கிடைக்கவில்லை எனவே புதிய பொறுப்பில் ஜெயின்வின் அமர்த்தப் படுகிறார் என அறிவிப்பு வெளியாகிறது.

புதிய பொறுப்பில் யாரை அமர்த்தினால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு தேர்தல் வேண்டும் என சூகியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு சர்வாதிகாரி Ne win, மக்கள் ஜெயின் வின்னை ஏற்றுக் கொள்ளவில்லை என பதவியில் இருந்து நீக்குகிறார்.

தலைவலியில் மக்கள் இருக்கும்போது மாம்மாங் ஐ இராணுவத்தின் தலைமை பொறுப்பில் அமர வைக்கிறார் Ne win. மாம் மாங் மற்றவர்களைப் போல தலையாட்டி பொம்மையாக இல்லாமல் சிறையில் இருந்த 400 பேரை விடுவிக்கிறார். பதறிப்போன Ne win மாம் மாங்கை உடனே பதவியில் இருந்து தூக்கியெறிகிறார்.

முதல்லி அமர்த்திய Sein lwin ஐ மக்கள் விரும்பவில்லை எனப் பதவியை விட்டு தூக்கினார். பின்னால் வந்த Maung Maung காரணம் சொல்லாமலே துக்கியெறிந்தார்.

ஆனால் தேர்தல் வைக்க வேண்டும் என்ற குரல் மட்டும் குறைந்த பாடில்லை. எனவே 1990 இல் தேர்தல் நடத்தப் படுகிறது. கூடவே ஒரு அறிவிப்பும் வெளியாகிறது. “தேசத் துரோகிகள் போட்டியிட முடியாது” இந்தப் பட்டியலில் சூகி முதல் இடத்தில் இடம் பெறுகிறார்.

சூகி கட்டமைத்த National league for democracy பர்மாவின் மொத்த இடங்களில் 445 க்கு 392 இடங்களைப் பிடிக்கிறது.

மொத்தம் 86.5% மக்களின் வாக்குகளைப் பெற்ற அபாரத் தலைமையை சூகி வென்றெடுக்கிறார். இந்த வெற்றியை சூகியால் கொண்டாட கூட முடியவில்லை. ஏனென்றால் Ne win னின் அறிக்கை அப்படியான விசித்திரத்தைக் கொண்டிருக்கிறது.

தேர்தலை நடத்தியது Ne win. பர்மாவில் தொடர்ந்து 28 ஆண்டுகள் இராணுவ ஆட்சியை நடத்திவருகிறார்.

இவரது கட்டுப்பாட்டில் தான் அனைத்து தொகுதிகளும் இருக்கின்றன. ஆனால் இவர் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதோடு 2.1% வாக்குகளை மட்டுமே இவர் பெற்றெடுக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டியது. செய்வதறியாது தவித்த Ne win “இந்தத் தேர்தலில் தில்லு முல்லு நடந்துவிட்டது” வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கிறார்.

இது மட்டுமில்லாமல் இன்னொரு அறிவிப்பும் வெளியாகிறது. வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 10 முதல் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அறிவிக்கப் படுகிறது. அடுத்த தேர்தலில் யாரும் வேட்பாளர்களாகக் கூட நிற்க கூடாது என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பும் வெளியாகிறது.

இத்தனை வேடிக்கைத் தனங்களையும் உலகம் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. சூகியின் காவல் மீண்டும் தொடருகிறது. வீட்டிற்குள்ளும் வெளியேயுமாக சூகியின் அரசியல் வாழ்க்கை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தருணத்தில் ஒரு அதிசயம் நடக்கிறது. அதுவரை உலகின் பார்வையில் இருந்து மறைக்கப் பட்டிருந்த சூகி உலகம் முழுவதற்கும் கொண்டாடப் படுகிறார். ஆங் சாங் சூகிக்கு 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நார்வே நோபல் பரிசினை அறிவிக்கிறது.

இந்தப் பரிசினை வாங்குவதற்கு சூகி வருவார், அவரை எப்படியும் பார்த்து விடலாம் என உலகப் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் காத்திருக்கிறார்கள். ஆனால் சூகி இன்னும் வீட்டுக்காவலில் தான் இருக்கிறார்.

Myanmar’s leader Aung San Suu Kyi leaves the International Court of Justice (ICJ) after the second day of hearings in a case filed by Gambia against Myanmar alleging genocide against the minority Muslim Rohingya population, in The Hague, Netherlands December 11, 2019. REUTERS/Yves Herman

பர்மாவின் அரசியல் நிலைமைகளில் வலிமையான அரசை அமைக்க வழியில்லாமல் Union Solidarity and development party யும் சூகியின் National league for democracy மாறி மாறி அரசியல் தளத்திற்கு போட்டியிடுகின்றனர்.

ஆனாலும் Ne win னின் அதிகாரம் அந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலைமைகளால் சூகி வீட்டுக்காவல் முடிவுக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

மிகப்பெரிய அரசியல் தலைமையாக இருந்து, மக்களை ஒன்றிணைத்து, வழிகாட்டி வீட்டுக்குள் அடைந்து கிடந்த சூகியின் வாழ்க்கையில் வலிமை மிக்கவராக உணர வைத்தத் தருணங்கள் நிறையவே நடந்திருக்கிறது.

1993 வரை கணவர் Michael Aris க்கும் அவரது பிள்ளைகளுக்கு சூகியைப் பார்க்க அனுமதி வழங்கப் பட்டு வந்தது. ஆனால் 1995 க்கு பின்னால் பிள்ளைகள் அனுமதிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

1999 வரை கணவர் Michael Aris சூகியை சந்தித்து வந்தார். பின்னர் இவருக்கும் விசா மறுக்கப் பட்டது.

அடுத்த ஒரு இறுதியான சந்தர்ப்பம் தான் இவரை யார்? என உலகின் முன் அடையாளம் காட்டுகிறது. 1999 இல் கணவர் Michael Aris இறந்து போகிறார்.

அப்போது சூகி வீட்டுக் காவலில் இல்லாமல் வெளியே தான் இருக்கிறார். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப் பட்டு இருந்தது.

சூகி தன் கணவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள லண்டன் செல்ல வேண்டும். இதற்கு அந்நாட்டு அரசாங்கம் முழு அனுமதியும் வழங்குகிறது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. பர்மாவை விட்டு வெளியே போனால் மீண்டும் இந்நாட்டிற்குள் வரக்கூடாது என்பதுதான்.

சூகி துளியும் அலட்டிக் கொள்ளவில்லை. பிறந்த மண்ணைவிட்டு போனால், திரும்ப வர முடியாது. லண்டனுக்கு போக வேண்டுமா? என்ற கேள்வியைத்தான் சூகி கேட்கிறார். மக்களும் அந்நாட்டு அரசும் கண்டிப்பாக போக வேண்டும் என்றே சொல்கின்றன. ஆனால் மண்ணையும் மக்களையும் காதலித்த சூகி இறுதி சடங்கிற்கு போக வில்லை என்பது தான் முக்கியமானது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட சூகி தனது கணவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை.

லண்டனில் அவரக்கு குடியுரிமை இருக்கிறது. சென்றிருந்தால் சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அந்த முடிவினை சூகி எடுக்கவில்லை. எங்கிருந்தாலும் கட்சியை வழி நடத்தலாம் எனத் தன் தரப்பினர் கூட அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆனால் “இரும்பு மனிதி” அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

மீண்டும் 2000 இல் சூகி கைது செய்யப் படுகிறார். பின் ஓராண்டு வெளியே இருந்து மீண்டும் 2002 இல் கைது. 2003 – 2007 வரை வீட்டுக்காவல். 2009 இல் மார்ச்சில் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர் ஜான் டெப் சூகியை வந்து பார்க்கிறார். வீட்டுக் காவலைப் பாத்த அவர், இது மனித நேயத்திற்கு எதிரானது எனக் குரல் கொடுக்கிறார். உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல் வலுக்கிறது. ஆனால் சூகி விடுதலை செய்யப்படவில்லை.

பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டிப்பாக சொல்கிறார், அவரை வீட்டுக் காவலில் இருந்து வெளிவிட வேண்டும், மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நெருக்கடியில் தான் சூகி வீட்டுக் காவலை விட்டு விடுதலை பெறுகிறார்.

அரசியல் வரலாற்றிலேயே ஒரு பெண் அதிக நாட்கள் சிறையில் இருந்தது ஆங் சாங் சூகி மட்டுமே.

சுமார் 21 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் மியான்மர் நாட்டின் குடியரசுக்காக வைக்கப்பட்டு இருந்தார். ஒரே நேரத்தில் தன்னுடைய நாட்டின் விடுதலைக்குப் பாத்திரமாக இருந்த சூகி, ரோஹிங்கியா இன மக்களின் இனப் படுகொலைக்காக உலகம் முழுவதிலும் வெறுக்கப்படும் மனிதராக மாறயிருக்கிறார்.

ஒரு பெண் அரசியல் தலைவர் 21 ஆண்டுகள் சிறையில் வைக்கப் பட்டார் என்பது நெல்சன் மண்டேலாவிற்கு அடுத்தப்படியாக வைத்து உணரப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சூச்சி ரோஹிங்கியா இனப்படுகொலைக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப் பட்டது.

ரோஹிங்கியா படுகொலைக்கு நீதி வேண்டும் என காம்பியா சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது. இந்த விசாரணைக்கு பர்மாவின் இராணுவமும் அந்நாட்டு அரசாங்கமும் தயாராக இருந்த நிலையில் தானே முன்வந்து சூகி நீதிமன்றத்தில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார்.

ரோஹிங்கியா வழக்கில் தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என சூச்சி சர்வதேச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் உலகம் முழுக்கவே இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின என்பதும் குறிப்பிடத் தக்கது.

ரோஹிங்கியா இனப்படுகொலை

மியான்மர் ராக்கைன் மாநிலத்தில் இருந்த முஸ்லீம்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை மறுத்தது.

மியான்மரில் வசிக்கும் பெரும்பான்மை புத்திஸ்ட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்த நிலையில் குடியுரிமை மறுக்கப் பட்டது.

பின்பு இதுவே இன வாதமாக மாறிவிட்டது. கடந்த 2016 முதல் அடிக்கடி மோதல் இருந்து வந்த நிலையில் 2018 இல் பிரச்சனை உச்சக் கட்டத்தை எட்டியது.

இனப்படுகொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக வெறிச் செயல்கள் அவிழ்த்துவிடப் பட்டன.

இச்சூழலில் அந்நாட்டு இராணுவமும் சேர்ந்து கொண்டதுதான் சூகி மீது சர்வதேச நாடுகள் முதற்கொண்டு குற்றச் சாட்டை முன்வைப்பதற்கு காரணமாக மாறிவிட்டது.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானா சூச்சி “ராக்கைன் மாகாணத்தில் நடந்த சிக்கலானது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது. காம்பியா ராக்கைன் மாகாணத்தில் நடந்ததைப் பற்றி முழுமையில்லாத தவறான தகவலை அளித்துள்ளது” எனத் தெரிவித்து இருந்தார் .

அமைதிக்காக நோபல் பரிசை வென்றவர் அமைதிக்கு எதிராகத் திரும்பினார் எனச் சர்வதேச நாடுகள் முழுக்க தற்போது குரல் கொடுத்து வருகின்றன. இதன் பின்னணியில் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜரானார் என்பது இவரின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய முரணாகவே கருதப்படுகிறது.

ஈழப் போராட்டம் நடந்தபோது ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்காக பர்மா முன்வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் சொந்த மக்களை கொன்று குவிக்கிற ஒரு நாடு எப்படி மற்ற நாடுகளுக்கு உதவ முன்வந்தது என்பதுதான் தற்போதுள்ள கேள்வியே.

புத்த பிட்சுகள் வழிநடத்துகிற ஒருநாட்டில் அன்றைய ஜனநாயகத்தின் விடுதலைக்காக பர்மாவில் 1 லட்சம் பேர் கொன்று குவிக்கப் பட்டனர்.

இன்றைக்கு ரோஹியங்கியா மக்களின் இனப்படுகொலை. தொடரும் ரத்த வெள்ளத்திற்குள் ஒரு போராளியின் வலிமை. இப்படியான முரணை என்னவென்று புரிந்து கொள்ளவதற் தென்றே புலப்படவில்லை. முரண்பாடுகள் நிறைந்த சமூகத்தில் போராளிகளும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

 

Share.
Leave A Reply