சென்னை: சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் திருமணமான 4 மாதங்களில் புதுமணத் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூர் புத்தூர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரவணன் (30). இவர் ஒரகடத்தில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மனைவி காயத்ரி (25). சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை சரவணன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்.
அப்போது காயத்ரி தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை பார்த்த சரவணன் அலறியுள்ளார்.
இதையடுத்து அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் சரவணனின் வீட்டுக்குள் வந்து பார்ப்பதற்குள் அவரும் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பீர்க்கங்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடனே சடலங்களை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணையில் சரவணனுக்கு மது, போதை பொருள் உள்ளிட்ட கெட்டப்பழக்கங்கள் இருந்து வந்தது தெரியவந்தது.
திருமணத்திற்கு முன்பு சரவணன் தனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என தெரிவித்திருந்தாராம்.
இதனாலேயே அதிர்ச்சியில் காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பது பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என காயத்ரி எழுதிய தற்கொலை கடிதத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படுகிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-newly-married-couple-commits-suicide-in-perungalathur-545297.html?story=2