ஈரானில் ஹிஜாப் அணியாதமைக்காக பொலிஸார் தாக்கியதில் யுவதியொருவர் கோமாநிலைக்கு சென்றுள்ளார் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸார் ஹிஜாப்பினை ஒழுங்கான முறையில் அணியாதமைக்காக தாக்கியதில் 16 வயது ஈரானிய யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

டெஹ்ரான் மெட்டிரோவில் ஞாயிற்றுக்கிழமை மோசமாக தாக்கப்பட்ட அர்மிட்டா கரவென்ட் பஜிர் மருத்துவமனையின் தீவிரகிசிச்சை பிரிவில் கோமாநிலையில் உள்ளார் என மனித உரிமைகளிற்கான ஹென்காவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவரது தற்போதைய நிலை ஆபத்தானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அந்த அமைப்பு அந்த யுவதி நான்குநாட்களின் பின்னர் தொடர்ந்தும் கோமாநிலையில் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையை சுற்றி ஈரானிய பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் பாதிக்கப்பட்ட யுவதியின் உறவினர்கள் உட்பட மருத்துவமனைக்கு எவரும் செல்வதற்கு அனுமதி மறுக்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை தங்களின் மகள் கோமா நிலையில் காணப்படும் படத்தை வெளியிட்டதை தொடர்ந்து அந்த யுவதியின் பெற்றோரின் கையடக்க தொலைபேசிகளை ஈரான் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசதொலைக்காட்சி வழங்கிய பேட்டியில் அந்த யுவதி தாக்கப்படவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்துள்ளோம் இது விபத்து என யுவதியின் தந்தை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்தியுள்ளனர் பெற்றோரை தங்களிற்கு சார்பாக பேசுமாறு வற்புறுத்தியுள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அரசஊடகம் வெளியிட்டுள்ள வீடியோகாட்சிகள் புகையிரதத்திற்குள் என்ன நடைபெற்றது என்பதை தெளிவாக காண்பிக்கவில்லை.

அந்த யுவதி புகையிரதத்திற்குள் நுழைவதையும் அதன் பின்னர் அவரது நண்பிகள் அவரை வெளியே தூக்கிச்செல்வதையும் அரச ஊடகம் காண்பித்துள்ளது.

அதில் அவர் ஹிஜாப் அணிந்துள்ளாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

உயர் இரத்த அழுத்தத்தினால் அவர் புகையிரதத்திற்குள்மயங்கி விழுந்ததில் தலை அடிபட்டுள்ளது என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply