வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவினை சாரதி திடீரென திறந்த வேளை, வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தாவடியைச் சேர்ந்த லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார். அவர் மேசன் தொழிலாளி என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது,உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை காவல்துறையினர் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என விபத்து இடம்பெற்ற பகுதியில் கூடியவர்கள் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

பின்னர் அங்கு கூடி இருந்தோரை காவல்துறையினர் அப்புறப்படுத்தி காரினை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

அதேவேளை காரின் சாரதி காவல்துறையினாி்ம் சரணடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply