“ஆமதாபாத்,13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

அதில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் சார்பில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் முதலில் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் டேவிட் மலான் 14 ரன்களில் வெளியேற அவரைத்தொடர்ந்து பேர்ஸ்டோ 33 ரன்களும், ஹேரி புரூக் 25 ரன்களும், மொயின் அலி 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்கள் எடுத்திருந்தநிலையில் கேட்ச் ஆனார்.

அவரைத்தொடர்ந்து லிவிங்ஸ்டன் 20 ரன்களும், ஜோ ரூட் 77 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் 11 ரன்களும், சாம் கரண் 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் அடில் ரஷித் 15 ரன்களும், மார்க் வுட் 13 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹென்றி 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வேயும், வில் யங்கும் களமிறங்கினர். வில் யங், தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தியும் அனைத்தும் பலனளிக்கவில்லை.

இங்கிலாந்து அணிக்கு சாதகமாக ஒரு வாய்ப்பை கூட இருவரும் வழங்கவில்லை. அபாரமாக பேட்டிங் செய்த இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய கான்வே 150 ரன்களை கடந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

கான்வே- ரச்சின் ரவீந்திரா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 273 ரன்கள் குவித்து அசத்தியது. கான்வே 152 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்கு இது மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. இந்த தோல்வியால், இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டும் பெரிய அளவில் சரிந்துள்ளது. “,

.

Share.
Leave A Reply