“கோழிக்கோடு:கணவன்மார்கள் தங்கள் மனைவி பிரிந்து சென்று விட்டால் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதையும், சிலர் மதுகுடித்து வருத்தத்தை போக்கி கொள்வதையும் பார்த்துள்ளோம்.
சில நேரங்களில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கம் தாங்காமல் வாழ்க்கையையே வெறுத்து, தற்கொலை செய்து கொள்பவர்களையும் பார்த்துள்ளோம்.
ஆனால் இன்றைய கணவர் ஒருவர், தனது மனைவி வேறு ஒருவருடன் ஓடி சென்றதை தனது நண்பர்களுக்கு பிரியாணி, மது விருந்து என வைத்து, ஆடல் பாடலுடன் கொண்டாடியுள்ள சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த வடகரையை சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர்.
இவருக்கு திருமணமாகி விட்டது.கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியுள்ளது.வாலிபரின் மனைவிக்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் வாலிபருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் இளம்பெண், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார்.
இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வாலிபர் வீட்டை விட்டு வெளியில் சென்றார்.
பின்னர் மாலையில் வெளியில் வந்த போது வீட்டில் அவரது மனைவி இல்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடி சென்றது தெரியவந்தது.
முதலில் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் வாலிபருக்கு வருத்தம் இருந்துள்ளது. மேலும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளார்.
ஆனால் அதில் இருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என எண்ணிய வாலிபர், இதனை நாம் ஒருவிழாவாக கொண்டாடுவோம் என எண்ணி, தனது நண்பர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு அவரது நண்பர்கள் உள்பட 250 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் மது வாங்கி கொடுத்து, பிரியாணி சமைத்து பரிமாறி உள்ளார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து, பாடலை இசைக்க விட்டு, குத்தாட்டம் போட்டுள்ளனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்தனர்.
மனைவி வீட்டை விட்டு சென்றதை மது விருந்து வைத்து கொண்டாடிய வாலிபர் முதலில் தனது முகத்தை காட்ட சற்று தயங்கி உள்ளார்.
அதன்பின்னர் அவரும் இறங்கி தனது நண்பர்களுடன் பாடலின் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டுள்ளார்.
பின்னர் அந்த காட்சிகளை அவரது நண்பர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே வாலிபர் தினமும் குடித்து விட்டு மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனாலேயே இளம்பெண் வேறு ஒருவரை காதலித்து, அவருடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியானாலும் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதை மது விருந்து வைத்து கொண்டாடிய சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.”,