பாட்னா: பீகாரில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அப்படியே அங்குள்ள ஆற்றில் போலீசார் வீசிச்செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த இரக்கமற்ற செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் முசாபர்பூர் அருகே உள்ள பகுலி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22ல் விபத்து ஒன்று நடைபெற்றது.
டிரக் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். அந்த நபரின் சடலம் அப்படியே சாலையில் கிடந்தது.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பேரில் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், நிகழ்விடத்திற்கு வந்து சாலையில் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தினர்.
வழக்கமாக இது போன்ற விபத்தில் சிக்கிய நபரின் உடல் முதலில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்படும்.
ஆனால், போலீசாரோ, விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த பாலத்தில் இருந்து சடலத்தை ஆற்றில் எடுத்து வீசினர்.
பலர் முன்னிலையில் போலீசார், சடலத்தை ஆற்றில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
बिहार पुलिस की शर्मनाक करतूत, सड़क दुर्घटना में मृत शख्स के शव को उठाकर नहर में फेंका.
📍फकुली, मुजफ्फरपुर pic.twitter.com/fE7CRMYo3R
— Utkarsh Singh (@UtkarshSingh_) October 8, 2023
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. விபத்தில் சிக்கியவரின் உடலை கண்ணியமற்ற முறையில் போலீசார் கையாண்டதற்கு எதிராக கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.
வீடியோ வைரலாகி போலீசாரின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானதையடுத்து, மீண்டும் ஆற்றில் வீசிய சடலத்தை எடுத்த போலீசார் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் போலீசார் சடலத்தை ஆற்றில் வீசியதும் பின்னர் ஆற்றில் இருந்து சடலத்தை எடுத்தது என இரண்டு வீடியோக்களுமே பீகாரில் வேகமாக பரவி வருகிறது.
உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், இந்த சம்பவம் குறித்த முதலில் விளக்கம் அளித்த போலீசார், உயிரிழந்த நபரின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சாலையில் சிக்கி கிடந்த உடலின் சில பாகங்கள் மட்டுமே ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவில், பாலத்தில் இருந்து சடலத்தை போலீசார் ஆற்றில் வீசும் காட்சிகள் தெளிவாக தெரிந்தன.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ” போலீசார் தவறு செய்து இருந்தால் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பீகாரில் போலீசாரின் கண்ணியற்ற முறை செயலுக்கு கடும் கண்டனங்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.