1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர்.

ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது.

1973ல் நடந்த அந்தத் தாக்குதல் அக்டோபர் போர் என அழைக்கப்படுகிறது. அந்தப் போர் தான் அரபு மற்றும் இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நடந்த முதல் போர் அல்லது யோம் கிப்பர் போர் என்று அறியப்படுகிறது.

இந்தச் சண்டையில், சிரியா கோலன் குன்றுகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்கியது. எகிப்து சூயஸ் கால்வாயிலிருந்து இஸ்ரேலைத் தாக்கி விரைவாக இஸ்ரேலுக்குள் நுழையத் தொடங்கியது.

இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியைக் கேட்டபோது, ​​​​சோவியத் யூனியன் எகிப்து மற்றும் சிரியாவின் பக்கம் நின்றது. மேலும் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றது.

பல நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, சினாய் மாகாணத்தில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

சனிக்கிழமையன்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக ‘அல்-அக்ஸா ஸ்டார்ம்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம், ஹமாஸ் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது. மறுபுறம், ஹமாஸ் போராளிகள் பல இடங்களில் இருந்து எல்லையைத் தாண்டி தரை வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

இதுவரை கிடைத்துள்ள செய்திகளின்படி இத்தாக்குதலினால் இஸ்ரேலில் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 100 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

காஸா அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுகள் மழை போல் இஸ்ரேல் மீது பொழிந்தன.
சனிக்கிழமை காலை தொடங்கிய திடீர் தாக்குதல்

சமீப காலங்களில், காசா பகுதியில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது, ஆனால் பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸோ அல்லது காசா நிர்வாகத்தை கவனிக்கும் இஸ்லாமிய குழுக்களோ அல்லது இஸ்ரேலோ அதை அதிகரிக்க விரும்பவில்லை என்று மக்கள் நம்பினர்.

ஆனால் ஹமாஸ் இது தொடர்பாக மிகவும் சிக்கலான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடைமுறையை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. சனிக்கிழமை காலை இதைச் செய்து இஸ்ரேல் மீது ராக்கெட் மழையைப் ஹமாஸ் குழுவினர் பொழிந்தனர்.

இஸ்ரேல் மீது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. சில ராக்கெட்டுகள் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் வரை சென்றடைந்தன. மறுபுறம், பாலத்தீன போராளிகள் தரை மற்றும் கடல் வழியாக தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

பல மணி நேரம் வரை இந்த போராளிகள் இஸ்ரேலிய நகரங்களையும் இராணுவ நிலைகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அவர்கள் இஸ்ரேலில் பலரைக் கொன்றுவிட்டு, பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு காசா சென்றுவிட்டனர்.

சனிக்கிழமையன்று பகல் முழுவதும், ஹமாஸ் தாக்குதலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி, முக்கிய ஊடகங்களில் நேரடியாக செய்திகளாக ஒளிபரப்பப்பட்டன.

காசா எல்லைக்கு அருகே இரவு விருந்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் திடீரென தாக்குதலுக்கு உள்ளானதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், நூற்றுக்கணக்கான மக்கள் திறந்தவெளியில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடுவது தெரிந்தது.

தற்போதைய தாக்குதலின் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடக்கும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதம் தாங்கிய போராளிகளிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், அவரது தோழர்கள் தன்னைத் தேடி வந்ததாகவும் கிலி யோஸ்கோவிச் என்பவர் பிபிசியிடம் கூறினார்.

“அவர்கள் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நகர்ந்து துப்பாக்கிகள் மூலம் சுடுகிறார்கள். இருபுறமும் அவர்கள் குண்டுகளை வீசினர். எல்லா இடங்களிலும் சடலங்கள் கிடந்ததை நான் கண்டேன்” என்று அவர் கூறினார்.

“பரவாயில்லை, நான் சாகப் போகிறேன். மூச்சை வெளியில் விட்டுக் கண்களை மூடிக்கொள்” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். “அவர்கள் எல்லா இடங்களிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தனர்.”

இஸ்ரேலின் ஹயோம் செய்தி நிறுவனம் கிபுட்ஸ் பெர்ரியில் வசிக்கும் எல்லா என்ற பெண்ணிடம் பேசியது. ராக்கெட் தாக்குதல் சைரன் ஒலித்த போது தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்ததாக எல்லா கூறுகிறார்.

அவர் கூறியபோது, “தாக்குதல்தாரிகள் தங்குமிடத்திற்குள் நுழைந்ததாக அவர்கள் எனக்கு ஒரு செய்தியை அனுப்பினார்கள். அவர்களின் படங்களை டெலிகிராமில் பார்த்தேன். அவை காசாவில் எடுக்கப்பட்டவை. எனக்கு இன்னும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.” என்றார்.

காசாவில் ஆரம்ப எதிர்வினை என்ன?

இச்சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை எதிர்பார்த்தது போல் விரைவாக பதிலடி கொடுக்கவில்லை என பல இஸ்ரேலியர்கள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு உதவ ராணுவம் விரைவாக வரவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், ஹமாஸ் தொலைக்காட்சியில் வெளியான காட்சிகளில், பாலத்தீன போராளிகள் இஸ்ரேலிய இராணுவ நிலைகள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றிய காட்சிகளும், அவர்கள் இஸ்ரேலிய வீரர்களைக் கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

காசாவில் இருந்து கிடைத்த முதற்கட்டப் படங்களில், தாக்குதலுக்குப் பிறகு மக்கள் கொண்டாடும் காட்சிகளும், பாலத்தீன போராளிகள் இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை சூறையாடி அதில் சுற்றித் திரியும் காட்சிகளும் இருக்கின்றன.

காசா நகரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, “ஹமாஸ் குழுவினரின் தாக்குதல் நடவடிக்கை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அல்-அக்ஸாவில் இஸ்ரேலின் செயல்களுக்கு பதிலடியாக ஹமாஸ் பழிவாங்கியுள்ளது,” என்று கூறினார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேமை ஒட்டிய அல்-அக்ஸா மசூதியின் வளாகத்தையே இந்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். அங்கு சமீப காலமாக யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அல்-அக்ஸா மசூதி இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. அதேசமயம் யூதர்களும் தங்கள் புனிதமான இடமாகக் கருதுகின்றனர். அவர்கள் அதை ‘டெம்பிள் மவுண்ட்’ என்று அழைக்கிறார்கள்.

 

காசாவில் உள்ள நிர்வாகம் அருகிலுள்ள பகுதியை இஸ்ரேல் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இந்த இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.

அந்த இளைஞர் தொடர்ந்து பேசிய போது, “எங்கள் எதிர்காலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். 2021 இல், இஸ்ரேலில், ஷோரூக் டவர் தாக்கப்பட்டது.

அப்போது எனது குடும்பத்துக்குச் சொந்தமான கடை அழிக்கப்பட்டது. இந்த முறை ஹமாஸின் தாக்குதல் முன்பை விட பெரிய நடவடிக்கை. எனவே இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்க்கலாம். அதுவும் பெரிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்,” என்று கூறினார்.

பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்களின் விளைவாக பாலத்தீனத்தில் மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தோராயமாக 2.3 மில்லியன் பாலத்தீனிய குடிமக்கள் வசிக்கும் காசா பகுதி 2007 இல் ஹமாஸ் அமைப்பால் கைப்பற்றப்பட்டது. இதற்கு ஓராண்டுக்கு முன் இங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு தான் வெற்றி பெற்றது.

அந்த நேரத்தில், இஸ்ரேலும் எகிப்தும் இந்தப் பகுதியின் எல்லையில் முற்றுகையை இறுக்கியிருந்தன. இப்பகுதியில் வேலையில்லமல் திண்டாடியோரின் எண்ணிக்கை விகிதம் 50 சதவீதமாக இருந்தது.

2021 ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்தன. அதன் பிறகு எகிப்து, கத்தார் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய மத்தியஸ்தத்துக்குப் பின் இருதரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறியது.

காஸாவில் வசிக்கும் மக்கள் இஸ்ரேலில் பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்றும் சில கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், அதற்கு பதிலாக ஹமாஸ் எல்லையில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

தீ பற்றி எரியும் இடங்களில் பெரும் அளவில் கரும் புகை வெளியேறிவருகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

கடந்த மாதம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பைப் போல் நூற்றுக்கணக்கான வேலிகளால் ஆன எல்லைக்கு அருகில் பாலத்தீனர்கள் கூடத் தொடங்கிய போது, ​​ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் இருந்து கூடுதல் சலுகைகளை விரும்புவதாகவும், கத்தார் தனது உதவித் தொகையை அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கப் போவதாகவும் நம்பப்பட்டது.

ஆனால் இந்த சிறிய அளவிலான கூட்டங்கள் இப்போது எச்சரிக்கை மணி அடிப்பதைப் போல் தெரிகிறது. சிலர் இது வேலியின் கணக்கெடுப்பு அல்ல, இதனால் எங்கிருந்து வேலியை உடைக்க முடியும் என்பதைக் கண்டறிய முடியும் என்று கூறுகிறார்கள்.

ஒருசிலர் அந்த வேலியைக் கடந்து வருவதற்கான முயற்சிகளை அந்தக் குழுவினர் மேற்கொண்டதாகவும் கருதினர்.

ஹமாஸ் அமைப்பின் சமீபத்திய பிரச்சாரத்தின் மூலம், மீண்டும் ஒரு கிளர்ச்சி நடத்தி, இஸ்ரேலை அழிப்பதே அதன் முக்கிய நோக்கம் என்று அதன் பிம்பத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறது.

சனிக்கிழமையன்று அல்-அக்ஸா ஸ்டார்ம் தாக்குதலின் தொடக்கத்தில், ஹமாஸ் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் பாலத்தீனர்கள் மற்றும் பிற அரபு சமூகங்கள் “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான இந்த போருக்கு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் மேற்குக் கரையோ, கிழக்கு ஜெருசலேமோ அல்லது வேறு எந்தப் பகுதியோ ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலத்தீனர்கள் ஹமாஸின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பார்களா என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

தற்போதைய தாக்குதலில், 1973-ம் ஆண்டைப் போல பல முனைகளில் போரிடக்கூடிய ஒரு போரின் சாத்தியத்தை இஸ்ரேல் காண்கிறது என்பதில் சந்தேகமில்லை.

லெபனானில் இருந்து செயல்படும் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா இயக்கம் இந்தத் தாக்குதலுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் தற்போதைய தாக்குதல் நிலைமை கட்டுப்பாட்டை மீறும்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் சனிக்கிழமையன்று பேரணி நடத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை, ஹமாஸ் குழுவினருடனான சண்டையின் போது ஹிஸ்புல்லா தலையிடக் கூடாது என்று இஸ்ரேல் கூறியது.

ஹிஸ்புல்லா ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல், இராணுவம் மற்றும் சமூக அமைப்பாகும். இது லெபனானில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதுடன் ஹமாஸைப் போலவே ஈரானின் ஆதரவையும் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல் பெரிய அளவில் இராணுவ வீரர்களை அணி திரட்டும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேல் காஸா மீது பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதுடன், அங்கு தரைப்படைத் தாக்குதல் நடவடிக்கையையும் திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் ஹமாஸ் அமைப்பு, தற்போதைய தாக்குதலின் போது ஏராளமான இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. அவர்களை அவர்கள் மனித கேடயங்களாகவோ அல்லது பேரம் பேசவோ பயன்படுத்தலாம். இந்த பிரச்னை அங்குள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “நாங்கள் தற்போது அப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்.

நாங்கள் பரந்த அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறோம். குறிப்பாக காசா பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறோம். அதை முழுமையாக மதிப்பாய்வு செய்வோம்,” எனத்தெரிவித்தார்.

அதற்கு சிறிது காலம் பிடிக்கலாம். ஆனால் ஹமாஸ் அமைப்பு எப்படி இவ்வளவு பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது, ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தது என்று இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புகளும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களால் பெரிய அழிவைத் தடுக்க முடியவில்லை.

Share.
Leave A Reply