ஹமாஸ் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பேரழிவு தாக்குதலை இஸ்ரேல் தனது செப்டம்பர் 11 என தெரிவிக்கின்றது ,இந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பாலஸ்தீன போராளி முகமட் டெய்வ் அதனை அல் அக்சா வெள்ளம் என்கின்றார்.
ஹமாஸ் சனிக்கிழமை காசாவின் மீது ஆயிரக்கணக்கான ரொக்கட்களை ஏவிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலால் அதிகம் தேடப்படும் முகமட் டெய்வ் ஒலிநாடா மூலம் வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்தார்.
ஜெரூசலேத்தின் அல் அக்சா மசூதி மீதான தாக்குதலிற்கான பதிலடியே இது என அவர் குறிப்பிட்டார்.
2014 இல் காசாவில் முகமட் டெய்வின் மனைவியும் கைக்குழந்தையும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவேளை அவர்களை காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியா புதைகுழியில் புதைப்பதற்கு தயாராகும் பொதுமக்கள்
————————
மே 2021 இல் ஜெரூசலேத்தின் அல்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொலை செய்த இந்த தாக்குதலை டெய்வ் திட்டமிட ஆரம்பித்தார் என காசாவில் உள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெரூசலேமின் அக்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் நுழைந்தமை அராபிய -இஸ்லாமிய உலகத்தினை சீற்றமடையச்செய்திருந்தது – இஸ்லாமியர்கள் மூன்றாவது புனிதமான இடம் இந்த மசூதி.
ரம்ழான் மாதத்தில் அந்த மசூதிக்குள் நுழைந்த படையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கியதும் முதியவர்கள் சிறுவர்களை வெளியே இழுத்துவந்ததும் அதனை காண்பிக்கும் வீடியோக்களும் கடந்த வார தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு காரணமாக அமைந்தன என தெரிவித்துள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இவை அனைத்தும் சீற்றத்தையும் ஆத்திரத்தையும் தூண்டின எனவும் குறிப்பிட்டுள்ளன.
ஜெருசலேத்தின் இறைமை மற்றும் மததொடர்பான சர்ச்சைகளின் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக காணப்படும் இந்த மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தமை ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் 11 நாள் மோதலிற்கு காரணமாக அமைந்தது.
இந்த சம்பவங்களிற்கு இரண்டு வருடங்களின் பின்னர் -1973 இஸ்ரேலிய அராபிய மோதலின் பின்னர்- முதல் தடவையாக இஸ்ரேலிற்குள் ஹமாஸ் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் போர்பிரகடனம் செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது – 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டெய்வ் இஸ்ரேலின் பல கொலைமுயற்சிகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
2021 இல் இறுதியாக இஸ்ரேல் அவரை இலக்குவைத்தது.
டெய்வ் ஒருபோதும் மக்கள் முன்னிலையில் தோன்றாதவர் – உரையாற்றாதவர்- இதன் காரணமாக சனிக்கிழமை ஏழாம் திகதி அவர் ஹமாஸ் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டவேளை – ஏதோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற உணர்வு பாலஸ்தீனியர்கள் மத்தியில் காணப்பட்டது.
இன்று அல்அக்சாவின் சீற்றம் வெளிப்படுகின்றது -நமது மக்களின்- தேசத்தின் சீற்றம் வெடிக்கின்றது- எங்கள் முஜாஹிதீன்களிற்கான செய்தி இது -குற்றவாளிகளுக்கு தங்கள் காலம் முடிவடைந்து விட்டது என்பதை புரிய வைப்பதற்கான நாள் இன்றைய நாள் என டெய்வின் பதிவு செய்யப்பட்ட அந்த செய்தி தெரிவித்தது.
இரண்டு மூளைகள் – ஒரு சூத்திரதாரி
டெய்வின் மூன்று படங்களே உள்ளன – முதலாவது 20 வயதில் எடுக்கப்பட்டது- இரண்டாவது முகக்கவசம் அணிந்த படம் – மூன்றாவது அவர் உரையாற்றும்போது காணப்படும் நிழல்.
அவர் எங்கிருக்கின்றார் என்பதும் தெரியாது – காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளிற்குள் அவர் இருக்கவேண்டும்.
இந்த தாக்குதலின் திட்டமிடல்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் டெய்வ் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்தது.
ஹமாசின் இல் ஹசாம் பிரிகேட்டின் தளபதியான டெய்வும் காசாவில் உள்ள ஹமாசின் தளபதி யெஹ்சியா சின்வரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டனர் என ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தாக்குதலை முழுமையாக வடிவமைத்தவர் யார் என்பது வெளிப்படையான விடயம்.
இரண்டு மூளைகள் உள்ளன ஆனால் ஒரு சூத்திரதாரி என தெரிவிக்கும் ஹமாஸிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் ஒருசில ஹமாஸ் தலைவர்களிற்கு மாத்திரம் தெரிந்திருந்தன என குறி;ப்பிட்டுள்ளன.
இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் எவ்வளவு தூரம் இரகசியமாக வைக்கப்பட்டன என்றால் இஸ்ரேலின் முக்கிய எதிரியும் ஹமாசிற்கு நிதி வழங்கும் முக்கிய நாடான ஈரானிற்கு கூட இந்த நடவடிக்கை குறித்த மேலோட்டமான விடயங்களே தெரிந்திருந்தன – தாக்குதல் எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் ஈரானிற்கு கூட தெரியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.