இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதியில் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
இதற்காக 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்து நிற்க வசதியாக துறைமுகத்தின் கரை பகுதி ஆழப்படுத்தப்பட்டது, மேலும் நாகப்பட்டினம் துறைமுகம் நவீனமாக்கப்பட்டது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை துவங்கப்படுகிறது.
இதை மத்திய அமைச்சர்கள் துவங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா வேண்டுமா? கப்பலில் பயணிக்க கட்டணமாக எவ்வளவு? இந்த கப்பல் சேவையால் இரு நாட்டு உறவுகள் மேம்படுமா?
இலங்கை செல்லும் கப்பலில் உள்ள வசதிகள் என்ன?
நாகப்பட்டினம் – இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டது.
இந்த பயணிகள் கப்பலுக்கு “செரியபாணி” என்ற பெயர் சூட்டப்பட்டது. அதில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன. கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் கொண்ட குழுவினர் இயக்கும் இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகள் அமர்ந்தபடி பயணம் செய்யலாம்.
செரியபாணி” என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம்.
கப்பலில் இலங்கை செல்ல கட்டணம் எவ்வளவு?
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் கடல் வழியாக 60 நாட்டிகல் மைல் தூரம் உள்ளது. இதனை பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் கடக்கிறது.
தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.
ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட சுங்கத்துறை அனுமதி வழங்கியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
இந்த கப்பலில் பயணிக்க 6500 ரூபாய் மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 7670 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,
இந்த கப்பலில் பயணம் செய்ய ரூ.7500 டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும்.
கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட், விசா தேவையா?
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்கிறார் துறைமுக அதிகாரி.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாகப்பட்டினம் துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாகப்பட்டினம் துறைமுகம் கடந்த 2 மாதத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரு மினி விமான நிலையம் போல மாறி இருக்கிறது.” என்றார்.
“இனி நாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் கப்பலில் பயணிக்கும் பயணிகள் நேரடியாக வந்து கப்பலில் ஏறிவிட முடியாது.
விமான நிலையம் போன்று பல கட்ட சோதனைகள் பின்பே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்குள்ளாகவே துறைமுகத்திற்குள் பயணிகள் வந்து விட வேண்டும்.” என்றார்.
“துறைமுகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்புச் சோதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து டிக்கெட், விசா பரிசோதனை நடத்தப்படும்”, என்றார் அவர்.
இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: 40 ஆண்டுகள் பின் மீண்டும் தொடக்கம்
படக்குறிப்பு,
இந்த கப்பலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளன
50 கிலோ பொருட்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி
ஒரு பயணி, கப்பல் பயணத்தின் போது தன்னுடன் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். அதில் 20 கிலோவை பயணி தன்னுடன் வைத்துக் கொள்ளும் படியாகவும், 30 கிலோ கப்பலில் வைக்கக்கூடிய பை என இரண்டாகப் பிரித்து வைத்திருக்க வேண்டும்.
இந்தியர் கப்பல் பயணத்தில் இலங்கைக்குச் சென்றால் அவர் இந்தியா திரும்புவதற்கான விமானம் அல்லது கப்பல் பயணச் சீட்டை காண்பித்தால் மட்டுமே இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.
ஆனால், இலங்கையைச் சேர்ந்த பயணிக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படாது.
விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் எப்படி சுங்கத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுமோ அதேபோல் கப்பல் பயணத்தின் போதும் ஆய்விற்குட்படுத்தப்படும்.
கப்பல் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7670 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன் லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
இலங்கையின் இணையத்தளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
இதில் பயணம் செய்ய பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம்.
இரு வழி வணிகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து பயனளிக்கும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.
இரு வழி வணிகத்திற்கு இந்த கப்பல் போக்குவரத்து பயனளிக்கும் என்கிறார் வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்னவேல்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வணிக தொடர்புகளை அதிகரிக்கும். ஏற்கனவே, இந்தக் கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் – இலங்கை இடையே இயக்கப்பட்டது.
ஆனால், இடையில் இந்தச் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தற்போது மீண்டும் மத்திய அரசு துவங்கி இருப்பதை வணிகராக நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்”, என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “இலங்கையில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் எந்தப் பொருட்களுக்கு எடுத்துச் வர அனுமதி வழங்குகிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஆடைகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படலாம்.
அதேபோல், இலங்கையில் இருந்து வாசனை திரவியங்கள், மிளகு, சோம்பு போன்ற உணவுப் பொருள்கள் இந்தியாவிற்கு ( தமிழ்நாட்டிற்கு) கொண்டு வரப்படும், இதன் வழியாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வணிகம் அதிகரிக்கும்”, எனக் கூறினார்.
மேலும், “மதுரையில் இருந்து இலங்கைக்கு சென்று வர விமானத்தில் 15 ஆயிரம் ரூபாய் ஒரு வழி கட்டணம். ஆனால், தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குக் கப்பல் வழியாக சென்றால் வெறும் 7600 ரூபாய் மட்டுமே செலவாகிறது. கப்பலில் சென்று வர 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.
இதனால் தொழில் செய்யும் வணிகர்கள் அடிக்கடி இலங்கை சென்று தங்களது வணிகத்தை விரிவுபடுத்த இந்த கப்பல் சேவை உதவும்” என்றார்.
இராமநாதபுரம் தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே தொலைவே உள்ளதால், சாலை போக்குவரத்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், மதுரையிலிருந்து யாழ்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.