“ஹமாஸ் மனிதர்களே இல்லை”.. கிப்புஸ் கோர தாண்டவத்தில் பிழைத்தவர்கள் கண்ணீர்!
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படைக்குழு இஸ்ரேலுக்கு சொந்தமான பகுதிகளில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தக் குழுவின் முதல் டார்கெட் கிப்புஸ் பீயர் தான்.
கிப்புஸ் பீயரில் மிகவும் சிறிய பகுதி. விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் மக்களே அங்கு அதிகம். கிப்புஸ் பீயர் பகுதிகளில் ஹமாஸ் படைக்குழு தாக்குதல் நடத்திய வீடியோக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
எல்லாமே மன்னிக்க முடியாத குற்றங்கள். சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி, யார் என்ன என எந்தக் கேள்வியும் இல்லாமல், காருக்குள் இருக்கும் பொதுமக்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
ஹமாஸ் தாக்குதலிலிருந்து தப்பித்த உள்ளூர் அரசியல்வாதியான ஹைம் ஜெலின், ஹமாஸ் குழுக்கள் பற்றிக் குறிப்பிடும்போது
” கிப்புஸ் பீயரை அவர்களின் பகுதி இடமாகவே நினைத்து அவர்களின் இஷ்டத்துக்கு பல விஷயங்களை செய்தார்கள். கண்ணில் படுகிறவர்களை எல்லாம் சுட்டார்கள். எந்தக் கேள்வியும் இல்லாமல் மக்களை சிறைப் பிடித்தார்கள். வீடுகளை தீயிட்டு கொளுத்தினார்கள்.
தீப்பற்றி எரியும் வீடுகளிலிருந்து ஜன்னல் வழியாக எங்கள் மக்கள் தப்பிக்க முயன்றார்கள். ஆனால் அவர்களை சுடுவதற்கும் ஜன்னலுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார்கள்” என்கிறார்.
மக்களின் கைகளைக் கட்டி, பணயக் கைதிகளாக வைத்து ஹமாஸ் படை சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின்றன.
இப்படி கொல்வதை வீடியோவாகவும் படம்பிடித்திருக்கிறார்கள். காஸாவின் எல்லையிலிருக்கும் கிப்புஸ் பீயர், ஓஃபாகிம், யாட்டட் போன்ற பகுதிகளுக்கு ஆயுதங்களுடன் சென்றிருக்கிறார்கள்.
அங்கிருக்கும் மக்களை எந்தவித கருணையில்லாமல் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். திறக்கப்படாத வீடுகளுக்குள் புகைக்குண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
மூச்சுத்திணறி வேறு வழியின்றி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே வரும் மக்களை , வேட்டையாடுவது போல் சுட்டு இருக்கிறது ஹமாஸ் குழு என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஹமாஸ் படையினரிடமிருந்து தப்பித்த மெரி கேட் மெஸிகா என்கிற பெண்மணி , இதுபற்றிக் கூறுகையில் ” புகையை சமாளிக்க முடியாமல் ஈரத்துணிகளை எங்கள் முகங்களில் போட்டுக்கொண்டோம்.
நான் இரண்டாம் தளத்துக்கு சென்றுவிட்டேன். என் கணவர் தரைத்தள கதவுகள் தகர்ந்துவிடக்கூடாது என போராடிக்கொண்டிருந்தார். ஹமாஸ் படைக்குழு இல்லை என்பதை அறிந்து பக்கத்து தெருவுக்குள் தப்பியோடினோம்.
எங்கள் கண் முன்னர் எங்கள் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. நாங்கள் எப்படித் தப்பினோம் என இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை” என்கிறார்.
கிப்புஸ் பீயர் பகுதி கிட்டத்தட்ட 17 மணி நேரம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சர்வ வல்லமை பொருந்திய இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் அவர்களின் மக்களை உரிய நேரத்தில் காப்பாற்ற முடியவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.