காஸாவின் தெற்கில் உள்ள எகிப்துடனான எல்லையில் ரஃபா கடவுப்பாதை அருகே பாலத்தீனர்கள் குழுமி நிற்கின்றனர். இஸ்ரேல் அறிவித்துள்ள தரைவழி தாக்குதல் தொடங்கும் முன்பாக ரஃபா வழி வெளியே சென்று விடலாம் என்ற நம்பிக்கையுடன்.

மக்கள் வெளியேறவும், காஸாவுக்கான பிற நாடுகளின் நிவாரணப் பொருட்கள் உள்ளே வரவும் ரஃபா எல்லை சில நேரம் திறக்கப்படும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும் எந்த நேரத்தில் திறக்கப்படும் என்ற விவரம் செய்திகளில் இல்லை.

ஆனால், ரஃபா எல்லை திறக்கப்படவே இல்லை.

 

ரஃபா எல்லை என்பது என்ன?

ரஃபா என்பது காஸா தென்கடைசி பகுதியில் காஸாவிலிருந்து வெளியே செல்வதற்கான பாதையாகும். இது எகிப்தின் சினாய் தீபகற்பத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

காஸாவுக்குள் நுழையவும் வெளியே செல்லவும் இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. ஒன்று காஸாவின் வடக்கில் மக்கள் சென்று வருவதற்கான இஸ்ரேல் எல்லையில் இருக்கும் எரேஸ் எல்லைப்பகுதி. மற்றொன்று காஸாவின் தெற்கில் இஸ்ரேல் எல்லையில் சரக்குகள் போக்குவரத்துக்கான கெரெம் ஷாலோம் பாதையாகும். இவை இரண்டும் தற்போது மூடப்பட்டுள்ளன.

ரஃபா எல்லை

ரஃபா எல்லையை காஸா மக்களின் உயிர்நாடி என்று அழைப்பது ஏன்?

காஸாவை கட்டுப்படுத்தும் பாலத்தீன ஆயுத குழுவான ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,300 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது எரேஸ் எல்லை தாக்கப்பட்டது.

சில நாட்களுக்கு பின்பு, எரேஸ் மற்றும் கெரெம் எல்லைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்தது. எனவே தற்போது காஸாவிலிருந்து வெளியே செல்ல ரஃபா எல்லை மட்டுமே ஒரே பாதையாகும்.

காஸா மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் உள்ளே வரவும் இது தான் ஒரே பாதையாகும்.

கடந்த வாரம் , எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம், காஸாவுக்காக பல்வேறு நாடுகளிலிருந்து வரும் நிவாரணைப் பொருட்கள் கொண்டு வரும் விமானங்களை வடக்கு சினாயில் உள்ள விமான தளத்துக்கு திருப்பிவிடுவதாக தெரிவித்தது. எரிபொருள் மற்றும் நிவாரணப் பொருட்கள் கொண்ட பல லாரிகள் ரஃபா எல்லையில் எகிப்து நாட்டு எல்லையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

எகிப்துடனான காஸாவின் எல்லையான ரஃபா திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர்.

 

ரஃபா எல்லையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ரஃபாவின் நிலை குறித்து முரணான அறிக்கைகள் வெளிவருகின்றன. ஹமாஸ் மற்றும் எகிப்து ரஃபா எல்லை வழியாக யார் செல்ல வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகின்றன.

ஆனால், காஸா மீதான் இஸ்ரேல் வான் வழி தாக்குதலுக்கு பிறகு இந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அக்டோபர் 9 மற்றும் 10 தேதிகளில் இஸ்ரேல் நடத்திய மூன்று தாக்குதல்களில், ரஃபா எல்லையில், எகிப்து மற்றும் பாலத்தீனம் இருபுறத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டதால் எல்லை மூடப்பட்டிருப்பதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ரஃபா எல்லைக்கு அருகே தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலை எகிப்து அக்டோபர் 12ம் தேதி கேட்டுக்கொண்டது. காஸாவில் உள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை அவர்களுக்கு வழங்க இந்த பாதை உதவும் என கூறியது.

ஆனால், எல்லையில் உள்ள எகிப்து ஊழியர்களின் பாதுக்காப்புக்கான உத்தரவாதம் கிடைக்காமல் எல்லை திறக்கப்படாது என எகிப்து திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மேற்கு நாடுகளும் ரஃபா எல்லையை திறந்து, வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டவர்கள் பாதுக்காப்பாக செல்லவும், நிவாரணப் பொருட்கள் கொண்டு வரவும் ரஃபா எல்லையை திறக்க முயன்று வருகிறார்கள்.

இஸ்ரேல், எகிப்து மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள பிற முன்னணி அரசியல் தலைவர்களிடம் பேசி வருவதாக பிரிட்டன் நாட்டு வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர், வெளியே செல்லவுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக ரஃபா எல்லைக்கு அருகே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். “ரஃபா எல்லை திறப்பது சில நேரம் முன்னரே தெரிவிக்கப்படும், எல்லை வெகு நேரம் திறந்திருக்காது” என்றார்.

சிறிது நேரம் போர் நிறுத்தப்பட்டு ரஃபா எல்லை திறக்கப்படும் என தகவல்கள் பரவியதால திங்கட்கிழமை ரஃபா எல்லை அருகே பொதுமக்கள் குழுமியிருந்தனர். ஆனால் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனடியாக மறுத்து விட்டனர்.

ஏன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன?

ஹமாஸ் காஸாவை 2007ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது முதலே, இஸ்ரேல் மற்றும் எகிப்து காஸாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தியே வைத்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என இரு நாடுகளும் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் தாக்குதலுக்கு தனது எதிர்வினையாக காஸாவை முழுமையாக கைப்பற்றுவது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அக்டோபர் 9ம் தேதி உத்தரவிட்டார். “மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் கிடையாது, அனைத்தும் நிறுத்தப்படுகிறது” என்றார் அவர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டவர்கள் செல்வதற்கும் நிவாரணப் பொருட்கள் எடுத்து செல்லவும் ரஃபா எல்லையை மீண்டும் திறக்க எகிப்து தயாராக இருப்பதாக தெரிகிறது.

எனினும், போரிலிருந்து தப்பிக்க அதிக எண்ணிக்கையிலான பாலத்தீன அகதிகள் தன் நாட்டுக்குள் வந்துவிடுவார்கள் என்ற அச்சமும் இருக்கிறது.

காஸாவிலிருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வெளியே சென்றால், சுதந்திர பாலத்தீனம் நோக்கம் மழுங்கடிக்கப்படும் என்றும் பாலத்தீனர்கள் அவர்கள் நிலத்திலேயே இருக்க வேண்டும் என்று எகிப்து அதிபர் அக்டோபர் 12ம் தேதி எச்சரித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வந்துவிடுவார்களோ என்ற அச்சமும் எகிப்துக்கு உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு சினாய் பகுதியில் ஜிஹாத் கிளர்ச்சியை கண்டுள்ளது எகிப்து.

 

ரஃபா எல்லை பொதுவாக எப்படி பயன்படுத்தப்படும்?

ரஃபா எல்லை வழியாக பாலத்தீனர்கள் காஸாவை விட்டு வெளியேறுவது எளிதல்ல. ரஃபா எல்லை கடந்து செல்ல விரும்பும் பாலத்தீனர்கள், இரண்டு முதல் நான்கு வாரங்கள் முன்பாக உள்ளூர் பாலத்தீன அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் விண்ணப்பங்கள் பாலத்தீனம் அல்லது எகிப்து எந்தவித விளக்கமும் இல்லாமல் நிராகரிக்க முடியும்.

ஐ.நா தகவல்கள் படி, ஆகஸ்ட் 2023-ல் எகிப்து அதிகாரிகள் 19,608 பேர் எல்லையை கடக்க அனுமதி அளித்துள்ளனர், 314 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளனர்.

Share.
Leave A Reply