இஸ்ரேலியர்களுக்கு முதல்முறையாக மரண பயத்தைக் காட்டியிருக்கிறது ஹமாஸ் அமைப்பு. இஸ்ரேலின் 75 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு இரத்தக் களரியை அந்த நாடு சந்தித்ததில்லை.
எப்பொதெல்லாம் பலஸ்தீனர்கள் கிளர்ந்தெழுந்து போராடினாலும், அவர்களின் மீது இஸ்ரேல் மிகையான படைபலத்தைப் பயன்படுத்தி, அவர்களுக்கு பேரழிவையும், பேரச்சத்தையும் கொடுத்து வந்தது.
இதுதான், இஸ்ரேல்- – பலஸ்தீன மோதல் கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வந்த நிகழ்வு.
சுற்றிவர அரபு நாடுகள் மத்தியில் இஸ்ரேல் ஒரு தனித்தேசமாக இதுவரை நிலைத்து நின்றது என்றால், அதற்கு நான்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.
ஒன்று,- தெளிவாக திட்டமிடப்பட்ட யூதக் குடியேற்றங்கள். இரண்டு-, அதன் படைபலமும், மிகச் சிறந்த இராணுவக் கட்டமைப்பும்.
மூன்று-, எதிரிகளுக்கு அழிவுகளைக் கொடுத்து, அவர்களை அச்ச நிலையில் வைத்திருத்தல். நான்கு,- அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவு.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஆதரவு இருந்தாலும், ஜோர்தான், எகிப்து, சிரியா, லெபனான், பலஸ்தீனம் என ஐந்து அரபு நாடுகளுக்கு நடுவே, 10 மில்லியனை விடவும் குறைந்த யூதர்களை கொண்ட இஸ்ரேல், 75 ஆண்டுகளாக தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம், அதன் படைபலமும், இராணுவ உத்திகளும் தான்.
இஸ்ரேல் மீது அரபுலக நாடுகள் தங்களின் பெரும் படைபலத்தைக் கொண்டு நடத்திய போர்கள், எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின.
கடைசியில் தங்களின் நிலப்பரப்புகளையும் இஸ்ரேலிடம் கொடுத்து விட்டு ஓடும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
குறைந்த படைபலத்தைக் கொண்டிருந்தாலும், இஸ்ரேலியப் படைகளின் போர்த்தந்திரங்களும், நவீன போராயுதங்களும், அவர்களின் மனோதிடமும் தான், கடந்த 75 ஆண்டுகளாக இஸ்ரேலியர்களை இவ்வாறானதொரு மரண பயம் இல்லாமல் வாழ வைத்திருந்தது.
எகிப்து, லெபனான், சிரியா, ஜோர்தான் போன்ற நாடுகளிடம் இருந்தும், பலஸ்தீனர்களிடம் இருந்தும் கைப்பற்றிய நிலப்பரப்புகளில் யூதர்கள் நம்பிக்கையுடன் குடியேறி நிலைகொண்டதற்கு முக்கியமான காரணம் இஸ்ரேலின் நுட்பமான இராணுவ, குடியேற்றவாத கொள்கை தான்.
பலஸ்தீனர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் யூத குடியேற்றங்கள் நிறுவப்பட்டு, பலஸ்தீனர்களுக்கு எதிராக – தனது நாட்டு மக்களைக் கொண்டு ஒரு கவசத்தை உருவாக்கியிருந்தது இஸ்ரேல். முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை எல்லைகளை உள்ளடக்கி வெலிஓயா சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் இதே பாணியில் தான்.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா எல்லையில் இருந்து மிக குறுகிய தூரத்துக்குள் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பு உணர்வுடன் இருந்திருக்கிறார்கள்.
அதனால் தான் காஸா எல்லையில் இருந்து வெறும் 2 கிலோ மீற்றர் தொலைவுக்குள் உள்ள கிப்புட்ஸ் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாரிய இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர்.
காஸா எல்லைக்குள் இருந்து பரா கிளைடர்கள் மூலம் வான் வழியாகவும், தரைவழியாகவும் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த இடத்தில் நடத்திய தாக்குதல்களில் மட்டும், 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த நகரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கும் அதிகமானோரை பணயக் கைதிகளாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அங்கிருந்த வீடுகளை எரித்த போது, நிலவறைகளுக்குள் தஞ்சமடைந்திருந்த 100 இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான ரொக்கட்டுகளை ஏவியது மாத்திரமல்ல, இஸ்ரேலிய எல்லைகளை ஊடறுத்தும், நகரங்களுக்குள் நுழைந்தும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
மிக நன்றாக திட்டமிட்டு, தரை, கடல், வான் வழியாக- ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் இது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில், முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட உத்திகள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்கள் முன்னெடுத்த பல கொமாண்டோ பாணியிலான தாக்குதல் உத்திகள் போன்றன- இஸ்ரேல் மீதான தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலியர்களின் விடுமுறை தினத்தில், அவர்கள் பெருமளவில் ஒன்று கூடுகின்ற நாளைத் தெரிவு செய்து நடத்தப்பட்டிக்கிறது இந்த தாக்குதல்.
ஹமாஸின் இந்த தாக்குதல் மிகவும் வெற்றிகரமானதொன்று. தெரிவு செய்யப்பட்ட இலக்குகளும், நேரமும் பயன்படுத்திய உத்திகளும் ஒட்டுமொத்த இஸ்ரேலையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.
யூதர்கள் மத்தியிலும், உலகம் முழுவதிலும் அசைக்க முடியாத சக்தி என இஸ்ரேல் கட்டியெழுப்பியிருந்த விம்பத்தை ஒரே நாளில் நொறுக்கிப் போட்டிருக்கிறது இந்த தாக்குதல்.
இஸ்ரேலுக்கு இது பலத்த தோல்வியை கொடுத்திருக்கிறது. பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
இவ்வாறானதொரு தாக்குதலுக்கு ஹமாஸ் தயாராகி வருகிறது என்ற ஒரு சிறிய துரும்பளவு புலனாய்வுத் தகவலைக் கூட இஸ்ரேலிய புலனாய்வு அமைப்புகளால் பெற முடியவில்லை என்பது தான் ஆச்சரியம்.
எத்தகைய நவீன தொழில்நுட்ப புலனாய்வு, கண்காணிப்பு வசதிகளை இஸ்ரேல் கொண்டிருந்தாலும், அவையெல்லாவற்றின் கண்களிலும் மண்ணைத் தூவிக் கொண்டு- ஒரு திடீர்ப் பெருந் தாக்குதலை நடத்த முடியும் என்ற இராணுவ பாடத்தை ஹமாஸ் கற்றுக் கொடுத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய ஒன்றரை தசாப்தங்களில் மிக நவீனமான தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.
அவற்றை கையாண்ட இஸ்ரேலை ஏய்த்து விட்டு இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பது தான் கவனிக்கப்பட வேண்டியது.
புலனாய்வுத் தவறுதான் இதற்குப் பிரதான காரணம் என்று கூறியிருக்கிறார் இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவின் முன்னாள் தலைவரான டன்னி யாடொம் (Danny Yatom).
“சனிக்கிழமை இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் அடியோடு சரிந்து விட்டன. ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது எல்லாமே தவறாகி விட்டது. யாருக்குமே புலனாய்வுத் தகவல் கிடைத்திருக்கவில்லை.” என்று அவர் கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் இஸ்ரேலியர்கள், தங்களின் மீது தங்களின் நாட்டின் மீது, தங்களின் படையினர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டனர்.
பலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, குடியேற்றங்களின் மூலம், பாதுகாப்பு வேலியை அமைத்த இஸ்ரேலிய தந்திரோபாயம் இப்போது தோல்வி கண்டிருக்கிறது.
காஸா எல்லைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளான நகரங்களில் இருந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வாறானதொரு தாக்குதலை சந்திக்கவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அதுதான் யூதர்கள் மத்தியில் இஸ்ரேல் கட்டியெழுப்பியிருந்த நம்பிக்கை. முன்னர் ஹமாஸ் ஒரு ரொக்கட்டை ஏவினால் பலநூறு குண்டுகளை ஏவிப் பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்.
இஸ்ரேலியர் ஒருவர் காயப்பட்டால் பல பலஸ்தீனர்களின் உயிர்கள் பறிக்கப்படும். இது தான் இதுவரை இருந்தது. இப்போது ஹமாஸ் கொத்துக் கொத்தாக யூதர்களை வேட்டையாடி பழியைத் தீர்த்திருக்கிறது.
பொதுமக்களை மாத்திரமல்ல, படைத் தளபதிகளைக் கூட கொன்றிருக்கிறது. கேர்ணல் ஒருவர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளையும் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பில் இருந்த ஓட்டைகளை சரியாக கவனித்து திட்டமிட்டப்பட்டிருக்கிறது இந்த தாக்குதல். இது யூத குடியேற்றவாத கொள்கைக்கு கிடைத்த பேரிடி.
யூதக் குடியேற்றங்களின் மூலம், பலஸ்தீனர்களின் நில உரிமைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்ற ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற பெருந்தோல்வி.
காஸா எல்லைக்கு அருகே இனி குடியேறுவதற்கு ஒவ்வொரு யூதரும் பயப்படுவார்கள்.
பலஸ்தீனர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக பொங்கிக் கொண்டிருந்த வெஞ்சினம் தான் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
அவர்களின் நிலத்துக்கான போராட்டம் ஓயவில்லை, ஓயாது என்ற செய்தியை தெளிவாக கூறியிருக்கிறது.
தங்களின் நிலங்களை ஒப்படைத்து. தங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல், யூதர்களால் நிம்மதியாக தங்களின் நாட்டில் இருக்க முடியாது என்ற உண்மையை அவர்கள் உறைக்க கூறியிருக்கிறார்கள். இந்த உண்மையும், பாடமும் இலங்கைக்கு முக்கியமானது.
இலங்கை அரசாங்கமும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், பௌத்த மயமாக்கலின் மூலமும், தமிழரின் நிலங்களை அபகரித்து விடலாம் எனக் கணக்குப் போடுகிறது. இது ஆபத்தானது. இன்றில்லா விட்டாலும் என்றோ ஒருநாள், இதேபோல தமிழர்களும் கொதித்தெழும் நிலை வரலாம்.
பலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் எவ்வாறு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததோ- அதேபோலத் தான், இங்கும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அடித்தளம் போடுகிறது. ஆனால், தமிழர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் தான் சிங்களவர்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும்.
ஹமாஸின் தாக்குதலை, வெறுமனே பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற கோணங்களில் நோக்குவதை விட்டு- யதார்த்தபூர்வமாக இதனை பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இஸ்ரேலியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பாடத்தை, இலங்கை தனக்கானதாகவும் எடுத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமானது.
-சுபத்திரா-